தூத்துக்குடி கடலில் மீனவர் படகு மீது மோதியது குஜராத்தை சேர்ந்த கப்பலா?:போலீசார் விசாரணை
தூத்துக்குடி கடலில் மீனவர் படகு மீது மோதியது குஜராத்தை சேர்ந்த கப்பலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி கடலில் படகு மீது கப்பல் மோதியதில் மீனவர் பலியானார். படகின் மீது மோதியது குஜராத்தைச் சேர்ந்த கப்பலா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலில் மீனவர் பலி
தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த சேக் முகமது (வயது 43), ஜெயபால் (45), அண்டோ (45) ஆகியோர் கடந்த 17-ந் தேதி திரேஸ்புரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். 18-ந் தேதி காயல்பட்டினம் கொம்புதுறையில் இருந்து சுமார் 35 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது படகு விபத்தில் சிக்கி மூழ்கியது. இதில் ஜெயபால், அண்டோ ஆகிய 2 பேரையும் கொம்புத்துறை மீனவர்கள் மீட்டனர். ஆனால் சேக் முகமதுவை காணவில்லை. அவர் கடலில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
படகு மீது மோதியது குஜராத் கப்பல்?
இதுகுறித்து தூத்துக்குடி தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த நேரத்தில் அந்த பகுதியில் சென்ற கப்பல்கள் குறித்த விவரங்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சேகரித்து வருகின்றனர். அதன்படி சம்பவ நேரத்தில் குஜராத்தைச் சேர்ந்த ஒரு சரக்கு பெட்டக கப்பல், தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சென்று உள்ளது. இதனால், அந்த கப்பலானது மீனவர்களின் படகு மீது மோதி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் அந்த கப்பல் மாலுமிகளிடம் விசாரணை நடத்துவதற்கு கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.