கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவுகளை நிறுத்தி வைப்பது சரியா?


கல்லூரிகளில் கணிதம், இயற்பியல் பாடப்பிரிவுகளை நிறுத்தி வைப்பது சரியா? என்பது குறித்து கருத்து ெதரிவித்துள்ளனர்.

விருதுநகர்

இயற்பியலும், வேதியியலும் இந்தியாவிற்கு நோபல் பரிசுகள் பெற்றுத்தந்தன. கணிதம் நமக்கு ராமானுஜம் என்ற மேதையை உருவாக்கித் தந்தது.

அத்தகைய சிறப்புவாய்ந்த பாடப்பிரிவுகளை எடுத்து படிக்க ஒருகாலத்தில் மாணவர்கள் மத்தியில் போட்டா போட்டி நிலவியது.

மாணவர் சேர்க்கை

கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை கல்லூரிகளில் படிப்பதாக இருந்தால் அமைச்சர்கள் வரை சிபாரிசு தேவைப்பட்டது.

இப்படி இருந்த கணிதம், இயற்பியல் துறை தற்போது மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் கல்லூரிகளில் அந்தப் பாடப்பிரிவுகளை நிறுத்திவைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து பேராசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். அதன் விவரம் வருமாறு:-

மறு ஆய்வு செய்ய வேண்டும்

விருதுநகரை ேசர்ந்த கணித பேராசிரியர் ஜவகர்லால் நேரு:-

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று குறிப்பிட்டுள்ள வள்ளுவப்பெருமகனார் எண்ணைத்தான் முதலில் குறிப்பிட்டுள்ளார். அதன் பின் தான் எழுத்தை சொல்லுகிறார். பள்ளி சார்ந்த நிலையிலும் சரி, கல்லூரி சார்ந்த நிலையிலும் சரி, கணித பாடம் என்பது மிக முக்கியமானதாகும்.

வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆகிய அனைத்து அறிவியல் பாடங்களுக்கும் கணிதம் அடிப்படையாகும். கணிதம் கற்பதால் மாணவர்களுக்கு பகுப்பாய்வுத் திறன் மேம்படும். அதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் ஆய்வு செய்து விஷயங்களை புரிந்து கொள்ளும் திறன் பெறுவர். கணிதம் இல்லாத அறிவியல் என்பது உயிரினம் இல்லாத வெறும் உலகை போன்றதாகும். எனவே கணிதம் அறிவியலை தவிர்த்து பாடத்திட்டம் அமைப்பது என்பது மாணவர்களுக்கு எந்த வகையிலும் பயனுள்ளதாக அமையாது. ஆதலால் அரசு இதை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

மறுபரிசீலனை

மாங்குடியை சேர்ந்த கல்லூரி மாணவர் ராபின்:-

கணிதம், இயற்பியல் பாடங்களை நிறுத்தினால் மாணவர்களுக்கு இந்த படிப்பு குறித்த அறிவு இ்ல்லாமல் போய்விடும். இந்த பாடங்களை மிகவும் குறைவான நபர்கள் எடுத்து படித்து வருகின்றனர். இந்தநிலையில் இந்த பாடங்களை நிறுத்துவது என்பது மாணவர்களின் கல்வி வாழ்க்கையை மேலும் பாதிப்பு ஏற்படுத்த செய்து விடும்.

ஆதலால் இதுகுறித்து மறுபரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊக்குவிக்க வேண்டும்

ஆலங்குளம் இந்திராநகரை சேர்ந்த இல்லத்தரசி உமா என்ற காளீஸ்வரி:-

கணிதம் என்றால் கடினம் என்ற மனப்பக்குவம் இன்று பெரும்பாலான மாணவர்கள் மத்தியில் உள்ளது. இதனால் கணிதம் கற்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. அதற்கு அடுத்தபடியாக இயற்பியல் பாடம். போட்டி ேதர்விற்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு இருந்தால் போதும் என்பதால் பெரும்பாலான மாணவர்கள் கணிதம், இயற்பியல் பாடத்தை தேர்வு செய்வதை குறைத்து வருகின்றனர்.

இவ்வாறு குறைப்பதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிந்தது அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி ஆரம்ப கல்வி முதல் அவர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடு்க்க வேண்டும்.

பெரும் அதிர்ச்சி

விருதுநகரை சேர்ந்த இயற்பியல் பட்டப்படிப்பு மாணவி லட்சுமி பிரியா:-

தேசிய கல்விக்கொள்கை பற்றி பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் உலவி வந்தாலும் கணிதம் மற்றும் இயற்பியல் பட்டப்படிப்புகள் தவிர்க்க வழிவகை வகுக்கப்படுகிறது என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. ராமானுஜம் பிறந்த மண்ணை சேர்ந்த எங்களை போன்ற மாணவ- மாணவிகளுக்கு இது பெரும் அதிர்ச்சியை தருகிறது. கணிதம் அனைத்து அறிவியல் பாடங்களுக்கும் அடிப்படையானது.

கணிதம் படித்தால் ஆய்வு திறன் அதிகரிக்கும் என்பது அறிவியல் பூர்வ உண்மை. இதனை தவிர்க்கும் நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகும்.

தனி கவனம்

சத்திரப்பட்டி கல்லூரி பேராசிரியை ராமுத்தாய்:-

பி.எஸ்சி. கணிதம், இயற்பியல், உயிரியல், விலங்கியல் படிப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைவாகத்தான் உள்ளது. ஒரு சிலருக்கு கணிதம் கடினம் என்ற மனப்பக்குவம் ஆரம்ப காலத்தில் இருந்து வந்து விடுகிறது. இதனால் அவர்கள் கணிதத்தை ஒதுக்கி விடுகின்றனர்.

இவ்வாறு கடினம் என கருதி பாடங்களை ஒதுக்கும் மாணவர்கள் குறித்து அரசு மட்டுமின்றி கல்வி நிறுவனங்களும் தனி கவனம் செலுத்த வேண்டும்.

உங்களாலும் முடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்து கணிதம், இயற்பியலை படிக்க வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அனைத்து பாடங்களில் நமது மாணவர்கள் சாதனை புரிவார்கள்.

தவறான எண்ணம்

கல்வியாளர் அசோக்:-

அரசு கலைக்கல்லூரிகளிலும், தனியார் கலை கல்லூரிகளிலும் இந்த ஆண்டு இயற்பியல் துறை, வேதியியல் துறை ஆகிய பட்டப்படிப்புகளில் மாணவ- மாணவிகள் சேர்க்கை முற்றிலும் குறைந்துள்ளது. அரசு கலைக்கல்லூரிகளில் அந்தப் பாடத்திட்டங்களை எடுக்க அரசு முன்வந்துள்ளது. அதேபோல கணிதம், இயற்பியல் கற்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.

தற்போது மாணவ-மாணவிகள் இடையே ஒரு தவறான எண்ணம் வந்துள்ளது. ஆண்டுதோறும் ஏதாவது ஒரு படிப்புக்கு மவுசு இருப்பது போல் தோற்றம் ஏற்பட்டு அந்த பாடப்பிரிவையே தேடிச் செல்கின்றனர். மாணவ- மாணவிகள் தவறான எண்ணங்களை கொண்டு ஒரு பிரிவில் வேலை வாய்ப்பு இருப்பதாக கருதி சேருகிறார்கள். அது மிகவும் தவறானதாகும். மாணவர்கள் படிக்கும் போது எந்தெந்த துறையில் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

வெற்றி நிச்சயம்

தாயில்பட்டியை சேர்ந்த செல்வம்:-

எல்லா பாடங்களுக்கும் வேலைவாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மாணவர்கள் தவறாக புரிந்து கொண்டு ஒரு சில பாடப்பிரிவுகளை தேர்ந்ெதடுப்பதில்லை. அதிலும் குறிப்பாக கணிதம், இயற்பியல் ஆகியவற்றை பெரும்பாலான மாணவர்கள் கடினம் என கருதி தேர்வு செய்ய மறுக்கின்றனர்.

இது தவறான அணுகுமுறையாகும். அனைத்து பாடத்திற்கும் வேலைவாய்ப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு மாணவர்கள் தயாரானால் வெற்றி அவர்களுக்கு நிச்சயம் தான்.

கணிதம், இயற்பியலுக்கு பதில்

கல்லூரி கல்வி இயக்குனரக அதிகாரிகள் கூறும் போது, 'ஒரு சில கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் இடையே வரவேற்பு இல்லாத, மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பாடப்பிரிவுகளை மட்டும் நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தேவையின் அடிப்படையில் வேலைவாய்ப்பு அதிகமுள்ள புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்று சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி அறிவித்தார். அதன்படி சேந்தமங்கலம், லால்குடி, வேப்பந்தட்டை, கடலாடி, சத்தியமங்கலம், பரமக்குடி, மாதனூர், கூடலூர், கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணித படிப்பில் சேர்க்கை எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதனால் அந்த கல்லூரிகள் தேவைக்கேற்ப கணினி அறிவியல், தமிழ், உயிர் தொழில்நுட்பவியல், வணிக நிர்வாகவியல், தாவரவியல், பொருளியல் ஆகிய புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திட்டமலை அரசுக் கல்லூரியில் ஆங்கில வழி கணித பாடப்பிரிவையும், நாகலாபுரம் அரசுக் கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் பாடப்பிரிவையும் தமிழ் வழிக்கு மாற்றிக் கொள்ளலாம். மொடக்குறிச்சி அரசுக் கல்லூரியில் இயற்பியலுக்குப் பதிலாக விலங்கியல் பாடப்பிரிவு தொடங்கலாம். புதிய பாடப்பிரிவுகளுக்கு அந்தந்த பல்கலைக்கழகங்களில் கல்லூரிகள் அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து அரசுக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது'.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story