ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமா?
பணமா, குணமா என்றால் இன்றைய நாகரிக உலகில் பணத்துக்கே முதலிடம் பெரும்பாலும் கொடுக்கப்படுகிறது. பணத்தை வைத்து தான் ஒருவருடைய அந்தஸ்து நிர்ணயிக்கப்படுகிறது. எந்த பக்கம் திரும்பினாலும் பணம்... பணம்... பணம்... இந்த வார்த்தை ஒன்றுதான் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட பணத்தின் மதிப்பை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
காகித பணம்
இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1882-ம் ஆண்டு முதல் முறையாக காகித பணம் புழக்கத்துக்கு கொண்டுவரப்பட்டது. ரூ.2, ரூ.5, ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என ரூபாய் நோட்டுகள் முதலில் புழக்கத்தில் விடப்பட்டன. இதில் ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் நோட்டுகள் நாளடைவில் கைவிடப்பட்டன.
அதன்பின்னர், 1969-ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 100-வது பிறந்தநாளையொட்டி, ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நோட்டுகள் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரூ.20, ரூ.50, ரூ.100 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. 1987-ம் ஆண்டில் 500 ரூபாய் நோட்டையும், 2000-ம் ஆண்டில் ரூ.1,000 நோட்டையும் புழக்கத்துக்கு விட்டனர். 2016-ம் ஆண்டில் ரூ.2,000 நோட்டும் வந்தது. இப்போது 1,000 ரூபாய் நோட்டு மட்டும் புழக்கத்தில் இல்லை.
ரூபாய் நோட்டுகள்
இப்படியாக ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த நிலையில், அதில் பொறிக்கப்பட்ட படங்களின் வரலாறும் அனைவராலும் பேசப்படக்கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது. சுதந்திரத்துக்கு பின், வெளியான ரூபாய் நோட்டில் நான்கு முக சிங்கங்கள் உருவம் பொறிக்கப்பட்டு வெளியானது. அதனைத்தொடர்ந்து புலி, மான், தஞ்சை பெரிய கோவில், மும்பை கேட்வே ஆப் இந்தியா, நாடாளுமன்றம், பசுமைப்புரட்சி- உழவுத்தொழில்-விவசாய வேலைகள்-அணைக்கட்டுகள், இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா, ஹிராகுட் அணை, டிராக்டர் படங்கள் ரூபாய் நோட்டுகளில் உருவங்களாக பொறிக்கப்பட்டு வெளிவந்தன.
இன்று நாம் பயன்படுத்தக்கூடிய ரூபாய் நோட்டுகளில் முகப்பு பக்கத்தில் காந்தியின் உருவப்படம் இருக்கிறது. இதன் வரலாறை பார்த்தோமானால், 1969-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நோட்டுகளில்தான் காந்தியின் உருவப்படம் முதன் முதலாக பொறிக்கப்பட்டன. பின்னர் நாளடைவில் மற்ற ரூபாய் நோட்டுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, 1996-ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் அனைத்து ரூபாய் நோட்டுகளின் முகப்பில் பெரிய அளவிலான காந்தியின் உருவப்படமே பொறிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், நோட்டுகளின் மறுபக்கத்தில் இந்தியாவின் நினைவு சின்னங்கள், பாரம்பரிய இடங்களின் படங்களும் அப்போது முதல் இடம்பெற்று வருகின்றன.
லட்சுமி, விநாயகர் உருவப்படம்
இந்த சூழ்நிலையில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், 'புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் மகாத்மா காந்தி படத்தையும், மறுபக்கம் லட்சுமி, விநாயகர் உருவங்களையும் அச்சிட வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இவருடைய இந்த கோரிக்கை, அரசியல் ரீதியில் பல்வேறு விவாதங்களை கிளப்பி இருக்கிறது. இவருக்கு போட்டியாக பிற அரசியல் கட்சிகளும் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்துவருகின்றன. அதில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, ரூபாய் நோட்டில் அம்பேத்கர் படத்தை அச்சிடலாமே? என்று கூறியிருக்கிறார். மராட்டிய மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. இந்திய ரூபாய் நோட்டில் சத்ரபதி சிவாஜி உருவப்படத்தை வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில் பிரதமர் மோடிக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் இதுகுறித்து கடிதமும் அனுப்பியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த முயற்சி, சரியானதா? தற்போதைக்கு அவசியமானதா? இதனால் மாற்றங்கள் ஏற்படுமா? என்பது குறித்து மக்களின் கருத்துகள் வருமாறு:-
மக்களை குழப்ப வேண்டாம்
பெரம்பலூர் அரசு கலை-அறிவியல் கல்லூரியின் கவுரவ விரிவுரையாளர் தமிழ்க்குமரன்:- அரவிந்த் கெஜ்ரிவாலின் கோரிக்கை நியாயமற்றது. அவர் தேர்தலில் பெரும்பான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக இந்த கோரிக்கையை கூறியுள்ளார். ரூபாய் நோட்டுகளில் சாமி படங்களை அச்சிட்டால் மத பிரச்சினை தான் ஏற்படுத்தும். சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. அதை பற்றி அவர் யோசிக்கலாம். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. மதசார்பற்ற நாட்டில் நாம் வாழுகிறோம். இந்த விஷயத்தில் மக்களை குழப்ப வேண்டாம். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் காந்தியின் உருவப்படமே ரூபாய் நோட்டுகளில் இருந்தால் போதும்.
டிஜிட்டல் உலகம்
முருக்கன்குடியை சேர்ந்த சின்ன பொண்ணு பெரியசாமி:- ரூபாய் நோட்டு ஒரு மதத்தை சார்ந்தது அல்ல. அதில் பொதுவான காந்தியின் படம் இருப்பது தான் நல்லது. பணம் எல்லா இடத்திலும் உபயோகப்படுத்தப்படும். அப்படி இருக்கும்போது, ரூபாய் நோட்டில் சாமி படம் என்று வந்தால், அது சரியாக இருக்காது. தற்போதைய டிஜிட்டல் உலகில் ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்து வருகிறது. பெரும்பாலும் செல்போன் வாயிலான பணப் பரிமாற்றங்கள் அதிகரித்து விட்டன. இப்படி இருக்கும் சூழ்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த கோரிக்கை ஏற்புடையது அல்ல.
பிரச்சினைக்கு வழிவகுக்கும்
வயலூரை சேர்ந்த அரவிந்த் அறிவழகன்:- ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகர் சாமி படங்களை பதிவிட்டால் இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற்ற பாதைக்கு திரும்பும் என்ற கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். தற்போது நாட்டில் பல அசாதாரணமான சூழலுக்கு "மதம்" ஒரு பெரிய காரணமாக இருக்கிறது. இது போன்ற நேரங்களில் மதநல்லிணக்கத்தை உருவாக்க முயற்சி செய்ய வேண்டுமே தவிர ஒரு குறிப்பிட்ட மதத்தை சார்ந்த கடவுள்களின் படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிட வேண்டும் என்று கூறினால், மாற்று மதத்தை சேர்ந்தவர்களும் தங்களது கடவுள்களின் படத்தையும் போட வேண்டுமென்று அவர்களும் இதே கருத்தை எழுப்பினால் அது மேலும் பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
இந்தோனேசியாவில் விநாயகர் படம்
பெரம்பலூர்-எளம்பலூர் சாலை பாரதிதாசன் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி கல்வி அலுவலர் ஜெயராமன்:- லட்சுமி, விநாயகர் ஆகிய சாமிகள் செல்வத்தை அள்ளித்தருபவர் என்பது பெரும்பாலான மக்களின் நம்பிக்கை. இந்துக்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் இந்திய நாட்டில் ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கத்தில் லட்சுமி, விநாயகர் படங்களை அச்சிட்டால் என்ன தவறு. ஏற்கனவே இந்தோனேசியா நாட்டில் செல்வத்தின் அதிபதியாக கருதும் விநாயகர் கடவுளின் உருவம் 20 ஆயிரம் ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டிருந்தது. மேலும் அந்த ரூபாய் நோட்டில் அந்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர் மற்றும் கல்விக்கு வித்திட்ட தியாக செம்மல் கிஹாஜர் தேவாந்தரானியின் உருவமும் அச்சிடப்பட்டிருந்தது. அதேபோல் இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் உருவப்படத்துடன் லட்சுமி, விநாயகர் சாமி படங்களை அச்சிடலாம்.
மற்ற நாடுகளில் அங்கு வசிக்கும் பெரும்பான்மையினரின் மதத்துக்கு தான் முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதேபோல் இந்தியாவில் இந்து மதத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.