8 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கற்றல் இடைவெளிக்கு தீர்வு 'எண்ணும், எழுத்தும்' திட்டம் இலக்கை நோக்கி செல்கிறதா? ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்து


8 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் கற்றல் இடைவெளிக்கு தீர்வு  எண்ணும், எழுத்தும் திட்டம் இலக்கை நோக்கி செல்கிறதா?  ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்து
x

‘எண்ணும், எழுத்தும்' திட்டம் இலக்கை நோக்கி செல்கிறதா? என்பது குறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சேலம்

கொரோனா நோய்த்தொற்று குறைந்தபோதிலும், அதனால் விளைந்த பாதிப்புகள் ஒவ்வொரு துறையிலும் மறைந்தே இருக்கத்தான் செய்கின்றன.

கற்றல் இடைவெளி

தொழில், கல்வி, சுகாதாரத்தில் அதன் தாக்கம் பெரிய அளவில் இருந்து வருவதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக நாம் அனுபவப்பூர்வமாக உணர்ந்து வருகிறோம். அதில் இருந்து மீள மத்திய, மாநில அரசுகளும் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

கல்வியை பொறுத்த அளவில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் ஆரம்ப கல்வியை தொடங்கும் மாணவர்களின் கல்வித்திறனே அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதை பல்வேறு தரப்பிலான ஆய்வு முடிவுகள் எடுத்து காட்டுகின்றன.

பல குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களில் அடிப்படை கூட தெரியாத நிலை இருப்பது வேதனை அளிப்பதாக அவைகள் சுட்டிக்காட்டுகின்றன. இதற்கு முக்கிய காரணம், கொரோனா காலத்தில் 19 மாதங்களாக நேரடி வகுப்புகள் நடத்த முடியாமல் போனது தான். அதனால் 1-ம் வகுப்பு பாடங்கள் பற்றி முழுமையாக தெரியாமலேயே 2-ம் வகுப்பிற்கும், அதுபோல் 2-ம் வகுப்பை படிக்காமலே 3-ம் வகுப்புக்கும் குழந்தைகள் தாவி வந்திருக்கிறார்கள். இதனால் ஏற்பட கற்றல் இடைவெளியால் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு கல்வியின் பலன்களை குழந்தைகள் முழுமையாக பெறவில்லை.

எண்ணும் எழுத்தும் திட்டம்

இவ்வாறு கல்வியில் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளின் கற்றல் இடைவெளியை சீர்செய்வது, கல்வித்துறையின் மிக முக்கிய கடமையாக இருக்கிறது. அதற்காக உருவானது தான், எண்ணும் எழுத்தும் திட்டம். 2022-23-ம் கல்வி ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை அரசு முன்னெடுக்க இருக்கிறது.

எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13.6.2022 அன்று திருவள்ளூர் மாவட்டம், அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார். அதன் பிறகு அந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் நடைமுறைக்கு வந்தது. அதை செயல்படுத்த, தனியாக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் ஆசிரியர் கையேடுகளும், பயிற்சி நூல்களும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.) மூலம் வழங்கப்பட்டு இருக்கிறது.

அரும்பு, மொட்டு, மலர்...

குழந்தைகளின் கற்றல் இடைவெளியை அடையாளம் கண்டு அவர்களின் திறமைக்கு ஏற்ப கல்வி கற்பிக்கும் வகையில் அவர்கள், "அரும்பு, மொட்டு, மலர்" என்று 3 பிரிவுகளாக பிரிக்கப்படுகிறார்கள். அரும்பு என்பது படிக்க தெரியாத குழந்தைகளையும், மொட்டு என்பது கொஞ்சம் படிக்க தெரிந்த குழந்தைகளையும், மலர் என்பது நன்கு படிக்க தெரிந்த குழந்தைகளையும் குறிக்கிறது. இதில் அரும்பு, மொட்டு வகையில் இருக்கும் குழந்தைகளை மலராக பூக்க வைக்க வேண்டும் என்பதே திட்டத்தின் ஒரே நோக்கம் ஆகும்.

ஆடல், பாடல், கதை சொல்லல்...

தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களை கற்று கொடுக்கும் போது, குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாக்கும் வகையில், எண்ணும், எழுத்தும் வகுப்பறையில் ஆடல், பாடல், கதை சொல்லல், வாசித்தல், செயல்பாடு, படைப்பு, பொம்மலாட்ட களங்கள் போன்ற நிகழ்வுகள் மூலம் அவர்களின் ஆர்வமும், ஈடுபாடும் ஊக்கப்படுத்தப்படுகின்றன.

இப்படியாக கடந்த 5 மாதங்களுக்கு மேல் கற்பிக்கப்பட்டு வரும் எண்ணும் எழுத்தும் திட்டம் குழந்தைகளின் கற்றல் இடைவெளியை சீர்செய்து இருக்கிறதா?. 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் எழுத்தறிவும், எண்ணறிவும் பெறவேண்டும் என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தின் இலக்கு நிறைவேறி வருகிறதா? என்பது பற்றி ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

ஆர்வத்தை தூண்டுகிறது

சேலம் மஜ்ரா கொல்லப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பொன்முடி:-

எங்கள் பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை 119 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் அவர்கள் சுலபமாக தமிழ், கணக்கு, ஆங்கிலம் ஆகியவை கற்று வருகிறார்கள். அனைவருக்கும் கல்வி திட்டம் மற்றும் பள்ளியில் உள்ள கருவிகள் மூலம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் பாடல், கதைகள் உள்ளிட்டவை அவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் ஆசிரியர்கள் கற்று கொடுக்கின்றனர்.

இதனால் அவர்களுக்கு எதிளில் மறப்பதில்லை. தினமும் காலை வேளையில் இறைவணக்கத்தின் போது ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் சுழற்சி முறையில் பாடல்களை பாடி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு பயம் நீங்குவதுடன் நன்றாக படிக்க ஆர்வத்தை தூண்டுகிறது. எண்ணும் எழுத்தும் திட்டம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது.

கற்றல் திறன்

சேலம் அயோத்தியாப்பட்டணம் பகுதியை சேர்ந்த கோமதி:-

எண்ணும், எழுத்தும் திட்டம் மூலம் மாணவர்களுக்கு, ஆடல், பாடல் மற்றும் காணொலி காட்சி மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இதனால் அவர்களுடைய கற்றல் திறன் மேம்பட்டு உள்ளது. மேலும் குழந்தைகளும் பள்ளிக்கு விருப்பப்பட்டு செல்லும் வகையில் இந்த திட்டம் செயல்படுகிறது. காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை தங்களது குழந்தைகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் கூறும் போது மகிழ்ச்சி அடைகிறோம். புத்துணர்ச்சியுடன் அளிக்கப்படும் இந்த புதிய கல்வி திட்டமானது சிறப்பானது ஆகும்.

தேவூர் அருகே உள்ள கா.மேட்டுப்பாளயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இருதயராஜ்;-

தொடக்க நிலையில் உள்ள மாணவர்களை அரும்பு எனவும், ஓரளவு படிப்பவர்களை மொட்டு எனவும், நன்றாக படிப்பவர்களை மலர் எனவும் பிரிக்கப்பட்டு கற்று கொடுக்கப்பட்டு வருகிறது. எண்ணும் எழுத்து திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள புத்தகங்கள் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கலைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கமாக எடுத்து கூறப்பட்டு வருகிறது. குழந்தைகள் மிகவும் ஆர்வமாக கற்று வருகின்றனர். மாணவர்களின் திறமைக்கு எண்ணும் எழுத்து திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும். ஆசிரியர்கள் புரியும் வகையில் பாடம் நடத்துவதால் பாடப்புத்தகத்தில் உள்ள உதாரணங்களை மாணவர்களே நிரப்பும் வகையில் மாறி விடுகின்றனர்.

வரவேற்கத்தக்கது

எடப்பாடி அருகே உள்ள வேப்பமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கந்தவேல்:-

தமிழக அரசின் எண்ணும், எழுத்தும் திட்டமானது கொரோனா காலகட்டத்தில் பின்தங்கிய தொடக்கப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை வெகுவாக மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. விளையாட்டு, ஆடல், பாடல் மற்றும் மாணவர்கள் விரும்பக்கூடிய பல்வேறு செயல் வடிவங்களை கொண்டும் அதனுடன் கணிதம், மொழி, அறிவியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகளையும் மாணவர்கள் மனதில் எளிதாக பதிய வைப்பதாக அமைந்துள்ளது. இதுபோன்ற எளிய முறையில் பயிற்றுவிப்பதால் மாணவர்களும் ஆர்வமுடன் பள்ளிக்கு வருகின்றனர். இந்த திட்டம் வரவேற்கத்தக்கது ஆகும்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் (வீரகனூர் வடக்கு) தங்கவேல்:-

கொரோனா காலக்கட்டத்தில் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்புகளை ஈடு செய்யும் வகையில் எண்ணும், எழுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய சிறப்புகள் என்னவென்றால் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் 8 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது, பாடல், கதை, நடிப்பு, படைப்பாற்றல், பொம்மலாட்டம், செயல்பாடு, படித்தல், வினாடி-வினா என 8 வகையாக பிரிக்கப்பட்டு மாணவர்கள் எளிதில் கற்று கொள்ளும் வகையில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ரொம்ப பிடிச்சிருக்கு...

மாணவர்கள் சரவணன், குமார், கார்த்திக் ஆகியோர் கூறும்போது, 'ஆசிரியர்கள் சூப்பரா சொல்லித்தராங்க... எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஆர்வமாக படிக்கிறோம். வகுப்பறையில் படிப்போடு சேர்ந்து பாடல், கதை, விளையாட்டு களம் என அனைத்தையும் சொல்லிகொடுக்கிறாங்க... கணக்கு பாடத்தில் வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்ய முன்பு கஷ்டப்பட்டோம். ஆனால் இப்போது எளிதில் கற்று கொண்டோம். மேலும் கற்றுக்கொண்டு வருகிறோம்' என்றனர்.

இதுகுறித்து தொடக்கக்கல்வி உயர் அதிகாரியிடம் கேட்டபோது, 'எண்ணும், எழுத்தும் திட்டம் தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. கற்றல் இடைவெளியை சீர்ப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் அதனை சரிசெய்து வருகிறது. இந்த திட்டத்தை திறம்பட செயல்படுத்துவதற்கு ஏதுவாக ஏற்கனவே ஆசிரியர்களுக்கு 2 கட்டங்களாக பயிற்சி அளித்து இருக்கிறோம். 3-வது கட்டமாக வருகிற 15-ந்தேதி சென்னையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது' என்று தெரிவித்தார்.

---


Next Story