தியேட்டர்களுக்கு சென்று சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறதா?


தியேட்டர்களுக்கு சென்று சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறதா?
x

சினிமா பொழுதுபோக்கு மட்டுமல்ல, நமது வாழ்க்கையோடும் உணர்வோடு ஒன்றிப்போன ஒன்று.

புதுக்கோட்டை

திரையரங்கம்

கீற்றுக்கொட்டகையில் மணல் தரையில் அமர்ந்து படம் பார்த்தது அந்தக்கால தலைமுறையினருக்கு ஒரு சுகம் என்றால் அழகிய வடிவமைப்புடன் கூடிய பிரமாண்டமான கட்டிடம், சொகுசான இருக்கை, குளிர்சாதன வசதி, மனதை மயக்கும் சவுண்ட் சிஸ்டம் என பல்வேறு நவீன தொழில்நுட்பத்துடன் படம் பார்ப்பது இன்றைய தலைமுறைக்கு சுகமாக உள்ளது. மாட்டு வண்டியில் விளம்பர தட்டிமூலம் கிராமம் கிராமமாக சென்று திரையிடப்படும் படம் குறித்து விளம்பரம் செய்வது, சினிமா போஸ்டர் அச்சடித்து பட்டி தொட்டியெங்கும் ஒட்டி விளம்பரப்படுத்துவது, படம் தொடங்குவதற்கு முன்பாக திரையரங்க வாசலில் பாடல் ஒலிப்பது, படப்பெட்டி வருவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே தியேட்டர் முன்பு கூடி இதோ பெட்டி வந்து விட்டது, அதோ பெட்டி வந்து விட்டது என கண்கள் பூக்க காத்திருந்தது என அமர்க்களமாக இருந்த திரையரங்க வரலாறு நவீன தொழில்நுட்பத்தால் ஆர்ப்பரிப்பு இல்லாமல் அடங்கி போனது.

சுகமான நினைவுகள்

அம்மா, அப்பாவின் கையை பிடித்து கூட்டத்தோடு கூட்டமாக வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து காத்திருந்து படம் பார்த்த அந்த நினைவுகள் என்றும் சுகமான நினைவுகள்தான்.

காதலர்கள், திருமணமான இளம் தம்பதிகள், பள்ளி, கல்லூரி பருவ நண்பர்கள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்று கூடி படம் பார்த்ததும் நம் மனதில் இருந்து என்றும் நீங்காது.

100 நாட்கள் ஓடி சாதனை, 150 நாட்கள் ஓடி சாதனை என திரைப்படத்தின் சாதனை வரலாறு சொல்லும் வாசகங்கள் எல்லாம் இப்போதைய தலைமுறைக்கு அதிசயமாகவே தோன்றும்.

இன்றைக்கும் சொந்த ஊர்களுக்கும், அடிக்கடி சென்று வந்த நகரங்களுக்கும் செல்லும் போது அங்கிருந்த தியேட்டர்களும், படங்களும் நீங்கா நினைவுகளாக நெஞ்சில் இருக்கும்.

விரல் நுனியில் தொழில்நுட்பம்

சமீபகாலமாக தியேட்டர் இருந்த இடங்கள் வணிக வளாகங்களாக குடியிருப்புகளாக மாறியிருப்பதை காணும்போது எதையோ ஒன்றை இழந்தது போன்று ஏதோ ஒரு சோகம் நம்மை தொற்றிக்கொள்வதையும் மறுக்க முடியாது.

தமிழக அரசியலை மாற்றிய வெற்றி சரித்திரங்களை எழுதிய பள்ளிக்கூடங்களாக அன்றைய திரையரங்குகள் இருந்தன என்பதும் நிதர்சனமான உண்மை.

விரல் நுனியில் எங்கிருந்தும் நாம் விரும்பும் படத்தை பார்க்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன திரையரங்குகளுக்கு இன்னும் அதே மவுசு இருக்கிறதா? திரையரங்குகளை நோக்கிய மக்கள் பயணம் குறைகிறதா? என்பது குறித்து சினிமா ரசிகர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். அதன் விவரம் வருமாறு:-

ரசிகர்கள் வருகை குறையவில்லை

புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு தியேட்டர் மேலாளர் மணிகண்டன்:- தியேட்டர்களுக்கு இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வமாக தான் வருகின்றனர். அதிலும் குறிப்பாக கல்லூரி மாணவ-மாணவிகள் அதிகம் பேர் வருகை தருகின்றனர். அவர்கள் விரும்பும் நடிகர்களின் படம் வெளியானால் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பத்தோடு படம் பார்க்க வருகிறவர்கள் அதிகம். தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகை குறையவில்லை.

பிரமாண்டத்தை உணர முடியும்

தமிழ்நாடு நடப்பு வினியோகஸ்தர்கள் சங்க திருச்சி ஏரியா பொறுப்பாளர் காசி விஸ்வநாதன்:-

திரையரங்குகளில் மக்கள் படம் பார்க்க நல்ல வரவேற்பு இருக்கிறது. நல்ல படமாக இருந்தால் நிச்சயம் வசூல் கூடும். சுமாரான படங்களுக்கு வரவேற்பு இருக்காது. இப்போது ரசிகர்களே ஒரு படத்தின் இயக்குனர் யார்?, கதாநாயகன் யார்?, படத்தின் மைய கரு என்ன? என்பதை பகுப்பாய்வு செய்து கொண்டுதான் படத்துக்கே வருகிறார்கள். எங்களைவிட அவர்கள் கூடுதல் தகவல்களை தெரிந்து வைத்து இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான லவ்டுடே என்ற படத்தில் பெரிய கதாநாயகர்கள் யாரும் நடிக்கவில்லை. ஆனால் படம் நன்றாக ஓடியது. செல்போனில் படம் பார்க்க முன்பு ஆர்வம் இருந்தது உண்மை தான். ஆனால் அது சில காலம் மட்டும் தான். இப்போது டி.வி.யில் படம் போட்டாலே பார்ப்பது கிடையாது. பொன்னியின் செல்வன், பாகுபலி போன்ற படங்களின் பிரமாண்டத்தை திரையரங்கிற்கு வந்து பார்த்தால் மட்டுமே உணர முடியும். நல்ல படமாக இருந்தால் அது பெரிய படம், சிறிய படம் என்று இல்லாமல் நன்றாக ஓடும். சென்னை முதல் கன்னியாகுமரி வரை படங்களுக்கான ரிசல்ட் ஒரேமாதிரி தான் இருக்கும். அதை வைத்தே ஒரு படத்துக்கு மக்கள் எந்த அளவுக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

டிக்கெட் கட்டணம் அதிகம்

அரிமளத்தை சேர்ந்த கல்லூரி மாணவி நிவேதா:- சினிமா தியேட்டர்களின் கட்டணம் உச்சத்தை தொட்டுவிட்டது. ஒரு குடும்பத்தில் 4 பேர் சினிமா தியேட்டருக்கு சென்று படம் பார்த்து விட்டு வர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூ.1,000 தேவை. தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் ஏழை மற்றும் நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள் தியேட்டருக்கு சென்று படம் பார்ப்பது என்பது சாத்தியம் இல்லாத காரியம். மேலும் தற்போது பள்ளி-கல்லூரிகளில் அதிகளவிலான பாடங்கள் நடத்தப்படுவதால் அதை படிப்பதற்கு போதுமான நேரம் கிடைப்பதில்லை. மேலும் தற்போது உலகமே கையில் அடக்கம் என்பதை போல் செல்போன் வந்துவிட்டது. செல்போனில் இருந்து வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், மெயில் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் போதுமான செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கிடைத்து விடுகின்றன. அதனால் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுவதில்லை.

திருமண மண்டபங்கள்

கறம்பக்குடியை சேர்ந்த சாய்ராம்:- நாகரீகத்தின் வளர்ச்சி மற்றும் விஞ்ஞானத்தின் வியத்தகு முன்னேற்றத்தால் வீழ்ந்து விட்ட தொழில்களில் திரை அரங்கங்களும் ஒன்று. திரைப்படம் எனும் மாய பிம்பத்தில் மூழ்கி திரையரங்குகளின் வாசலில் காத்து கிடந்த காலம் உண்டு. உலகம் உள்ளங்கையில் சுருங்கி விட்ட பின்னர் கிராம பகுதிகளில் கனவு பட்டறைகளாக திகழ்ந்த டூரிங் டாக்கீஸ்கள் காணாமல் போய்விட்டன. பெரும்பாலான சினிமா தியேட்டர்கள் திருமண மண்டபங்களாக மாற்றம் கண்டுவிட்டன. நகர பகுதிகளில் மட்டும் முன்னணி நடிகர்களின் ரசிகர்களால் தியேட்டர்கள் தாக்கு பிடிக்கின்றன. சாமானியர்கள் நினைத்து பார்க்க முடியாத வகையில் டிக்கெட் விலை, தின்பண்டங்கள் விலை இருப்பதும் திரையரங்குகளுக்கு செல்லும் எண்ணத்தை மறக்கடிக்கிறது. புதிய படங்களை வீட்டில் இருந்தபடியே பார்க்கும் வசதி வந்து விட்டாலும் அந்த காலம் போல் தியேட்டர்களில் சினிமா பார்த்த மகிழ்ச்சி கிடைப்பதில்லை. இன்றைய இளைய தலைமுறையினர் இழந்து விட்ட சந்தோஷங்களில் இதுவும் ஒன்று.

கல்லூரி தோழிகளுடன்...

புதுக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி வைஷ்ணவி:- சினிமா தியேட்டருக்கு செல்வது என்றாலே ஒரு ஆர்வம் தான். எங்களுக்கு பிடித்தமான நடிகர்கள் படம் வெளியாகும் போது கல்லூரி தோழிகளுடன் சேர்ந்து தியேட்டர்களில் படம் பார்ப்பது உண்டு. வாரத்தின் இறுதி நாட்களில் கல்லூரி முடிந்த பின் செல்வது உண்டு. தற்போது சமூகவலைத்தளங்களில் புதிய திரைப்படங்கள் பகுதி, பகுதியாக வெளியானாலும் அதனை பார்ப்பது உண்டு. செல்போனில் படங்களை பார்ப்பதை விட தியேட்டரில் சென்று பார்க்கத்தான் பிடிக்கும். பொருளாதார ரீதியாக பார்க்கும் போது தனிப்பட்ட முறையில் அதிகம் படம் பார்க்க செல்வது கிடையாது.

தின்பண்டங்களின் விலையை குறைக்க வேண்டும்

அன்னவாசலை சேர்ந்த மோகன்குமார்:- குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சினிமா தியேட்டர்களில் படம் பார்ப்பது அனைவருக்கும் பிடித்த பொழுது போக்காகும். என்னதான் ஓ.டி.டி. தளங்கள் பெருகினாலும் தியேட்டர்களில் வந்து படம் பார்ப்பது என்பது அலாதியான அனுபவம். ஆனால் திரைப்பட டிக்கெட்டுகளுக்கு செலவழிப்பதை விட தின்பண்டங்களுக்கு அதிக செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இதனால் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் ஆசையே போய்விடுகிறது. எனவே இதன் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story