துணைவேந்தர் பணியிடம் விற்பனையா? பஞ்சாப் மாநில கவர்னர் கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டை அரசு விரிவாக விசாரிக்க வேண்டும் - முத்தரசன்


துணைவேந்தர் பணியிடம் விற்பனையா? பஞ்சாப் மாநில கவர்னர் கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டை அரசு விரிவாக விசாரிக்க வேண்டும் - முத்தரசன்
x

துணை வேந்தர் நியமன அதிகாரம், கவர்னரிடம் இருப்பதை நீக்கி, மக்கள் பிரதிநிதித்துவ அரசிடம் வழங்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.

சென்னை,

துணை வேந்தர் நியமன அதிகாரம், கவர்னரிடம் இருப்பதை நீக்கி, மக்கள் பிரதிநிதித்துவ அரசிடம் வழங்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பஞ்சாப் மாநில கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழ்நாட்டில் துணைவேந்தர் பணியிடம் ரூபாய் 50 கோடி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று பகிரங்கமாக புகார் கூறியுள்ளார். இவர் தமிழ்நாட்டில் கவர்னராக நான்காண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். அந்தக் காலத்தில் 27 துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற உயர் பொறுப்பில் உள்ளவர் கூறும் "புகாரை" வெறும் செய்தியாக கடந்து சென்றுவிட முடியாது. தமிழ்நாட்டின் முன்னாள் கவர்னர் பகிரங்கமாக கூறியுள்ள ஊழல் குற்றச்சாட்டை தமிழ்நாடு அரசு விரிவாக விசாரிக்க வேண்டும்.

கடந்த காலத்தில் நடைபெற்றுள்ள துணைவேந்தர் நியமனம் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதில் தவறுகள் நேர்ந்திருப்பதை உறுதி செய்து, ஊழல் முறைகளில் துணைவேந்தர் பதவியில் அமர்ந்துள்ளவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும். ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடாமல் தண்டிக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் துணைவேந்தர் பணி நியமனம் ஊழல், முறைகேடுகளுக்கு இடம் கொடுக்காத, வெளிப்படைத்தன்மை கொண்டதாக அமைந்திட, தமிழக அரசு பொருத்தமான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.

துணை வேந்தர் நியமன அதிகாரம், கவர்னரிடம் இருப்பதை நீக்கி, மக்கள் பிரதிநிதித்துவ அரசிடம் வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story