பள்ளிக்கூடங்களில் சீருடை திட்டம் முறையாக செயல்படுகிறதா?
பள்ளிக்கூடங்களில் சீருடை திட்டம் முறையாக செயல்படுகிறதா? என்பது குறித்து ஆசிரியர், பெற்றோர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
கல்வித்துறையில் தமிழகம் பெற்று வரும் வளர்ச்சிக்கு வித்திட்டவர் பெருந்தலைவர் காமராஜர். அவர் முதல்-அமைச்சராக இருந்த போதுதான் மதிய உணவு, இலவச சீருடை, பள்ளி சீரமைப்பு இயக்கம் உள்ளிட்ட முக்கியமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அனைவரும் சமம்
பள்ளிக்கூடம் என்று வந்துவிட்டால் ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், சாதி, மதம், இனம் வேறுபாடின்றி அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் சீருடை முறையை காமராஜர் கொண்டு வந்தார். குறிப்பாக தமிழக பள்ளிகளில் சீருடை 1964-1965-ம் கல்வியாண்டில் கொண்டு வரப்பட்டது. அது அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள், உதவிபெறும் தனியார் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது. வாரம் ஒருநாள் (திங்கட்கிழமை) மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும். நீலநிற கால்சட்டை அல்லது பாவாடை, வெள்ளை நிற மேல்சட்டை அணிந்து வர வேண்டும்.
1964-1965-க்கு முன்பு சில தனியார் பள்ளிகளில் சீருடை அணியும் பழக்கம் இருந்தது. ஆனால் தற்போது அரசு பள்ளிகளை பொறுத்தவரையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே நிறத்தில் சீருடைகள் உள்ளன. அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும், ஒவ்வொரு நிறத்தில் சீருடை முறை இருந்து வருகிறது. அதேபோல், தனியார் பள்ளி நிர்வாகங்கள் விரும்பும் நிறத்தில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சீருடை முறைகளை வைத்து உள்ளனர்.
இந்த நிலையில், பள்ளிகளில் சீருடை அணியும் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா? சமத்துவப்பார்வையில் சீருடை அணியப்படுகிறதா? அல்லது நாகரீக நோக்கில் அணியப்படுகிறதா? என்பவை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
ஒழுக்கத்தை நெறிப்படுத்த
விழுப்புரம் அருகே தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்லையா:-
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச சீருடை திட்டம் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு 4 செட் சீருடைகள் வழங்கப்படுகிறது. ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை ஒரு வண்ணமும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வரை படிக்கும் மாணவர்களுக்கு மற்றொரு வண்ணமுமாக வழங்கப்படுகிறது. இந்த சீருடை வழங்குவதன் மூலம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் சமமாகவும், ஏற்றத்தாழ்வுகள் இல்லாமலும் சமத்துவத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இந்த சீருடை வழங்குவதால் ஏழை, எளிய மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. சீருடை அணிந்து வருவதால் மாணவர்களிடம் நல்ல பழக்கத்தையும், ஒழுக்கத்தையும் நெறிப்படுத்த உதவுகிறது. மேலும் சமூகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் தனித்துவத்தை எடுத்துரைப்பதோடு மாணவர்களின் ஆளுமைத்திறன் வளர்கிறது. அரசு வழங்கும் வண்ண சீருடைகள் மூலம் மாணவர்களின் வண்ணமயமான எதிர்காலத்தை உருவாக்க உதவுகிறது, அதே நேரத்தில் அரசு பள்ளியின் அடையாளமாகவும் மிளிருகிறது.
ஒற்றுமை- சமத்துவம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏமப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் அர்ஜூனன்:-
எங்கள் பள்ளியில் மாணவ- மாணவிகள் அனைவரும் சீருடை அணிந்து பள்ளிக்கு தினமும் வருகின்றனர். ஒவ்வொரு நாளும் சீருடையில்தான் பள்ளிக்கு வர வேண்டுமென ஆசிரியர்கள், மாணவர்களிடம் எடுத்துக்கூறி அந்த நடைமுறையை முறையாக கடைபிடித்து வருகின்றனர். இதனால் மாணவ- மாணவிகளிடையே ஒற்றுமை, சமத்துவம், ஒழுக்கம், அனைவருக்கும் சமமான கல்வி வழங்க வழிவகுக்கிறது. கலர் கலராக உடையணிந்து மாணவ- மாணவிகள் வரும்போது வேற்றுமைகள், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு காணப்படுகின்றது. பள்ளி சீருடையில் வரும்போது மாணவர் என்ற ஒரே மனநிலை மட்டுமே வருகின்றது. மாணவ- மாணவிகள் பள்ளி சீருடையில் வருவதுதான் நல்ல நடைமுறை.
தாழ்வு மனப்பான்மை வருவதில்லை
மேல்மலையனூரை சேர்ந்த தனியார் பள்ளி பிளஸ்-2 மாணவி பவ்யஸ்ரீ:-
பள்ளிக்கூடங்களில் சீருடைத்திட்டம் தற்போது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை, பணக்காரக்குழந்தைகள் என எந்தவித வித்தியாசம் பார்க்காமலும், அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மை வராமல் இருக்கவும் கொண்டு வரப்பட்ட திட்டமே சீருடைத்திட்டம். தற்போது தனியார் பள்ளிகளிலும் சரி, அரசு பள்ளிகளிலும் சரி சீருடைத்திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு மாணவனோ அல்லது மாணவியோ சீருடை அணியவில்லை என்றால் அதற்கான காரணத்தை பெற்றோர்கள், தலைமை ஆசிரியரிடமோ அல்லது வகுப்பு ஆசிரியரிடமோ கூறிய பிறகே அனுமதிக்கும் நிலைக்கு வந்துவிட்டதால் சீருடை கண்டிப்பாக அணிய வேண்டும் என்ற நிலைக்கு மாணவ- மாணவிகள் வந்துவிட்டனர். சீருடை என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இது நாகரீக நோக்கத்திற்கு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசு நினைத்தால் முடியும்
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் அருள்- அரசு பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஒரே சீருடை அணிவது வரவேற்கத்தக்கது. பொதுவாக தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வசதி படைத்தவர்கள் என கருதுகிறார்கள். தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அந்தந்த பள்ளிக்கு ஏற்ப சீருடை அணிகின்றனர். இவர்கள் பள்ளி பேருந்து, ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆனால் அரசு பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு முழுவதும் ஒரே சீருடை அணிகின்றனர். மேலும் அவர்கள் பெரும்பாலும் சைக்கிள், அரசு பேருந்துகள் மூலமாகவும், நடந்தும் செல்கின்றனர். தனியார் பள்ளி மாணவர்களும், அரசு பள்ளி மாணவர்களும் இப்படி கல்வி கூடத்திற்கு செல்வதில் வேறுபாடு ஏற்படுகிறது. இது போன்ற வேறுபாட்டால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் தனியார் பள்ளி, அரசு பள்ளி மாணவர்கள் என ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. இந்த வேறுபாட்டை தவிர்க்க அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒரே சீருடை அணிய வேண்டும். அரசு நினைத்தால் இதனை கண்டிப்பாக சாத்தியபடுத்த முடியும். அவ்வாறு செய்தால்தான் ஏற்றத்தாழ்வு இன்றி அனைவரும் சமம் என்கிற எண்ணம் மாணவர்கள் மத்தியிலும் வரும்.
சாத்தியக்கூறு குறைவு
கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் படிக்கும் மாணவனின் தந்தை முருகன்:- அரசு பள்ளி மாணவர்கள் அனைவரும் ஒரே சீருடை அணிகிறார்கள். ஆனால் தனியார் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளிக்கு ஏற்ப வெவ்வேறு சீருடையை அணிகிறார்கள். இதனால் மாணவர்கள் மத்தியில் ஒரு ஏற்றத்தாழ்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு பள்ளிக்கும், தனியார் பள்ளிக்கும் ஒரே பாடத்திட்டம் என்ற முறையில் சமச்சீர் கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஒரே சீருடை அணிதல் என்பது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் தனியார் பள்ளியில் அதிக பணம் செலவு செய்து படிக்க வைக்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் அரசு பள்ளி சீருடை இல்லாமல் தனி சீருடை அணிய வேண்டும் என நினைக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ஒரே சீருடை அணிதல் சாத்தியக்கூறுகள் குறைவு. இருந்தாலும் ஒரே சீருடை அணிவது குறித்து அரசு முடிவு எடுக்கும் பட்சத்தில் சாத்தியமாக வாய்ப்பு உள்ளது.
அரசு முடிவு
தமிழக கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, 'அரசு உத்தரவுப்படி அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்காக ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டு பள்ளி தொடங்குவதற்கு முன்பாக அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதனை பெற்றுக்கொண்ட பள்ளி நிர்வாகங்கள் அவர்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடையாக வழங்குகின்றனர். அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான சீருடை அமல்படுத்துவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இதுதொடர்பாக துறையிலும் பெரிய அளவில் எந்த திட்டமும் தற்போது இல்லை.
தமிழக அரசின் 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பள்ளி கல்வி துறைக்கு ரூ.40 ஆயிரத்து 290 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பள்ளிக்கல்வி துறையில் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைப்பதற்கு ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் மூலம் 12.7 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். நவீன விடுதிகள் கட்டவும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதேபோன்றுதான் சீருடை, கல்வி உபகரணங்களும் வாங்கி பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் சீருடை வேறு மாதிரி இருப்பதால் அரசு சார்பில் வழங்கப்படும் சீருடைக்கான துணி வேண்டாம் என்கின்றனர். ஆனால் அவர்களுக்கான ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் சீருடை வாங்க முடியாத ஒரு சில மாணவர்களுக்கு அரசு வழங்கும் சீருடைகளும் வழங்கப்படுகிறது' என்றனர்.