துண்டிக்கப்பட்ட கைக்குரியவர் அழகு நிலைய ஊழியரா?


துண்டிக்கப்பட்ட கைக்குரியவர் அழகு நிலைய  ஊழியரா?
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

துண்டிக்கப்பட்ட கைக்குரியவர் அழகு நிலைய ஊழியரா?

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் குப்பையில் கிடந்த துண்டிக்கப்பட்ட கைக்குரியவர் அழகு நிலைய ஊழியரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துண்டிக்கப்பட்ட கை

கோவை துடியலூர் அருகே வெள்ளக்கிணறு பிரிவில் உள்ள குப்பை தொட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன் அடையாளம் தெரியாத நபரின் துண்டிக்கப்பட்ட இடது முன்கை கிடந்தது. இது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் அந்த கையை கைப்பற்றி, அதற்கான உடல் அந்த பகுதியில் வீசப்பட்டுள்ளதா, யார்? அவர் என்பது குறித்து விசாரணையை துரிதப்படுத்தினர்.

இதற்காக கோவை மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். கோவை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் காணாமல் போனவர்களின் பட்டியல் ஆய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் குப்பையில் கிடந்த கைக்குரியவர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்திருக்கலாம் என்றும், அவர் கடந்த 14-ந்தேதி இரவு காணாமல் போனதாகவும் தெரியவந்தது. மேலும் இது கொலையாக இருக்கலாம் என சந்தேகித்த போலீசார், தொடந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோட்டை சேர்ந்தவர்

மேலும் இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-

காணாமல் போன நபர் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த பிரபு (வயது 39). இவர் கோவை காந்திபுரத்தில் உள்ள அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சரவணம்பட்டியில் வாடகை வீடு எடுத்து தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், குடும்ப செலவுக்கு மனைவிக்கு பணம் கொடுக்கவில்லை.

இவர் மாதம் இருமுறை ஈரோடு செல்வது வழக்கம். ஆனால், மனைவியுடன் அடிக்கடி போனில் பேசி வந்தார். கடந்த 14-ந் தேதி இரவு முதல் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அவரது மனைவி அழகு நிலையத்திற்குச் சென்று கணவரைப் பற்றி விசாரித்த போது அவர் கடந்த 14-ந்தேதி இரவு 8.30 மணிக்கு அழகு நிலையத்தை விட்டு சென்றவர் திரும்பவில்லை என்று தெரியவந்தது.

காரணம் என்ன?

இந்த நிலையில் குப்பை தொட்டியில் துண்டிக்கப்பட்டு கிடந்த முன்கை, அவரது கையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தடய அறிவியல் நிபுணர்களின் உதவியுடன், துண்டிக்கப்பட்ட முன்கையில் இருந்து டி.என்.ஏ.வைப்பிரித்து எடுத்து ஆய்வு செய்யப்படுகிறது.ஆனால் இறந்தவரின் உடலை கண்டுபிடிக்காமல், எந்த முடிவுக்கும் வர முடியாது. அதன் பின்னர் தான் அவர் கொலை செய்து வீசப்பட்டாரா என்பது குறித்த காரணங்கள் தெரியவரும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story