ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகள் சரியாக நடக்கிறதா?
பண்ருட்டியில் ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகள் சரியாக நடக்கிறதா? என வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
பண்ருட்டி,
பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினரான தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பண்ருட்டி நகராட்சியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ரூ.1 கோடியே 5 லட்சத்தை ஒதுக்கி இருந்தார். அதன்படி தற்போது சாலை, கழிவுநீர் வாய்க்கால் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் சரியாகவும், தரமாகவும் நடைபெறுகிறதா? என்று வேல்முருகன் எம்.எல்.ஏ. நேற்று ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து பண்ருட்டி நகராட்சி அலுவலகத்திற்கு சென்ற அவரை, நகரமன்ற தலைவர் ராஜேந்திரன், ஆணையர் மகேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள் வரவேற்றனர். பின்னர் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட வேல்முருகன் எம்.எல்.ஏ. இதுவரை தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் செலவிடப்பட்ட திட்டப்பணிகள் குறித்தும், பண்ருட்டி நகராட்சியில் என்னென்ன குறைகள் உள்ளது? என்னென்ன பணிகள் தேவைப்படுகிறது? என்பது குறித்து கேட்டறிந்தார். அப்போது கவுன்சிலர்கள், தங்கள் வார்டுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து தெரிவித்தனர். இதை கேட்ட அவர், படிப்படியாக பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.