சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா?


சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா?
x
தினத்தந்தி 4 April 2023 6:45 PM GMT (Updated: 4 April 2023 6:47 PM GMT)

சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா? என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

கடலூர்

மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியாக பிரிந்து 1995-ல் தன்னாட்சி அதிகாரம் பெற்றது.

எல்லா மாநிலங்களையும் சாலைகள் மூலம் இணைத்து அதனை மேம்படுத்திப் பராமரிப்பது ஆணையத்தின் முக்கிய பணியாகும். சாலைப் போக்குவரத்து மட்டுமின்றி, அத்தியாவசிய சரக்குப் போக்குவரத்தையும் ஊக்குவிக்கத் தரமான சாலைகளை அமைத்துத் தர வேண்டியப் பொறுப்புகளுடன் ஆணையம் செயல்படுகிறது.

தனியாருக்கு குத்தகை

மத்திய அரசானது நான்கு வழி அல்லது ஆறு வழிச் சாலைகளை அமைத்து அவற்றைப் பராமரிக்க விதிமுறைகளுக்கு உட்பட்டு சுங்கச்சாவடிகளை (டோல்கேட்) நிறுவி தனியார் நிறுவனங்களிடம் குத்தகைக்கு விட்டு விடுகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் 566 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் 52 சுங்கச்சாவடிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி கடந்த 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் ஆண்டுதோறும் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் தற்போது 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது சுங்க கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும் அவை செயல்படுத்தப்படுவதில்லை. மாறாக மத்திய அரசிடம் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறி கட்டண உயர்வுக்கான அனுமதியை பெறுகின்றனர் என்று கனரக வாகன ஓட்டிகள் குற்றம் சொல்கிறார்கள்.

சுங்கக் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கக்கட்டணம் உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து வெளியிட்டு இருக்கிறார்கள். அது பற்றி காண்போம்.

பொதுமக்கள் மீது சுமை

கடலூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பிரகாஷ்:- கொரோனா பாதிப்புக்கு பிறகு எங்கள் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது வரும் புதிய டிப்பர் லாரிகளில் சென்சார் உள்ளது. இந்த சென்சாரில் ஏதேனும் ஒரு பிரச்சினை ஏற்பட்டதால், அதை சரி செய்வதற்காக உள்ளூர் மெக்கானிக் கடைகளுக்கு செல்ல முடியாது. சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தான் செல்ல வேண்டும். இதற்காக அதிக செலவு ஆகிறது. முன்பு ஒரு சிறிய பழுது நீக்கத்திற்கு ரூ.20 ஆயிரம் செலவாகிறது என்றால், நிறுவனத்திற்கு சென்றால் ரூ.50 ஆயிரத்தை தாண்டி செலவாகிறது. இதில் இருந்து மீள முடியாத நிலையில், தற்போது சுங்கச்சாவடி கட்டணத்தையும் மத்திய அரசு ஆண்டுதோறும் உயர்த்தி வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும். ஒரு இடத்திற்கு மணல், ஜல்லி ஏற்றிச்சென்றால், எவ்வளவு வாடகை நிர்ணயம் செய்வது என்று தெரியாத அளவுக்கு சுங்கச்சாவடிகள் அதிகம் உள்ளன. இந்த சுமையை பொதுமக்கள் மீது தான் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆகவே சுங்கச்சாவடிகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். ஒப்பந்தம் முடிந்தும் செயல்படும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும்.

குறைக்க வேண்டும்

கடலூர் வாடகை கார் ஓட்டுனர் கவிராசு:- சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் தான் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். முன்பு கடலூரில் இருந்து சென்னைக்கு சென்று வர சுங்கச்சாவடி கட்டணமாக ரூ.250 வரை செலவாகும். தற்போது ரூ.350 வரை செலவாகிறது.

இந்த தொகையை நாங்கள் வாடிக்கையாளர்களிடம் தான் வாங்க வேண்டிய நிலை உள்ளது. அப்போது எங்களுக்கும், வாடிக்கை யாளர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இதை தவிர்க்க சுங்கச்சாவடி கட்டணத்தை மத்திய அரசு குறைக்க வேண்டும். சுங்கச்சாவடிகளே இல்லை என்றால் எங்களை போன்ற வாடகை கார் ஓட்டுனர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

பொருட்களின் விலை உயரும்

நெல்லிக்குப்பம் அனைத்து தொழில் வர்த்தக சங்க செயலாளர் ஜெ.ராமலிங்கம்:- தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் வரலாறு காணாத வகையில் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வாகனங்களின் வாடகை கட்டணம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது. மேலும் சுங்கச்சாவடி கட்டணம் ஆண்டு தோறும் கட்டாயத்தின் பேரில் உயர்த்தப்படுவதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் சாபமாகும். இது மட்டும் இன்றி கட்டணம் உயர்த்தி உள்ள நிலையில் அடிப்படை வசதியான கழிவறை வசதிகள், வாகனங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதற்கு மாற்று ஏற்பாடுகள், விபத்து நேரிட்டால் உடனடி சிகிச்சை பெறுவதற்கு முன்னெச்சரிக்கை பணிகள் எதுவும் இல்லாதது வேதனைக்குரியதாகும். இது போன்ற நிலையில் சுங்க கட்டணம் வசூல் செய்வதற்கு கடும் நெருக்கடி அளித்தும், சுங்க கட்டணம் உயர்வதால் வாகன போக்குவரத்தும் குறைக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது தான் தற்போது நிலை. ஒரு பொருளை தயாரிக்கும் உற்பத்தியாளர்கள், அதனை விற்பனை செய்யும் வியாபாரிகள் விலை உயர்த்தினால், அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வரும் நிலையில் சுங்க கட்டணம் உயர்வதால் அடிப்படை பொருட்கள் விலை உயர்வதை யார் கண்டிப்பார்கள்? இதற்கு நிரந்தர தீர்வு என்ன? என்பதுதான் அனைவரின் கேள்வியாக உள்ளது. ஆகவே மத்திய அரசு நாளுக்கு நாள் புதிய சுங்கச் சாவடிகளை உருவாக்கி மக்கள் மீது தொடர்ந்து சுமை ஏற்படுத்தும் நிலையை முழுமையாக நிறுத்த வேண்டும்.

மூட வேண்டும்

விருத்தாசலம் நகர அனைத்து வர்த்தகர்கள் நலச்சங்க பொருளாளர் காசிம்சேட்டு:- சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு அவசியமற்றது. ஏற்கனவே சுங்கச்சாவடிகளை மூட வேண்டும், ஒப்பந்தம் முடிந்தும் வசூல் செய்து வரும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று ஆங்காங்கே பொதுமக்கள், பல்வேறு அமைப்பினரும் போராடி வருகின்றனர். வட இந்தியாவில் இது போன்ற சுங்கச்சாவடிகளே கிடையாது. தமிழ்நாட்டில் தான் நியாயமான முறையில் வரி செலுத்தி வருகிறோம். புதிய வாகனம் வாங்கும் போதே, சாலைவரியை வசூல் செய்து பிறகு தான் வாகனத்தை தருகிறார்கள். பிறகு ஒவ்வொரு 60 கிலோ மீட்டருக்கும் வரி வசூல் செய்வது, மிகவும் அபத்தமான செயல். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டிய காலத்தின் கட்டாயம்.

மாறுபட்ட கட்டணங்கள் வசூலிப்பது ஏன்?

சேத்தியாத்தோப்பு மினி லாரி டிரைவர் கலைமணி:- சுங்கச்சாவடி கட்டணத்தை தனியார் ஒப்பந்ததாரர்கள் வசூல் செய்கிறார்கள். ஆனால் அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் வாகன ஓட்டிகளிடம் அவமரியாதையாக நடந்து கொள்கிறார்கள். ஏதேனும் சந்தேகம் கேட்டால் கூட சொல்வதில்லை. சாலை வசதியும் ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. ஆனால் மாறுபட்ட கட்டணங்கள் வசலிக்கப்படுகிறது. அனைத்து சுங்க சாவடிகளிலும் ஒரே கட்டணத்தை வசூலிக்க வேண்டும். அதேபோல் சுங்கச்சாவடிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி இருக்க வேண்டும் என்று அரசு திட்டத்தில் உள்ளது. ஆனால் அவ்வாறு எந்த சுங்கச்சாவடிகளிலும் ஒப்பந்ததாரர்கள் நடைமுறைப்படுத்துவதில்லை. இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்.

அவதி

காட்டுமன்னார்கோவில் லாரி உரிமையாளர் சங்க கவுரவ தலைவர் ஜாகீர் உசேன்:- எங்கள் பகுதியில் சுமார் 80-க்கும் மேற்பட்ட லாரிகள் இயங்கி வருகிறது. தற்போது மத்திய அரசு திடீரென சுங்க வரி கட்டணத்தை அதிகப் படுத்தி உள்ளது. ஏற்கனவே லாரி உரிமையாளர்கள் தினந்தோறும் டீசல் விற்பனை உயர்வு, லாரி உதிரி பாகங்கள் விலையேற்றம், டிரைவர் சம்பளம் என பல்வேறு சிக்கல்களில் இருந்து வருவதால் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். மேலும் லாரிகள் இயங்கினாலும், இயங்காவிட்டாலும் ஆண்டு தோறும் அரசுக்கு செலுத்த வேண்டிய சாலை வரி, பசுமை வரி, காப்பீட்டுத்தொகை போன்ற வரிகளை செலுத்தி வருகிறோம். இந்த நிலையில் சுங்க கட்டணத்தை குறைக்காமல், திடீரென மத்திய அரசு உயர்த்தி உள்ளது. ஆகவே லாரி உரிமையாளர்கள் நலன் கருதி சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

தலை சுற்றுகிறது

விருத்தாசலம் கவிதா:- ஏற்கனவே சமையல் கியாஸ் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் உயர்ந்து விட்டது. தற்போது சுங்கச்சாவடி கட்டணத்தையும் உயர்த்தி உள்ளதால், மேலும் விலை உயரும். ரெயில், பஸ்களில் டிக்கெட் கிடைக்காமல் வாடகை கார் பிடித்து வெளியூர்களுக்கு பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்போது சுங்கச்சாவடி கட்டணத்தை கேட்டால் தலை சுற்றதான் செய்கிறது. இது வாடகையும் கொடுத்து, சுங்கச்சாவடி கட்டணத்தை சேர்த்து கொடுப்பது சிரமமாக உள்ளது. ஆகவே இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

வாழ்வாதாரம் பாதிப்பு

சிதம்பரம் வர்த்தக சங்க பொருளாளர் சிவராம வீரப்பன்:- சுங்கச்சாவடி கட்டண உயர்வை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கட்டண உயர்வு என்பது ஏதோ ஒரு தனி மனிதர்களை மட்டும் பாதிப்பதில்லை. இது ஒட்டுமொத்த நாடு, வணிகத்தை பாதிக்கிறது. இதனால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். திடீரென ரூ.20, ரூ.40, ரூ.80 என்று ஏற்றும் போது, அது வரக்கூடிய காய்கறி, பழங்கள், மளிகை உள்ளிட்ட அனைத்து பொருட் களின் விலையும் உயரும். இந்த கட்டண உயர்வு ஏழை, எளிய, நடுத்தர மக்களையும், அவர்களின் வாழ் வாதாரத்தையும் மிகப்பெரிய அளவில் பாதிக்கும். எங்களுடைய ஒரே கோரிக்கை. நாட்டில் சுங்கச்சாவடி என்பதே இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும். இதுவே மக்களுக்கு பயன் அளிக்கும். இதில் அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு மக்கள் நலனை காக்க வேண்டும்.


Next Story