சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா?


சுங்கச்சாவடி கட்டண உயர்வு ஏற்புடையதா?
x

மத்திய அரசின் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியாக பிரிந்து 1995-ல் தன்னாட்சி அதிகாரம் பெற்றது. எல்லா மாநிலங்களையும் சாலைகள் மூலம் இணைத்து அதனை மேம்படுத்திப் பராமரிப்பது ஆணையத்தின் முக்கிய பணியாகும். சாலைப் போக்குவரத்து மட்டுமின்றி, அத்தியாவசிய சரக்குப் போக்குவரத்தையும் ஊக்குவிக்கத் தரமான சாலைகளை அமைத்துத் தரவேண்டிய பொறுப்புகளுடன் ஆணையம் செயல்படுகிறது.

புதுக்கோட்டை

தனியாருக்கு குத்தகை

மத்திய அரசானது நான்கு வழி அல்லது ஆறு வழிச் சாலைகளை அமைத்து அவற்றை பராமரிக்க விதிமுறைகளுக்கு உட்பட்டு சுங்கச்சாவடிகளை (டோல்கேட்) நிறுவி தனியார் நிறுவனங்களிடம் குத்தகைக்கு விட்டுவிடுகிறது. அந்தவகையில் நாடு முழுவதும் 566 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் 52 சுங்கச்சாவடிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய ஒப்பந்தப்படி கடந்த 1992-ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008-ம் ஆண்டு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் ஆண்டுதோறும் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தற்போது 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது சுங்க கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என்ற விதி இருந்தாலும் அவை செயல்படுத்தப்படுவதில்லை. மாறாக மத்திய அரசிடம் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கூறி கட்டண உயர்வுக்கான அனுமதியை பெறுகின்றனர் என்று கனரக வாகன ஓட்டிகள் குற்றம் சொல்கிறார்கள்.

சுங்கக் கட்டண உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கக்கட்டணம் உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரக்கூடும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து வெளியிட்டு இருக்கிறார்கள். அதுபற்றி காண்போம்.

விலைவாசி அதிகரிக்கும்

புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழக தலைவர் சாகுல் அமீது:- சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வால் லாரிகளின் வாடகை உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளனர். வணிக நிறுவனங்களுக்கு பொருட்கள் அனைத்தும் லாரிகள் மூலமாக கொண்டு வரப்படுகிறது. இதனால் லாரி வாடகை கட்டணம் உயரும் போது விலைவாசி அதிகரிக்கும். சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு என்பது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும். பொதுவாக கார்களில் சாலை மார்க்க பயணம் செய்யும் போது சுங்கச்சாவடிகளில் செலுத்தும் கட்டணமானது, ரெயில் பயண கட்டணத்தை விட அதிகமாக வந்துவிடுகிறது. சுங்கச்சாவடிகளின் ஒப்பந்த காலம் முடிந்து விட்டது. இனி சுங்கச்சாவடிகளே தேவையில்லை. தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளை அகற்றி விடலாம்.

காய்கறி விலை உயர்வு

புதுக்கோட்டை பெரியமார்க்கெட் காய்கனி, இலை வியாபாரிகள் சங்க செயலாளர் அழகு சீனிவாசன்:- சுங்கச்சவாடிகளில் கட்டணம் உயர்வால் லாரிகள், சரக்கு வேன்கள் வாடகை உயர்ந்துள்ளது. இதனால் காய்கறிகள் விலையும் கடந்த ஓரிரு நாட்களாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. தற்போது சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்வால் மேலும் விலைவாசி உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடைபெற உள்ளது. இதில் நாங்களும் பங்கேற்க உள்ளோம். எனவே கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்

விராலிமலை தாலுகா, நரியபட்டி கிராமத்தை சேர்ந்த மருதைவீரன்:- பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து உள்ளன. குறிப்பாக அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்பட அனைத்து உணவுப்பொருட்களின் விலையும் அதிகரித்து உள்ளன. இந்த நிலையில் தற்போது சுங்கக்கட்டண அதிகரிப்பால் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்க கூடும். வெளியூர்களுக்கு காரில் செல்வதாக இருந்தால் டீசல், பெட்ரோலுக்கு இணையாக சுங்கக்கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கிறது. மேலும் அவசர கால நேரத்தில் பிரசவம் மற்றும் மருத்துவமனைக்கு செல்லும்போது கார், ஆட்டோ உள்ளிட்ட வாகன கட்டணமும் அதிகரிக்கும். எனவே மத்திய அரசு உயர்த்தப்பட்ட சுங்க கட்டணத்தை ரத்து செய்வதுடன், காலாவதியான சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும்.

வருவாய் இழப்பு

விராலிமலையை சேர்ந்த பயணிகள் வேன் உரிமையாளர் சந்தோஷ்:- சுங்கக்கட்டணம் உயரும்போது கார் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் சார்பில் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி வருகிறோம். ஆனால் மத்திய அரசு சுங்க கட்டணத்தை உயர்த்திய வண்ணம் உள்ளது. விராலிமலை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பூதகுடி சுங்கச்சாவடியில் தற்போது சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வருமானம்தான் தற்போது வருகிறது. ஆனால் செலவு என்று பார்க்கும்போது அதிகமாக உள்ளது. இதனை சவாரி வரும் மக்களிடம் கூறினால் அது அவர்களுக்கு புரிவதில்லை. இதனால் எங்களுக்கு வருவாய் இழப்புதான் ஏற்படுகிறது. சரி இந்த கட்டண உயர்வால் அரசு அறிவித்த அடிப்படை வசதிகள் ஏதேனும் மேம்பட்டு இருக்கிறதா? என்று பார்த்தால் இல்லை. ஒவ்வொரு முறை நாங்கள் சவாரி செல்லும்போதும் சாலைகளில் உள்ள குறைகளை சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் தெரிவித்த வண்ணம்தான் இருக்கிறோம். ஆனால் அதில் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. நாகமங்கலம், அளுந்தூர், மணிகண்டம் ஆகிய பகுதிகளில் செல்லும்போது வாகன விபத்துகள் ஏற்படும் வகையில் சாலை உள்ளது. அதுமட்டுமின்றி வசூலிக்கும் கட்டணத்திற்கு தகுந்தாற்போல் அடிப்படை வசதிகள் செய்துகொடுத்தால் நன்றாக இருக்கும். அதாவது சுங்கச்சாவடியில் குடிநீர் வசதி மற்றும் அவசரத்திற்கு போன் செய்யும் வகையில் எஸ்.ஓ.எஸ் வசதி ஆகியவை முறையாக பராமரிக்கப்படுவதில்லை.

இருமடங்கு கட்டணம் வசூல்

முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்த முபாரக்:- எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஏற்கனவே, சுங்கக்கட்டணம் அதிகளவில் வசூலிக்கப்படுவதால் கடும் அதிருப்தியில் இருக்கும் மக்களுக்கு இந்த புதிய கட்டண உயர்வு பெரும் அதிர்ச்சியை அளித்திருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வர்த்தகர்களும், தொழில்துறையினரும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தச்சூழலில், சுங்கச்சாவடி கட்டண உயர்வு மக்களின் தலையில் மேலும் சுமையை ஏற்படுத்தும். தற்போது நாட்டில் பெரும்பாலான வாகனங்கள் 'பாஸ்ட் டேக்' முறைக்கு வந்துள்ளன. பாஸ்ட் டேக் முறையின் கீழ் வராத வாகனங்களிடமிருந்து இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.

வாடகை அதிகரிக்கும்

திருவாக்குடி ஊராட்சி காடங்குடி கிராமத்தைச் சேர்ந்த சுகுமாரி:- ஆண்டுதோறும் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 15 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது. குறிப்பாக புதுக்கோட்டையில் இருந்து கன்னியாகுமரி சென்று வர வேண்டுமென்றால் தற்போது கூடுதலாக ரூ.100 முதல் ரூ.200 வரை செலுத்த வேண்டி உள்ளது. இதனால் லாரி, கார் உள்ளிட்டவைகளின் வாடகையும் அதிகரிக்கும். இதனால் மளிகை, காய்கறி, மருந்து, சிமெண்டு, இரும்பு கம்பிகள் என அனைத்து பொருட்களின் விலையும் உயர வாய்ப்பு உள்ளது. இந்த விலை உயர்வு அனைத்தும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் தலையில் தான் விழும். எனவே மத்திய அரசு தற்போது உயர்த்திய சுங்கச்சாவடி கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்.

காலாவதியான சுங்கச்சாவடிகள்

மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ்:- சுங்கக் கட்டணத்தை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே செல்வதால் லாரி தொழில் நலிவடைந்து வருகிறது. இதுதவிர அத்தியாவசிய பொருட்களும் லாரிகளில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதின் மூலம் சுங்கக் கட்டண உயர்வால் விலைவாசி அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. சென்னை மதுரவாயல்-தாம்பரம் செல்லக்கூடிய புறவழிச்சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக முறையாக மின்சார விளக்கு வசதி இல்லாத காரணத்தால், விபத்துகள் மற்றும் வழிப்பறி நாள்தோறும் நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். அதேபோல் காலாவதியான சுங்கச்சாவடிகளை அப்புறப்படுத்த வேண்டும்.

அதிகாரிகள் விளக்கம்

சுங்கச்சாவடி அதிகாரிகள்:- மாநிலம் முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்து உள்ளது. இதில் இலகுரக வாகனங்களுக்கு ரூ.5-ம், பஸ், லாரி, 3 ஆக்சில், 4 ஆக்சில் மற்றும் மல்டி ஆக்சில் ஆகிய வாகனங்களுக்கு ரூ.10-ம் உயர்த்தப்பட்டு உள்ளது. வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் சாலைகள் முறையாக பராமரிக்கப்படுகிறது. அதேபோல் சாலை விளக்குகளும் உடனுக்குடன் சரி செய்யப்பட்டுதான் வருகின்றன. வாகன ஓட்டிகளுக்கு முறையான கழிப்பறை வசதிகள் செய்து தருவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story