கருங்கல் மலை கனிமவளக் கொள்ளைக்குத் துணைபோவதுதான் திராவிட மாடலா? - சீமான் கேள்வி


கருங்கல் மலை கனிமவளக் கொள்ளைக்குத் துணைபோவதுதான் திராவிட மாடலா? - சீமான் கேள்வி
x

கருங்கல் மலையில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையைத் தொடர்ச்சியாக அனுமதிக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தொகுதிக்குட்பட்ட கருங்கல் மலையில் நடைபெறும் கனிமவளக் கொள்ளையைத் தொடர்ச்சியாக அனுமதிக்கும் திமுக அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கப்பியறை பேரூராட்சி நிர்வாகம் கனிம வளக்கொள்ளையைத் தடுத்து நிறுத்தக்கோரி ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியும், அதனைச் சிறிதும் மதியாது மலைகள் கொள்ளைபோக அனுமதிப்பதென்பது வருங்கால தமிழிளம் தலைமுறையினருக்கு திராவிட மாடல் அரசு செய்கின்ற பச்சைத் துரோகமாகும்.

ஒக்கி புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களிலிருந்து கன்னியாகுமரி மண்ணையும், மக்களையும் பாதுகாத்த இயற்கை அரணாக விளங்குவது கருங்கல் மலையாகும். அதுமட்டுமின்றி கப்பியறை பேரூராட்சி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் பல்வேறு சமய வழிபாட்டு ஆலயங்கள் நிறைந்த பண்பாட்டுத் தளமாகவும் கருங்கல் மலை திகழ்கிறது.

மனிதர்களால் ஒரு காலத்திலும் உருவாக்கவே முடியாத இயற்கையின் அருட்கொடையாம் மலையினை வெட்டி கூறுபோடுவதென்பது ஈன்ற தாயின் மாரினை அறுப்பதைப் போன்று மிகக்கொடுமையானதும், இழிவானதுமாகும்.

வரலாற்றுப் பெறுமதிமிக்க கருங்கல் மலையை வெட்டி கேரள மாநிலத்திற்குக் கடத்தும் கனிமவளக் கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்கும் வகையில், ஏற்கனவே வழங்கப்பட்ட குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்யக்கோரியும், புதிய குவாரிகள் அமைப்பதற்கு நிரந்தரத் தடை விதிக்கக் கோரியும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் (28.04.2022) நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பேரூராட்சி உறுப்பினர் அன்புத்தங்கை ஆன்சி சோபாராணி உட்பட பெருமதிப்பிற்குரிய கப்பியறை பேரூராட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

பேரூராட்சி மன்றத்தின் தீரமிக்க அத்தீர்மானத்தை வரவேற்றும், மண் காக்கும் போராளிகளான பேரூராட்சி உறுப்பினர்களை வாழ்த்தியும், ஒட்டுமொத்த கப்பியறை மக்களின் நியாயமான அக்கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் திமுக அரசு அனைத்து குவாரிகளையும் உடனடியாகத் தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் கடந்த 15.06.2022 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

அதனையடுத்து 5 மாத காலங்கள் செயல்படாமல் இருந்த கருங்கல் மலைக்குவாரிகள் மீண்டும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் செயல்படத்தொடங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

இதுதொடர்பாக, கப்பியறை பேரூராட்சி உறுப்பினர்கள் கடந்த 6 மாத காலமாக அரசு அதிகாரிகள் முதல், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரத்தில் உள்ள அனைவரையும் பலமுறை நேரில் சந்தித்து குவாரியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அங்கு நடைபெறும் விதி மீறல்கள் குறித்தும், பேரூராட்சி தீர்மானம் குறித்தும், உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டிய அவசியம் குறித்தும் எடுத்துக்கூறியும் திமுக அரசு இன்றுவரை குவாரிகள் செயல்பட அனுமதித்துக் கனிமவளக்கொள்ளையை ஆதரிப்பதென்பது கப்பியறை பேரூராட்சி மக்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி மாமன்றத்தையும் அவமதிக்கும் செயலாகும்.

கனிமவளக்கொள்ளையைத் தடுத்து நிறுத்தக்கோரி கடந்த 3 ஆம் தேதி முதல் இரவு, பகலாக கப்பியறை பேரூராட்சி அலுவலகத்தில்

உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவரும் பேரூராட்சியின் உறுப்பினர்களின் போராட்ட உறுதிகண்டு உளம் மகிழ்ந்தாலும், அதிகாரமிக்க உறுப்பினர்களே வீதியில் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அவலநிலை மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

மலைகளை வெட்டிக்கடத்தும் துரோகத்திற்குத் துணைபோகும் திமுக அரசும், அதன் அதிகாரமும் ஏழை, எளிய மக்களுக்கானதா? இல்லை கனிமவளக் கொள்ளையர்களுக்கானதா? என்ற கேள்வியும் எழுகின்றது.

வளர்ச்சி என்ற பெயரில் மலைகளையும், காடுகளையும், கடலையும், ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளையும் நாசப்படுத்தி அழித்தொழிப்பதென்பது மனிதர்கள் வாழத் தகுதியற்ற நிலமாக பூமியை மாற்றி பேரழிவினை நோக்கி இட்டுச்செல்லவே வழிவகுக்கும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு சூழியல் முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்சினையில் இனியாவது மனச்சான்றுடன் செயல்பட்டு, கப்பியறை பேரூராட்சி மக்களின் கோரிக்கையான கருங்கல் மலை குவாரிகளை நிரந்தரமாகத் தடைசெய்து உடனடியாக அரசாணை வெளியிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

மக்களையும், மண்ணையும் காக்க வேண்டி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பேரூராட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதோடு போராட்டம் வெல்லும்வரை நாம் தமிழர் துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன்.

இதற்குப் பிறகும் திமுக அரசு கனிமவளக்கொள்ளையைத் தடுக்கத் தவறினால் நாம் தமிழர் கட்சி மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் இவ்வறிக்கை வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Is the Dravidian model to complement Karungal Hill Mineralogy? - Seaman Question


Next Story