தனியார் பள்ளி அனுமதியின்றி செயல்படுகிறதா?-அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
தனியார் பள்ளி அனுமதியின்றி செயல்படுகிறதா? என அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது
ராமேசுவரத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகள் அரசின் உரிய விதிமுறைகளை பின்பற்றி பள்ளிக்கல்வித்துறையில் சான்றுகள் பெற்று நடத்த வேண்டும் என்பது அரசின் விதி. ஆனால் இந்த பள்ளி கடந்த 5 வருடங்களாக எவ்வித அரசின் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவது தற்போது தெரியவந்து உள்ளது.மேலும் இங்கு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள், விளையாட்டு மைதானம் உள்பட எந்த வசதியும் இல்லை. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே உரிய அனுமதியின்றி செயல்படும் இந்த பள்ளி செயல்பட தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.டி. ஆஷா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், இது குறித்து மாவட்ட கலெக்டர், கல்வி அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.