''ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா?'' -எடப்பாடி பழனிசாமி


ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? -எடப்பாடி பழனிசாமி
x

‘‘ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா?’’ என்று சென்னையில் மின் கட்டண உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சென்னை,

மின் கட்டணம், குடிநீர் கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு, விலைவாசி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து சென்னை மாவட்ட அ.தி.மு.க. சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், விருகை ரவி, பாலகங்கா, வெங்கடேஷ்பாபு, ஆதிராஜாராம், ராஜேஷ், சத்யா, கந்தன், அசோக் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது:-

விபத்தில் ஆட்சிக்கு வந்த தி.மு.க.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் முதல்-அமைச்சராக பொறுப்பேற்றபோது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் இந்த அரசு 3 மாதம் கூட தாக்குப்பிடிக்காது என்றார். ஆனால் அவரே அதிர்ந்து போகும் அளவு 4½ ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை கொடுத்தோம். இன்றைக்கு ஏதோ விபத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வந்துவிட்டார். மக்கள் ஏமாந்துபோய் வாக்களித்திருக்கிறார்கள். அவர் பொறுப்பேற்று இதுவரை மக்கள் என்ன நன்மையை கண்டார்கள்?.

ஆட்சி-அதிகாரத்தை கொண்டு மக்களுக்கு என்ன நன்மைகள் செய்யலாம் என்றில்லாமல், எதிர்க்கட்சிகளை எப்படி பழிவாங்கலாம்? என்றே சிந்திக்கிறார். இதற்கான பலனை அவர் விரைவிலேயே அனுபவிப்பார். கால சக்கரம் சுழலும்போது நிலைமையும் மாறும். மக்கள் குறைகளை போக்க பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. களத்தில் இறங்கி அரசுக்கு அழுத்தம் தருகிறது. நாட்டு மக்களை பற்றி சிந்திக்கும் கட்சி அ.தி.மு.க. வீட்டு மக்களை பற்றி மட்டுமே சிந்திக்கும் கட்சி தி.மு.க.

மக்களை ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா?

மக்களுக்கு 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக தந்தவர் ஜெயலலிதா. ஆனால் இன்றைக்கு மின் கட்டணத்தை வெகுவாக உயர்த்தி மக்களின் தலையில் இடியை இறக்கியிருக்கிறார்கள். ஆட்சிக்கு வரும்போது மின் கட்டணம் உயராது, மாதந்தோறும் மின் கணக்கீடு என்றெல்லாம் வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்தார்கள். இப்போது என்ன. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, வந்தபின்பு ஒரு பேச்சு என மாற்றி மாற்றி பேசி ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றுவதுதான் திராவிட மாடல் ஆட்சியா?.

அதேபோல கொரோனா ஓய்ந்து பொருளாதாரம் சீராகும் வரை சொத்துவரி உயராது என்றார்கள். இப்போது சொத்துவரியை உயர்த்தி இருக்கிறார்கள். நகர்ப்புற தேர்தலுக்கு முன்பாக சொத்துவரியை உயர்த்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும்?. தேர்தல் அனைத்தும் முடிந்தபிறகு தங்கள் எண்ணங்களை செயல்படுத்தி, மக்களை வேதனைக்கு உள்ளாக்கி வருகிறார்கள்.

தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு?

கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தால் நடுத்தர மக்கள், இத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். பெருமளவு சிமெண்ட் தொழிற்சாலைகள் தி.மு.க.வினரின் வசம் இருப்பதால் ஏழைகளின் குரல் இந்த அரசுக்கு எட்டவில்லை. கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம், இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை, பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் போன்ற தேர்தல் வாக்குறுதிகள் என்னாச்சு?.

இனியும் தாமதம் இல்லாமல் உயர்த்தப்பட்ட கட்டணம் மற்றும் வரிகளை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இதை மக்கள் சார்பில் இந்த அரசுக்கு வேண்டுகோளாக விடுக்கிறோம்.

துரோகிகளுக்கு பாடம் கற்பிப்போம்

தி.மு.க.வுடன் சேர்ந்து சில எட்டப்பர்கள் இந்த கட்சியை அழிக்க பார்த்தார்கள். அவர்களை அடையாளம் கண்டு கட்சியை விட்டே விலக்கிவிட்டோம். நமது கட்சி அலுவலகத்தில் அத்துமீறிய அந்த துரோகிகளுக்கு தக்க பாடம் கற்பிப்போம். மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை கொண்டுவருவோம். தீயசக்தி தி.மு.க.வை வேரோடு அழிப்போம். துரோகிகளை ஓட ஓட விரட்டி அடிப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், வளர்மதி, கோகுல இந்திரா, இலக்கிய அணி துணை செயலாளர் சேகர், சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் சேவியர், முன்னாள் எம்.பி. டாக்டர் ஜெயவர்தன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story