கல்வி தொலைக்காட்சி கைகொடுக்கிறதா? ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து


கல்வி தொலைக்காட்சி கைகொடுக்கிறதா?  ஆசிரியர்கள், மாணவர்கள் கருத்து
x
தினத்தந்தி 11 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா காலத்தில் கைகொடுத்த கல்வி தொலைக்காட்சியின் தற்போதைய செயல்பாடுகள் பயன் தருவதாய் உள்ளதா? என்பது குறித்து ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

கடலூர்

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையால் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக தொடங்கப்பட்டது தான் கல்வி தொலைக்காட்சி. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி, இந்த கல்வி தொலைக்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது. முதலில் சில குறிப்பிட்ட பாடங்கள் மாணவ-மாணவிகளுக்கு வீடியோவாக பதிவிடப்பட்டு, ஒளிபரப்பப்பட்டு வந்தன. அதனைத்தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நேரத்தில், கல்வி தொலைக்காட்சி அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேருதவியாக இருந்தது.

அந்த காலகட்டத்தில் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் ஆன்லைன் வாயிலாக தங்களது கற்றலை வலுப்படுத்தி வந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இருந்த ஒரே வாய்ப்பு கல்வி தொலைக்காட்சி தான். அதன் வாயிலாகவும், கல்வித்துறையின் சீரிய முயற்சியாலும் மாணவர்களின் கற்றல் ஓரளவுக்கு தாக்குப்பிடித்தது.

செயல்பாடுகளில் மாற்றம்

ஆரம்பத்தில் 2 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பாடங்கள் ஆசிரியர்களை கொண்டு வீடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஒளிபரப்பப்பட்டன. சனிக்கிழமைகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பயிற்சி வினாக்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் இசை, மனநல ஆலோசனை உள்பட துணைக்கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்பட்டன. இதன் மூலம் பள்ளி மாணவர்கள் பயன் அடைந்ததையும் பார்க்க முடிந்தது.

தொலைக்காட்சி வாயிலாக மட்டுமல்ல, அதில் ஒளிபரப்பாகும் வீடியோக்கள் கல்வித் தொலைக்காட்சி யூ-டியூப் மூலமாக அதற்கு மறுநாள் பார்க்கும் வகையில் பதிவேற்றமும் செய்யப்பட்டன. கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு இருந்த காலம் வரை கல்வி தொலைக்காட்சி மூலம் இதுபோன்ற நிகழ்வுகள் மாணவ-மாணவிகளுக்கு தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன. அதன்பின்னர், நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டதும், கல்வி தொலைக்காட்சியின் செயல்பாடுகளில் சற்று மாற்றம் கொண்டு வரப்பட்டது.

பயனுள்ளதாக உள்ளதா?

அதன்படி, தற்போது கல்வி தொலைக்காட்சியில் கொரோனா காலத்தில் வெளியிடப்பட்டது போன்ற பாடங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியிடுவது குறைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு மாற்றாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தொடங்கி வைத்த எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டம் தொடர்பான வீடியோக்களும், காலை மற்றும் மாலையில் வேலைவாய்ப்பு தொடர்பான வீடியோக்களும், இதை தவிர மற்ற நேரங்களில் பாடங்கள் குறித்த வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இதுதான் கல்வி தொலைக்காட்சியின் தற்போதைய செயல்பாடுகளாக இருக்கிறது. இருப்பினும், கல்வி தொலைக்காட்சி கொண்டு வந்ததன் நோக்கம் நிறைவேறும் வகையில் அதன் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இருந்தாலும் கல்வி தொலைக்காட்சியின் தற்போதைய செயல்பாடுகள் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா? அதை மேலும் எவ்வாறு மேம்படுத்துவது? என்பது குறித்து ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவ-மாணவிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

அச்சம் போக்கிய மாயத்திரை

இதுகுறித்து மேலவன்னியூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எழிலரசி கூறுகையில், கல்விப் பணிக்காய் காலத்தின் கட்டாயத்தால் பள்ளிக் கல்வித்துறையில் நிகழ்ந்த முன்னோடி மாற்றம் தான் கல்வி தொலைக்காட்சி. கொரோனாவின் கோரப்பிடியால் கற்றல் கற்பித்தல் பணி கனவாகிப் போக, கல்வி என்பதே கேள்விக் குறியான காலகட்டத்தில், மாணவர்களுக்கு கல்வி புகட்டிய கற்பக தரு. வசதி படைத்தோருக்கு கிடைத்த வாட்ஸ்-அப் வசதிகள் வறுமையில் உள்ளோருக்கு வாய்க்காத போது, வாசிக்க கிடைத்த வரப்பிரசாதம். அனைத்து நிலை அரசுப்பள்ளி மாணவர்களும், அவரவர் வீட்டில் இருந்து அன்றாடம் பாடம் பயில, அற்புதமாய் அறிவு புகட்டிய அமுதசுரபி போன்றது. ஊரடங்கில் வீட்டுக்குள்ளேயே முடங்கினாலும் வெவ்வேறு ஆசிரியர்கள் ஒவ்வொரு வேளையும் கற்பித்தல் பணிபுரிந்த வேள்வித் தளம். தொல்லை காட்சியாய் இருந்த தகவல் தொடர்பு சாதனம் தினந்தோறும் தொன்மை தொண்டாற்றிய தருணம் அது. விட்டில் பூச்சிகளாய் வளர் இளம் பருவத்தினர் வலை தளங்களில் தொலைந்து போகாமல் வண்ணத்து பூச்சிகளாய் வீட்டு வகுப்பறையில் வட்டமிடச் செய்தது சின்னத்திரை.

மனித வளம் மேம்பட, மாணவர், மக்கள் மனம் மகிழ்ந்திட மதிப்பெண் அச்சம் போக்கிய மாயத்திரை. 'ஏற்றம் தரும் கல்வி' எல்லோருக்கும் ஏற்புடையதாய் கிடைத்தது. 'அனைவருக்கும் கல்வி' அவரவர் வீட்டில் இருந்தே அரசின் அக்கறையான அணுகுமுறையால் அளிக்கப்பட்டது. வழக்கமான வகுப்பறை காலம் வந்துவிட்டாலும், விடுமுறை தினங்களில் மீண்டும் மாணவர்களுக்கு வேண்டிய வினா -விடைத்தாள் தொகுப்பு, விளையாட்டு, உயர்கல்வி விவரங்கள், நல்லொழுக்க கல்வி, மனநல ஆலோசனைகள் தொடர்ந்து ஒளிபரப்பு செய்ய வேண்டும்.

பயன்படுத்திக் கொள்ளாத மாணவர்கள்

சிதம்பரம் ஆசிரியர் முத்துக்குமரன்: கொரோனா பரவலால் பள்ளிகள் திறக்கப்படாத காலங்களில் கல்வித்தொலைக்காட்சி மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்பட்டன. திறமையான ஆசிரியர்களைக் கொண்டு வீடியோ பாடங்கள் பதிவு செய்யப்பட்டு அட்டவணைப்படி ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் மாணவர்கள் அதனை சரிவர பயன்படுத்திக்கொள்ளவில்லை. பள்ளிகள் திறக்கப் படாததாலும், இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியாலும் ஒரு சில மாணவர்கள் குற்ற செயல்களில் ஈடுபடும் சூழல் உருவாகியது. தற்போது நேரடி வகுப்புகள் நடைபெறுவதால் ஆன்லைன் வகுப்புகளுக்கான தேவை ஏற்படவில்லை. கல்வித் தொலைக்காட்சியை பார்த்து பயன்பெற மாணவர்களுக்கு போதிய நேரமும் இல்லை.

கற்பித்தலை எளிமையாக்கும் கருவி

இருப்பு அரசு பள்ளி ஆசிரியை ஷாகினிஷா : கொரோனா காலத்தில் மாணவர்கள் இடையேயான கற்றல் இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கு கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெரும் பங்காற்றியது. கற்பித்தலை எளிமையாக்கும் கருவியாக கல்வி தொலைக்காட்சி உள்ளது. தற்போது நேரடி வகுப்புகள் தொடங்கினாலும், சமூக வலைத்தளங்களில் கல்வி தொலைக்காட்சி தொடர்பான வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளதால், இன்றளவும் மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.

மாணவர்களுக்கு வரப்பிரசாதம்

மாணவி நிலானி: கற்றலை எளிமையாக்கும் விதமாக கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அமைந்திருந்தது. கொரோனா காலத்தில் எங்களுக்கு கற்றலை தொய்வில்லாமல் கற்பதற்கு ஒரு நல்ல வழிகாட்டியாக விளங்கியது. இதன் மூலம் அனைத்து தரப்பு மாணவர்களும், 2 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கினாலும், கல்வி பயில்வதில் எவ்வித குறைபாடும் ஏற்படவில்லை. என்னை போன்ற ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி ஒரு வரப்பிரசாதமாகும்.

யூ-டியூப் மூலம் பயன்

பெண்ணாடம் ஆசிரியை கீதா:- 'கொரோனா வைரஸ் பரவிய நேரத்தில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறவில்லை. அந்த சூழ்நிலையில் கல்வித் தொலைக்காட்சி குக்கிராமங்கள் வரை சென்று ஆற்றிய சேவையால் ஏராளமான மாணவர்கள் பயன் அடைந்தனர். தற்போது பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறுவதால், கல்வி தொலைக்காட்சியின் தேவை குறைந்திருந்தாலும், அதில் இடம்பெற்ற வீடியோக்களை யூ-டியூப் மூலமாக அவ்வப்போது பார்த்து மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

நேரம் ஒதுக்குவது கஷ்டம்

கடலூரை சேர்ந்த மாணவியின் தாய் நிவேதா கூறுகையில், கொரோனா காலத்தில் பள்ளி, கல்லூரி அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி விடுமோ என பெற்றோர் அனைவரும் மிகுந்த கவலையில் இருந்தனர். அந்த சமயத்தில் தான் கல்வி தொலைக்காட்சி வாயிலாக குடிசை வீடுகளில் இருக்கும் மாணவர்கள் கூட கல்வி கற்க பேருதவியாக இருந்தது. ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பலர் ஆண்ட்ராய்டு செல்போன் இல்லாமல் ஆன்லைன் வழி கல்வியை கற்க முடியாத நிலை ஏற்பட்ட போது, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட கல்வி தொலைக்காட்சியே பலரது படிப்பிற்கும் உதவிகரமாக இருந்தது என்றார்.

மேலும் சில ஆசிரியர்கள், மாணவர்கள் கூறுகையில், 'பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியதில் இருந்து கல்வி தொலைக்காட்சியை பார்ப்பது குறைந்துவிட்டது. பள்ளியில் ஆசிரியர் நடத்துவதையும், வீட்டுக்கு சென்றதும் வீட்டு பாடங்களை செய்து முடிப்பதற்குமே நேரம் சரியாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது கல்வி தொலைக்காட்சியை பார்க்க நேரம் ஒதுக்குவது கஷ்டம்தான்' என்றனர்.

எதிர்பார்த்த அளவு இல்லை

சில தனியார் பள்ளி முதல்வர்களை சந்தித்து இதுபற்றி கேட்டபோது, 'அரசின் இந்த திட்டம் சிறப்பானதுதான். ஆனால் அதனை செயல்படுத்தும் முறைதான் எதிர்பார்த்த அளவு இல்லை. உதாரணமாக ஆங்கிலத்தில் ஒரு பாடத்தை எடுக்கும் ஆசிரியர் அதில் உள்ள முன்கருத்துகளை விளக்கமாக கூறாமல், நேரடியாக பாடப்புத்தகத்தின் பக்கத்தை கூறி பாடம் நடத்துகிறார். இதனால் மாணவர்கள் அதில் அக்கறை காட்டுவது கிடையாது. மேலும் ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட வீடியோக்களே மீண்டும் மீண்டும் வருகின்றன. இதுமட்டுமல்லாமல், மாணவர்கள் பயன்பெறும் வகையில் அதற்கான கட்டமைப்பு வசதிகளும் செய்து தரப்படவில்லை. எனவே இதை முறைப்படுத்தி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்தலாம்' என்று கூறினர்.

இந்த நிலையில் இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கல்வித் தொலைக்காட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகளை விரிவுப்படுத்தும் முயற்சியில் கல்வித்துறை தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது என்றும், இதுதொடர்பான அறிவிப்பை பள்ளிக்கல்வி துறை விரைவில் வெளியிட உள்ளது' என்றும் தெரிவித்தனர்.


Next Story