சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா?
சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா? என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியாக பிரிந்து 1995-ல் தன்னாட்சி அதிகாரம் பெற்றது.
எல்லா மாநிலங்களையும் சாலைகள் மூலம் இணைத்து அதனை மேம்படுத்திப் பராமரிப்பது ஆணையத்தின் முக்கிய பணியாகும். சாலைப் போக்குவரத்து மட்டுமின்றி, அத்தியாவசிய சரக்குப் போக்குவரத்தையும் ஊக்குவிக்கத் தரமான சாலைகளை அமைத்துத் தரவேண்டியப் பொறுப்புகளுடன் ஆணையம் செயல்படுகிறது.
தனியாருக்கு குத்தகை
மத்திய அரசானது நான்கு வழி அல்லது ஆறு வழிச் சாலைகளை அமைத்து அவற்றைப் பராமரிக்க விதிமுறைகளுக்கு உட்பட்டு சுங்கச்சாவடிகளை (டோல்கேட்) நிறுவி தனியார் நிறுவனங்களிடம் குத்தகைக்கு விட்டுவிடுகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் 566 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் 52 சுங்கச்சாவடிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி கடந்த 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் ஆண்டுதோறும் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தற்போது 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது சுங்க கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும் அவை செயல்படுத்தப்படுவதில்லை. மாறாக மத்திய அரசிடம் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறி கட்டண உயர்வுக்கான அனுமதியை பெறுகின்றனர் என்று கனரக வாகன ஓட்டிகள் குற்றம் சொல்கிறார்கள்.
சுங்கக் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கக்கட்டணம் உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து வெளியிட்டு இருக்கிறார்கள். அதுபற்றி காண்போம்.
வாடகை வாகன தொழில் பாதிப்பு
சுற்றுலா வாகன உரிமையாளர் ஜெயராஜ் (கொசவபட்டி) :- சுற்றுலா வாகன தொழில் நாளுக்குநாள் நலிவடைந்து வருகிறது. இதற்கிடையே சுங்கச்சாவடி கட்டணம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வது பெரும் சுமையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடி கட்டணம் குறையுமா? என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது. ஓராண்டுக்கு சாலை வரி ரூ.24 ஆயிரம், இன்சூரன்ஸ் ரூ.34 ஆயிரம் செலுத்துகிறேன். இதுதவிர சுங்கச்சாவடி கட்டணம் வேறு செலுத்த வேண்டியது இருக்கிறது. அனைத்து வாகனங்களுக்கும் சாலை வரி பெறும் நிலையில் சுங்கச்சாவடி கட்டணம் எதற்கு வசூலிக்க வேண்டும். சுங்கச்சாவடி கட்டணத்தால் வாடகை வாகன தொழில் செத்து கொண்டே இருக்கிறது. எனவே சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும். மேலும் தேவைப்பட்டால் காலாவதியான சுங்கச்சாவடிகள் மூட வேண்டும்.
வேடசந்தூர் தந்தை பெரியார் கார் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் அன்வர்அலி:- பழைய மாடல் கார்கள் குறைந்த விலையில் கிடைப்பதால் அதை பொதுமக்கள் வாங்கி வைத்துள்ளனர். வாகனங்களுக்கு சாலை வரி, இன்சூரன்ஸ், தகுதிசான்று புதுப்பித்தல் தொகை அதிகமாக இருப்பதால் தொழில் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதேநேரம் வாடகைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அதிக தொகை கேட்க முடியவில்லை. அதையும் மீறி கேட்டாலும் அவர்கள் கொடுக்க தயாராக இல்லை. இதனால் சிரமத்துடன் தொழில் செய்து வருகிறோம். எனவே சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும்.
காய்கறிகளுக்கு கட்டணம் ரத்து
திண்டுக்கல் மாவட்ட காய்கறி விற்பனை வளாக செயலாளர் ஆறுமுகம்:- சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. எந்த ஊரிலும் கட்டணத்தை குறைத்ததாக தெரியவில்லை. இதனால் வாகனம் வைத்துள்ள அனைவரும் சிரமப்படுகின்றனர். இதில் விவசாயிகள் படும் சிரமம் சொல்லிமாளாது. வெயில், மழை பார்க்காமல் உழைக்கும் விவசாயிகள் உரிய விலை கிடைக்காதா? என்று விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர். காய்கறிகள், தானியங்களை வாடகை வாகனங்களில் ஏற்றி மார்க்கெட்டுக்கு செல்லும் போது சுங்கச்சாவடி கட்டணம் வேறு செலுத்த வேண்டியது இருக்கிறது. இது விவசாயிகளுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்துகிறது. அதேபோல் திண்டுக்கல்லில் இருந்து சென்னை, திருச்சி, தஞ்சை, மதுரை, நெல்லை உள்பட பல ஊர்களுக்கு வெங்காயம், காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன. அப்போது ஒவ்வொரு ஊரிலும் விதிக்கப்படும் சுங்கச்சாவடி கட்டணத்தால் காய்கறிகளின் விலை உயர்கிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே காய்கறி, தானியங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
சுங்கச்சாவடிகளை மூட வேண்டும்
கார் டிரைவர் சுரேஷ் (வேடசந்தூர் ஆத்துமேடு) :- நான் வேன் வைத்து ஓட்டி வருகிறேன். வெளியூருக்கு சென்று திரும்புவதற்கு எரிபொருளுக்கு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குவது போன்று, சுங்கச்சாவடி கட்டணத்துக்கும் குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டியது இருக்கிறது. சுங்கச்சாவடி கட்டணத்தால் காரில் செல்ல நினைப்பவர்கள் கூட பஸ், ரெயிலில் சென்றுவிடுகின்றனர். அந்த அளவுக்கு சுங்கச்சாவடி கட்டணம் கடுமையாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. வாகனம் வைத்துள்ள அனைவரும் சாலைவரி செலுத்தும் போது, சுங்கச்சாவடி தேவை இல்லாதது. எனவே சுங்கச்சாவடிகளை மூட வேண்டும்.
லாரி டிரைவர் முத்துக்குமார் (மதுரை கோச்சடை) :- மதுரையில் இருந்து கேரளா மாநிலம் கொச்சிக்கு லாரி ஓட்டி செல்கிறேன். சுங்கச்சாவடிகளால் பாதிப்புகள் அதிகமாக இருக்கிறது. ஒருசில சுங்கச்சாவடிகளில் நீண்ட நேரம் காத்துகிடக்க வேண்டி இருக்கிறது. தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை அகற்றினால் தான் டிரைவர்கள், வாகன உரிமையாளர்களுக்கு நன்மை கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுகிறது. அந்த கட்டணத்துக்கு செலுத்தப்படும் தொகை பொருட்களுக்கான போக்குவரத்து செலவில் சேர்க்கப்படுகிறது. எனவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு சுங்கச்சாவடி கட்டணமும் ஒரு காரணமாக இருக்கிறது. சுங்கச்சாவடிகள் இல்லாத நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.
வாடகை கார் டிரைவர் சவுபான்சேட் (வேடசந்தூர்) :- நான் 22 ஆண்டுகளாக வாடகை கார் ஓட்டி வருகிறேன். வாடகை வாகனம் ஓட்டும் தொழில் நலிவடைந்ததற்கு சுங்கச்சாவடி கட்டணமும் ஒன்றாகும். இந்த கட்டணத்தை செலுத்துவது யார்? என்று வாடகைக்கு வருவோருக்கும், டிரைவர்களுக்கும் இடையே பலத்த மல்லுகட்டு நடப்பது வழக்கமாகிவிட்டது. அந்த அளவுக்கு சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்து விட்டது. சுங்கச்சாவடி கட்டணத்தை குறைப்பதற்கு பதிலாக உயர்த்தி கொண்டே செல்கின்றனர். அதிலும் ஒருசில ஊர்களில் காலாவதியான சுங்கச்சாவடிகள் இருப்பதாக கூறுகின்றனர். மக்களை பாடாய்படுத்தும் சுங்கச்சாவடிகளை முறைப்படுத்தி, கட்டணத்தை குறைக்க வேண்டும். ஒவ்வொரு சுங்கச்சாவடியும் எத்தனை ஆண்டுகள் செயல்படும் என்று அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.