ரூபாய் நோட்டில் லட்சுமி, விநாயகர் உருவப்படம் அச்சிடுவது அவசியமா?
பணமா, குணமா என்றால் இன்றைய நாகரிக உலகில் பணத்துக்கே முதலிடம் பெரும்பாலும் கொடுக்கப்படுகிறது. பணத்தை வைத்து தான் ஒருவருடைய அந்தஸ்து நிர்ணயிக்கப்படுகிறது. எந்த பக்கம் திரும்பினாலும் பணம்... பணம்... பணம்... இந்த வார்த்தை ஒன்றுதான் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இப்படிப்பட்ட பணத்தின் மதிப்பை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
காகித பணம்
இந்தியாவில் ஆங்கிலேயர்களால் 1882-ம் ஆண்டு முதல் முறையாக காகித பணம் புழக்கத்துக்கு கொண்டுவரப்பட்டது. ரூ.2, ரூ.5, ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என ரூபாய் நோட்டுகள் முதலில் புழக்கத்தில் விடப்பட்டன. இதில் ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் நோட்டுகள் நாளடைவில் கைவிடப்பட்டன.
அதன்பின்னர், 1969-ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 100-வது பிறந்தநாளையொட்டி, ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நோட்டுகள் வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ரூ.20, ரூ.50, ரூ.100 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. 1987-ம் ஆண்டில் 500 ரூபாய் நோட்டையும், 2000-ம் ஆண்டில் ரூ.1,000 நோட்டையும் புழக்கத்துக்கு விட்டனர். 2016-ம் ஆண்டில் ரூ.2,000 நோட்டும் வந்தது. இப்போது 1,000 ரூபாய் நோட்டு மட்டும் புழக்கத்தில் இல்லை.
ரூபாய் நோட்டுகள்
இப்படியாக ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த நிலையில், அதில் பொறிக்கப்பட்ட படங்களின் வரலாறும் அனைவராலும் பேசப்படக்கூடிய ஒன்றாகவே இருந்து வருகிறது. சுதந்திரத்துக்கு பின், வெளியான ரூபாய் நோட்டில் நான்கு முக சிங்கங்கள் உருவம் பொறிக்கப்பட்டு வெளியானது. அதனைத்தொடர்ந்து புலி, மான், தஞ்சை பெரிய கோவில், மும்பை கேட்வே ஆப் இந்தியா, நாடாளுமன்றம், பசுமைப்புரட்சி- உழவுத்தொழில்-விவசாய வேலைகள்-அணைக்கட்டுகள், இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆரியபட்டா, ஹிராகுட் அணை, டிராக்டர் படங்கள் ரூபாய் நோட்டுகளில் உருவங்களாக பொறிக்கப்பட்டு வெளிவந்தன.
இன்று நாம் பயன்படுத்தக்கூடிய ரூபாய் நோட்டுகளில் முகப்பு பக்கத்தில் காந்தியின் உருவப்படம் இருக்கிறது. இதன் வரலாறை பார்த்தோமானால், 1969-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நோட்டுகளில்தான் காந்தியின் உருவப்படம் முதன் முதலாக பொறிக்கப்பட்டன. பின்னர் நாளடைவில் மற்ற ரூபாய் நோட்டுகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, 1996-ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் அனைத்து ரூபாய் நோட்டுகளின் முகப்பில் பெரிய அளவிலான காந்தியின் உருவப்படமே பொறிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், நோட்டுகளின் மறுபக்கத்தில் இந்தியாவின் நினைவு சின்னங்கள், பாரம்பரிய இடங்களின் படங்களும் அப்போது முதல் இடம்பெற்று வருகின்றன.
லட்சுமி, விநாயகர் உருவப்படம்
இந்த சூழ்நிலையில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், 'புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் மகாத்மா காந்தி படத்தையும், மறுபக்கம் லட்சுமி, விநாயகர் உருவங்களையும் அச்சிட வேண்டும்' என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இவருடைய இந்த கோரிக்கை, அரசியல் ரீதியில் பல்வேறு விவாதங்களை கிளப்பி இருக்கிறது. இவருக்கு போட்டியாக பிற அரசியல் கட்சிகளும் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்துவருகின்றன. அதில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி, ரூபாய் நோட்டில் அம்பேத்கர் படத்தை அச்சிடலாமே? என்று கூறியிருக்கிறார். மராட்டிய மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. இந்திய ரூபாய் நோட்டில் சத்ரபதி சிவாஜி உருவப்படத்தை வைத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையில் பிரதமர் மோடிக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் இதுகுறித்து கடிதமும் அனுப்பியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த முயற்சி, சரியானதா? தற்போதைக்கு அவசியமானதா? இதனால் மாற்றங்கள் ஏற்படுமா? என்பது குறித்து மக்களின் கருத்துகள் வருமாறு:-
சிறப்பு வாய்ந்தது
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள மதனத்தூர் கிராமத்தை சேர்ந்த சதாசிவம்:- இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் இறை வழிபாடு மீது நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றனர். இந்து வழிபாட்டு முறையில் செல்வத்துக்கு என்று கடவுள்களை அடையாளம் காட்டி வழிபாடு செய்வது வழக்கம். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி பதவிப்பிரமாணம் பெறும் அனைத்து அரசு பிரதிநிதிகளும் கடவுளின் மேல் ஆணையிட்டு தான் பதவி ஏற்கின்றனர். நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்யும் ரூபாய் நோட்டுகளில் கடவுளின் படத்தை அச்சடிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
நன்மதிப்பை அதிகப்படுத்தும்
தா.பழூர் அருகே உள்ள அருள்மொழி கிராமத்தை சேர்ந்த வினோதினி:- இந்த உலகத்தில் கடவுளுக்கு ஒப்பாக கருதப்படுவது கரன்சி. காசேதான் கடவுளப்பா என்று திரைப்பட பாடலும் உண்டு. கரன்சி நோட்டுகளில் கடவுள் உருவப்படங்கள் அச்சடிப்பது கரன்சி நோட்டுகளின் மீது மக்களின் நன்மதிப்பை இன்னும் அதிகப்படுத்தும். எனவே அரசு உறுதியான முடிவெடுத்து கரன்சி நோட்டுகளில் கடவுள்கள் படத்தை அச்சிட வேண்டும்.
பல்வேறு பிரச்சினை ஏற்படும்
விக்கிரமங்கலம் அருகே உள்ள அம்பாப்பூர் கிராமத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரி வெற்றிவேல்:- இந்தியா ஒரு சமய சார்பற்ற நாடு. இங்கு வாழும் மக்கள் பல்வேறு மொழி, கலாசாரம், சமயங்களை சார்ந்தவர்கள் ஆவர். நம் நாட்டில் ஒரு சமயத்தை சார்ந்த தெய்வங்களின் படங்களை பணத்தில் அச்சிடும் பொழுது மற்ற சமயத்தை சார்ந்தவர்கள் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நமது நாட்டில் அனைத்து மதத்தினரும் சகோதர, சகோதரிகளாக வாழ்ந்து வருகிறார்கள். லட்சுமி மற்றும் விநாயகர் படங்களை பணத்தில் அச்சிடும் பொழுது பல்வேறு பிரச்சினைகள் வருவதற்கு இது காரணமாக அமைந்து விடும். எனவே அரசியல்வாதிகள் பொதுமக்களின் ஓட்டுகளை கவர்வதற்காக சொல்லும் இப்படிப்பட்ட காரியங்களை மத்திய அரசு எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ளக்கூடாது. இந்தியாவின் கலாசாரமே வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.