ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட 100 பேர் கண்டுபிடிப்பு


ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட 100 பேர் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 5 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-11-06T00:15:20+05:30)

கோவையில் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட 100 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிபுணர்கள் மூலம் உளவியல் ஆலோசனை வழங்க உள்ளதாக மாநகர போலீசார் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்


கோவையில் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட 100 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிபுணர்கள் மூலம் உளவியல் ஆலோசனை வழங்க உள்ளதாக மாநகர போலீசார் தெரிவித்தனர்.

கார் வெடிப்பு

கோவை கோட்டை மேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி நடைபெற்ற கார் வெடிப்பில் ஜமேஷா முபின் இறந்தார். அவரது வீட்டை சோதனை செய்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு வெடிமருந்துகள், ஜிகாத் குறிப்புகள், ஐ.எஸ். வாசகங்கள் உள்பட 100-ற்கும் மேற்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபின் தனது செல்போனில் ஐ.எஸ். அமைப்பின் செயல்பாடுகள் குறித்த வீடியோக்கள் வைத்து உள்ளார். இதேபோல கைது செய்யப்பட்ட 6 பேரும் ஐ.எஸ். இயக்கத்தின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

வீடியோக்கள் பறிமுதல்

இந்த நிலையில் கோவையில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். இதில் ஒருவரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பென் டிரைவ்வில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். இயக்க வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அதில் சில கொடூர காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து கோவையில் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட இளைஞர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் உளவுத்துறையினர் ஈடுபட்டனர்.

உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் கோவை மாநகரில் 70 பேர் முதல் 100 பேர் வரை ஐ.எஸ். இயக்க செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு உள்ளது தெரியவந்தது. தற்போது போலீசார் அவர்களை அடையாளம் கண்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் உளவியல் ஆலோசனை வழங்க திட்டமிட்டு உள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

உளவியல் ஆலோசனை

கேரள சிறையில் உள்ள அசாருதீன், கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபின் உள்ளிட்டவர்கள் ஐ.எஸ். சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர்கள். இதில் ஜமேஷா முபின் வீட்டில் இருந்து ஐ.எஸ். இயக்க கொடியில் உள்ள வாசகங்கள் அடங்கிய குறிப்புகள், சின்னங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. எனவே இந்த ஐ.எஸ். சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு இளைஞர்கள் தவறான வழியில் செல்வதை தடுக்க நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தேவையான உளவியல் ஆலோசனை வழங்க உள்ளோம்.

மேலும் உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் அவர்களுக்கு தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது, ஐ.எஸ். இயக்கத்தின் மோசனமான செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூறி, நல்ல கருத்துகளை போதித்து அவர்களை நல்ல குடிமகனாக மாற்றும் திட்டம் செயல்படுத்த உள்ளோம். இதற்காக அனுபவம் வாய்ந்த உளவியல் நிபுணர்களை தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story