சனாதனத்தை எதிர்த்து உதயநிதி ஸ்டாலின் பேசினால் தவறா? ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காட்டமான கேள்வி
சனாதனத்தை ஆதரித்து கவர்னர் ஆர்.என்.ரவி பேசலாம்; ஆனால், சனாதனத்தை எதிர்த்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினால் மட்டும் தவறா? என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று இளைய சமுதாயத்தின் குரலாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று புத்தர், ராமானுஜர், வள்ளலார், ஜோதிராபுலே, அம்பேத்கர், பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோர் பேசினர். இது காலம் காலமாக நடக்கும் மனித குலத்திற்கான போராட்டம்.
சனாதனத்தால் கலவரத்தை உருவாக்கி நாட்டைத் துண்டாடும் நோக்கில் செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்திராகாந்தி தடை செய்தார். சனாதனத்தை ஆதரித்து கவர்னர் ஆர்.என்.ரவி பேசலாம்; பா.ஜ.க.வினர் பேசலாம். ஆனால் எதிர்த்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினால் மட்டும் தவறா?
உதயநிதிக்கு பாராட்டு
மனித குலத்தின் சமத்துவத்திற்கு எதிரான சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசுவது தவறா? சனாதனத்தை எதிர்த்து பேசினதால் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். சனாதனத்தை எதிர்த்து பிரசாரம் செய்ததால் பெரியார் மீது எண்ணற்ற வழக்குகள் போட்டனர். சனாதனத்தை எதிர்த்தார் என்பதற்காகவே காமராஜரை டெல்லி வீட்டில் வைத்து தீயிட்டு எரிக்க முயன்றனர்.
அன்றைக்கு தோற்றுப்போனவர்கள், இந்தியா கூட்டணியின் பலத்தை கண்டு தோல்வி பயம் துரத்துவதால் சனாதனத்தை சாக்கு வைத்து மக்களை திசை திருப்ப துடிக்கிறார்கள். சனாதனம் சமூகத்திற்கு, சமூக நீதிக்கு எவ்வளவு கேடானது என்பதை சாமானிய மக்களை புரிந்து கொள்ள வலியுறுத்தும் வகையில் பேசிய அமைச்சர் உதயநிதிக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். அவரது சனாதன எதிர்ப்பு பயணத்தில் நாங்கள் உடன் இருப்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.