தியேட்டர்களுக்கு சென்று சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறதா? ரசிகர்கள் கருத்து


தியேட்டர்களுக்கு சென்று சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறதா? ரசிகர்கள் கருத்து
x
தினத்தந்தி 9 April 2023 8:01 PM GMT (Updated: 10 April 2023 9:49 AM GMT)

தியேட்டர்களுக்கு சென்று சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறதா? என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரியலூர்

சினிமா பொழுதுபோக்கு மட்டுமல்ல, நமது வாழ்க்கையோடும் உணர்வோடு ஒன்றிப்போன ஒன்று. கீற்றுக்கொட்டகையில் மணல் தரையில் அமர்ந்து படம் பார்த்தது அந்தக்கால தலைமுறையினருக்கு ஒரு சுகம் என்றால் அழகிய வடிவமைப்புடன் கூடிய பிரமாண்டமான கட்டிடம், சொகுசான இருக்கை, குளிர்சாதன வசதி, மனதை மயக்கும் சவுண்ட் சிஸ்டம் என பல்வேறு நவீன தொழில்நுட்பத்துடன் படம் பார்ப்பது இன்றைய தலைமுறைக்கு சுகமாக உள்ளது.

மாட்டு வண்டியில் விளம்பர தட்டிமூலம் கிராமம் கிராமமாக சென்று திரையிடப்படும் படம் குறித்து விளம்பரம் செய்வது, சினிமா போஸ்டர் அச்சடித்து பட்டி தொட்டியெங்கும் ஒட்டி விளம்பரப்படுத்துவது, படம் தொடங்குவதற்கு முன்பாக திரையரங்க வாசலில் பாடல் ஒலிப்பது, படப்பெட்டி வருவதற்கு பல மணி நேரங்களுக்கு முன்பே தியேட்டர் முன்பு கூடி இதோ பெட்டி வந்து விட்டது அதோ பெட்டி வந்து விட்டது என கண்கள் பூக்க காத்திருந்தது என அமர்க்களமாக இருந்த திரையரங்க வரலாறு நவீன தொழில்நுட்பத்தால் ஆர்ப்பரிப்பு இல்லாமல் அடங்கி போனது.

சுகமான நினைவுகள்

அம்மா அப்பாவின் கையை பிடித்து கூட்டத்தோடு கூட்டமாக வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து காத்திருந்து படம் பார்த்த அந்த நினைவுகள் என்றும் சுகமான நினைவுகள்தான்.

காதலர்கள், திருமணமான இளம் தம்பதிகள், பள்ளி, கல்லூரி பருவ நண்பர்கள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒன்று கூடி படம் பார்த்ததும் நம் மனதில் இருந்து என்றும் நீங்காது.

100 நாட்கள் ஓடி சாதனை, 150 நாட்கள் ஓடி சாதனை என திரைப்படத்தின் சாதனை வரலாறு சொல்லும் வாசகங்கள் எல்லாம் இப்போதைய தலைமுறைக்கு அதிசயமாகவே தோன்றும்.

இன்றைக்கும் சொந்த ஊர்களுக்கும், அடிக்கடி சென்று வந்த நகரங்களுக்கும் செல்லும் போது அங்கிருந்த தியேட்டர்களும், படங்களும் நீங்கா நினைவுகளாக நெஞ்சில் இருக்கும்.

விரல் நுனியில் தொழில்நுட்பம்

சமீபகாலமாக தியேட்டர் இருந்த இடங்கள் வணிக வளாகங்களாக குடியிருப்புகளாக மாறியிருப்பதை காணும்போது எதையோ ஒன்றை இழந்தது போன்று ஏதோ ஒரு சோகம் நம்மை தொற்றிக்கொள்வதையும் மறுக்க முடியாது.

தமிழக அரசியலை மாற்றிய வெற்றி சரித்திரங்களை எழுதிய பள்ளிக்கூடங்களாக அன்றைய திரையரங்குகள் இருந்தன என்பதும் நிதர்சனமான உண்மை.

விரல் நுனியில் எங்கிருந்தும் நாம் விரும்பும் படத்தை பார்க்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில் மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிப்போன திரையரங்குகளுக்கு இன்னும் அதே மவுசு இருக்கிறதா? திரையரங்குகளை நோக்கிய மக்கள் பயணம் குறைகிறதா? என்பது குறித்து தியேட்டர் உரிமையாளர்கள், வினியோகஸ்தர்கள், சினிமா ரசிகர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

அதன் விவரம் வருமாறு:-

காலம் மாறிவிட்டது

விக்கிரமங்கலம் அருகே நாகமங்கலத்தை சேர்ந்த குடும்பத் தலைவி பத்மாவதி:- ஒவ்வொருவரும் குடும்பத்தோடு தியேட்டர்களுக்கு சென்று சினிமா பார்த்த காலம் உண்டு. அப்போது பொழுதுபோக்கு அம்சங்களில் சினிமா பார்ப்பதற்கு முதலிடம் இருந்தது. ஆனால் தற்போது தியேட்டர்களையே வீடுகளுக்கு கொண்டு வந்ததுபோல் படம் பார்க்கும் காலம் வந்துவிட்டது. வீடுகளில் உள்ள தொலைக்காட்சியில் 24 மணி நேரமும் திரைப்படங்கள், பெண்கள் விரும்பும் நாடகங்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்களுக்கென்று தனித்தனி நிகழ்ச்சிகள் என பெரும்பாலும் பொழுதுகள் கழிந்துவிடுகிறது. இதனால் தியேட்டர்களுக்கு குடும்பத்துடன் சென்று சினிமா பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தது, தற்போது மாறிவிட்டது. குடும்பத்துடன் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றால், அதிக செலவு ஏற்படுவதும் இதற்கு ஒரு காரணம். ஆனால் எவ்வளவுதான் நவீன சாதனங்கள் வந்தாலும், தியேட்டர்களுக்கு சென்று குடும்பத்துடன் சினிமா பார்த்ததை எண்ணும்போது, மகிழ்ச்சி அளிப்பதாகவே இருக்கிறது.

தியேட்டரில் பார்ப்பதே மகிழ்ச்சி

அரும்பாவூரை சேர்ந்த சரண்யா:- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பலர் தியேட்டருக்கு செல்லாமல் வீடுகளில் திருட்டு வி.சி.டி. மூலம் திரைப்படங்களை பார்த்தனர். தற்போது திரைப்படங்கள் வெளியானவுடன் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யும் நிலை இருந்தாலும், அதையும் தாண்டி பலர் தியேட்டரில் சென்று படம் பார்க்கின்றனர். இதனால் தற்போது தியேட்டர்களில் சென்று படம் பார்க்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது என்ற கூற வேண்டும். மேலும் தியேட்டர்களும் தற்போது நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய திரைப்படங்கள் வெளிவந்தவுடன் தியேட்டரில் சென்று பார்த்தால் மட்டுமே திருப்தி ஏற்படுகிறது. எவ்வளவு தான் செல்போன், தொலைக்காட்சிகளில் படம் பார்த்தாலும், தியேட்டரில் சென்று உறவினர்கள் மற்றும் தோழிகளோடு அமர்ந்து படம் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியையே தருகிறது. அந்த அனுபவம் வீட்டில் படம் பார்க்கும்போது கிடைப்பதில்லை.

செல்போனில் சினிமா

உடையார்பாளையத்தை சேர்ந்த சங்கர்:- ஒரு காலத்தில் தியேட்டருக்கு சென்றால் மட்டுமே படம் பார்க்க முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் செல்போனிலேயே பலர் சினிமா பார்க்கும் நிலை உள்ளது. தியேட்டரில் புதிய படம் வெளியான அன்றே இணையதளத்தில் அந்த படத்தை பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்களும் உள்ளனர். மேலும் புதிய படங்கள் சில நாட்களிலேயே ஓ.டி.டி. தளங்களில் வெளியாகிறது. பண்டிகை நாட்களில் தொலைக்காட்சிகளிலும் புதிய படங்களை ஒளிபரப்புகின்றனர். மேலும் தியேட்டர்களில் கட்டணமும் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதுபோன்றவற்றால் தியேட்டர்களுக்கு சென்று சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

இளைய தலைமுறையினரின் விருப்பம்

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள பிரபல திரையரங்கத்தின் உரிமையாளர் அரிமா ராஜாராம்:- திரையரங்கத்திற்கு வந்து சினிமா பார்க்கும் ஆர்வம் மக்களிடத்தில் குறையவில்லை. நல்ல தரமான சினிமாக்களை மக்கள் மிகவும் ஆதரிக்கிறார்கள். சிறிய ரக படங்களை மக்கள் அதிகம் ஆதரிப்பதில்லை. படங்கள் பற்றாக்குறை காரணமாக ஆண்டுக்கு ஏறத்தாழ 320 நாட்களே திரையரங்கில் திரையிட முடிகிறது. மீதமுள்ள நாட்களுக்கு புதிதாக ரிலீஸ் ஆகும் சினிமாக்களின் பற்றாக்குறை உள்ளது. தரமான படங்களாக இருப்பின் பல நாட்கள் தொடர்ந்து திரையிடப்படுகிறது. பொன்னியின்செல்வன் போன்ற படங்கள் நீண்டநாள் திரையிடப்பட்டன. மக்களின் வரவேற்பு எதிர்பார்த்த அளவிற்கு மேல் இருந்தது. வசூலும் நன்றாக இருந்தது. ஓ.டி.டி., யூடியூப் போன்ற தளங்களில் திரையங்களில் ஏற்கனவே திரையிடப்பட்டு 3 அல்லது 4 வாரங்கள் கழித்து மீண்டும் ஒளிபரப்பினாலும், இளைய தலைமுறையினர் தியேட்டர்களுக்கு வந்து சினிமா பார்ப்பதையே அதிகம் விரும்புகின்றனர். நவீன வசதிகளுடன், திரையரங்க பராமரிப்பும் மிக அவசியமாக தேவைப்படுகிறது. சினிமா தயாரிப்பாளர்கள் பெரிய பட்ஜெட் படங்கள், திரையரங்குகளில் திரையிடப்படுவதையே பெரிதும் விரும்புகின்றனர். சிறிய பட்ஜெட் சினிமா தயாரிப்பாளர்கள் ஓ.டி.டி. போன்ற இணையதள வழி திரையிடலுக்கு செல்கின்றனர். தமிழ்நாட்டில் இன்னும் அதிகமான தரமான படங்கள் வெளிவந்தால், மக்கள் திரையரங்கத்திற்கு வந்து விரும்பி பார்ப்பார்கள். தரமான படங்களை ரிலீஸ் செய்வதற்கு சினிமா இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் முன் வர வேண்டும்.

நல்ல படங்களுக்கு வரவேற்பு

அரியலூரில் ஒரு தியேட்டரை குத்தகைக்கு எடுத்து நடத்தி வரும் கருப்பையா:- தற்போதைய காலகட்டத்தில் தியேட்டருக்கு பொதுமக்கள் வருவது குறைந்துவிட்டது. சிறிய நடிகர்களின் படங்களை, பொதுமக்கள் அதிக அளவில் தியேட்டர்களுக்கு வந்து பார்ப்பதில்லை. பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது 2 வாரங்களுக்கு ரசிகர்கள், பொதுமக்கள் அதிக அளவில் வந்து தியேட்டர்களில் சினிமா பார்க்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில் தியேட்டரில் படங்களின் மூலம் கிடைக்கும் வருவாயை விட கேண்டின் மற்றும் பார்க்கிங் ஏரியாவில் கிடைக்கும் வருவாயை கொண்டு செலவுகளை ஈடு செய்ய வேண்டியுள்ளது. நல்ல படங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு, வரவேற்பு தருகிறார்கள். கடந்த காலங்களில் ஏப்ரல், மே மாதங்களில் தேர்வுகள் முடிவடைந்த பின்னர், தியேட்டருக்கு வருவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடங்கி விட்டதால், அந்த அளவுக்கு தியேட்டர்களுக்கு கூட்டம் வருவதில்லை. மேலும் தற்போது பெரும்பாலான தியேட்டர்களை உரிமையாளர்கள் நடத்துவதில்லை. குத்தகைக்கு எடுத்தவர்களே நடத்தி வருகிறார்கள். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிறார்கள். நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருந்தால் பெரிய பட்ஜெட்டாக இருந்தாலும், சிறிய பட்ஜெட்டாக இருந்தாலும் பொதுமக்கள் அந்த படத்தை தியேட்டரில் பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.


Next Story