பள்ளிக்கூடங்களில் சீருடை திட்டம் முறையாக செயல்படுகிறதா? என்று ஆசிரியர், பெற்றோர்கள் கருத்து
பள்ளிக்கூடங்களில் சீருடை திட்டம் முறையாக செயல்படுகிறதா? என்று ஆசிரியர், பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கல்வித்துறையில் தமிழகம் பெற்றுவரும் வளர்ச்சிக்கு வித்திட்டவர் பெருந்தலைவர் காமராஜர். அவர் முதல்-அமைச்சராக இருந்தபோதுதான் மதிய உணவு, இலவச சீருடை, பள்ளி சீரமைப்பு இயக்கம் உள்ளிட்ட முக்கியமான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அனைவரும் சமம்
பள்ளிக்கூடம் என்று வந்துவிட்டால் ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், சாதி, மதம், இனம் வேறுபாடின்றி அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் சீருடை முறையை காமராஜர் கொண்டு வந்தார். குறிப்பாக தமிழக பள்ளிகளில் சீருடை 1964-1965-ம் கல்வியாண்டில் கொண்டு வரப்பட்டது. அது அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகள், உதவிபெறும் தனியார் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டது. வாரம் ஒருநாள் (திங்கட்கிழமை) மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து வரவேண்டும். நீலநிற கால்சட்டை அல்லது பாவாடை, வெள்ளை நிற மேல்சட்டை அணிந்து வரவேண்டும்.
1964-1965-க்கு முன்பு சில தனியார் பள்ளிகளில் சீருடை அணியும் பழக்கம் இருந்தது. ஆனால் தற்போது அரசு பள்ளிகளை பொறுத்தவரையில் அனைத்து பள்ளிகளிலும் ஒரே நிறத்தில் சீருடைகள் உள்ளன. அதேபோல், அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும், ஒவ்வொரு நிறத்தில் சீருடை முறை இருந்து வருகிறது. அதேபோல், தனியார் பள்ளி நிர்வாகங்கள் விரும்பும் நிறத்தில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சீருடை முறைகளை வைத்து உள்ளனர். இந்தநிலையில், பள்ளிகளில் சீருடை அணியும் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா? சமத்துவப்பார்வையில் சீருடை அணியப்படுகிறதா? அல்லது நாகரிக நோக்கில் அணியப்படுகிறதா? என்பவை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-
மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது
பெரம்பலூர் மாவட்ட அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் சேகர்:- மாணவ, மாணவிகளடையே ஏற்றத்தாழ்வு மனப்பான்மை ஏற்படாத வகையில் சீருடை அணியும் முறை கொண்டு வரப்பட்டது. அரசு பள்ளிகளில் சீருடைகளை அணிய மாணவ-மாணவிகள் பழக்கப்பட்டு விட்டனர். இருப்பினும் மாணவர்கள் சிலர் சீருடை நிறத்தில் தங்களுக்கு பிடித்த வடிவங்களில், அவரவர் விருப்பப்படி சட்டை, டவுசர், பேண்டு தைத்துக்கொண்டு அவற்றை அணிந்து வருகின்றனர். இவ்வாறு தங்களுக்கேற்ற வடிவங்களில், தங்களது விருப்பப்படி அணியாமல், வடிவத்தில் மாறுபாடு இன்றி அரசு வழிகாட்டுதலில் நெறிமுறைகளை பின்பற்றி சட்டை மற்றும் பேண்டை ஒரே மாதிரியான முறையில் தைத்து அணியும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். பெரும்பாலும் மாணவிகள் ஒரே மாதிரியான வடிவத்தில் பள்ளி சீருடைகள் அணிவதை கடைபிடிக்கின்றனர்.
மேலும் சில மாணவர்கள் தங்களது விருப்பப்படி சிகை அலங்காரம் மற்றும் நவநாகரிகமான காலணிகள் போன்றவற்றை அணிந்து வருகின்றனர். இந்த மாணவர்களின் பெற்றோர்களே தங்களது பிள்ளைகளுக்கு பின்புலமாக இருந்து வருகின்றனர். இதனால் பள்ளிகளில் பிற மாணவ-மாணவிகளிடத்தில் கவன சிதறல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, கட்டாயம் இப்படித்தான் சீருடைய அணிய வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும், அவர்தம் பெற்றோர்களுக்கும் அவ்வப்போது அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில மாணவர்கள் குருவிக்கூடு, ஹிப்பி போன்ற வடிவங்களில் சிகை அலங்காரம் செய்து வருவதை தவிர்க்க அறிவுரைகளை கூறி, உளவியல் ரீதியான கவுன்சிலிங் அளித்து வருகிறோம்.
கண்காணிக்க வேண்டும்
தா.பழூரை சேர்ந்த செந்தில்குமார்:- மாணவ, மாணவிகளுக்கு ஒரே மாதிரியான உடைக்கட்டுப்பாட்டை உருவாக்கி, அதற்கு சீருடை என்று பெயர் வைத்தார்கள். ஆனால் இப்போதைய காலங்களில் மாணவ, மாணவிகள் சீருடைகளை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப புதிய வடிவங்களில் மாற்றி தைத்து கொள்கிறார்கள். உதாரணமாக மாணவர்களின் பேண்ட் வழக்கமான அளவுகளில் இல்லாமல், உடலோடு ஒட்டி இருக்கும்படியும், கணுக்கால் வரை மறைப்பது போல் இல்லாமல் முட்டி காலுக்கும் கணுக்காலுக்கும் இடைப்பட்ட பகுதி வரை தூக்கலாகவும் தைத்து அணிகின்றனர். இதுபோன்று சீரற்ற முறையில் உடைகளை அணிந்து கொண்டு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பள்ளிக்கூடத்திற்குள் அனுமதி வழங்கக்கூடாது. தவறான உடை கலாசாரத்தை, மாணவர்களின் ஒழுக்கம் தொடர்புடைய ஒன்றாக பார்க்க வேண்டும். பெற்றோர்கள் சமீப காலமாக பிள்ளைகளின் படிப்பு மட்டுமல்லாது உடைக்கட்டுப்பாடு போன்ற விஷயங்களையும் சரியாக கவனிப்பது இல்லை. அதுமட்டுமின்றி மாணவர்கள் தலை முடியை ஒப்பனை செய்வது கூட நவீன காலத்தில் மிகவும் மோசமாக மாறி வருகிறது. புருவங்களில் கூட கோடு போட்டுக் கொண்டு பள்ளிக்கு மாணவர்கள் வருகிறார்கள். இவை அனைத்துமே அடுத்த தலைமுறை மாணவர்களை கல்வி, ஒழுக்கம் இவற்றில் இருந்து தடம் மாற செய்து விடும். மாணவர்கள் ஒழுக்கமாக இருந்தால் மட்டுமே அவர்களுடைய கல்வி அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் பயன்படும். எனவே ஆசிரியர்கள் மட்டுமல்லாது பெற்றோரும் மாணவர்களின் சீருடை மற்றும் பள்ளி சென்று பள்ளியில் நடந்து கொள்ளும் விதம் வரை அனைத்தையும் கண்காணிக்க வேண்டும்.
ஒரே மாதிரியான சீருடை
இடையத்தான்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை எமல்டா குயின்மேரி:- அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான சீருடை கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் எனது கருத்து. ஏனெனில் மாணவர்களிடையே ஒரே மாதிரியான சீருடை அணியும்போது ஒற்றுமை உணர்வு, அனைவரும் சமம் என்ற நிலை, இவை அனைத்துமே மேலோங்கி இருக்கும். ஒருவர் மற்றவரை மதிக்கும் பண்பும் மிளிரும். ஒரே மாதிரியான சீருடை ஒற்றுமையான வாழ்வினை நோக்கி அழைத்துச் செல்ல ஒரு கருவியாக இருக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. ஒரே சீருடை அணியும்போது மாணவர்களிடையே எந்தவிதமான ஏற்றத்தாழ்வுகளும் மனரீதியாக ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. எனவே அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான சீருடை கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கிறோம்
பாகுபாடு
விக்கிரமங்கலத்தை அடுத்த நாகமங்கலத்தை சேர்ந்த பள்ளி மாணவியின் தந்தை தில்லையானந்தம்:- தற்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் சீருடை அணியும் முறை உள்ளது. இதில் அரசு பள்ளி மாணவர்கள் குறிப்பிட்ட நிறங்களில் சீருடைகளையும், தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் வெவ்வேறு நிறங்களில் சீரடைகளையும் அணிகின்றனர். அந்த சீருடையின் நிறத்தை கொண்டு எந்த பள்ளியை சேர்ந்த மாணவர் என்பதை அறிய முடியும். ஆனால் இது போன்ற சீருடை முறை மாணவ, மாணவிகளிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவது போன்று உள்ளது. எனவே இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஒரே மாதிரியான சீருடைகளை வழங்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் மனதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. மேலும் மாணவ, மாணவிகள் இறுக்கமான உடைகளை உடுத்துவது, மாணவர்கள் முக்கால் பேண்ட், முழுக்கை சட்டை போன்றவைகளை உடுத்தி பள்ளிக்கு வருவதை, கடும் கட்டுப்பாடுகளை விதித்து தடுக்க வேண்டும். சீருடைகளை வேறுபாடின்றி ஒரே மாதிரியாக தைக்க தையல் கலைஞர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். முடி திருத்தும்போதும் மாணவர்களுக்கு சரியான முறையில் முடி திருத்தம் செய்வதை தொழிலாளர்கள் கடைபிடிக்க வேண்டும்.
வேறுபாடு இல்லை
பள்ள கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் விக்னேஷ்:- பள்ளிகளில் சீருடை என்பது அவசியமான ஒன்று. மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக சீருடை அணிகிறோம். எங்களுக்குள் எந்தவித வேறுபாடும் தெரிவதில்லை. குறிப்பாக எங்களை போன்ற கிராமப்புறங்களில் படிக்கும் ஏழை மாணவர்கள், அரசு வழங்கும் சீருடையைத்தான் அணிந்து பள்ளிக்கு வருகிறோம். சீருடை அணிந்திருக்கும் போதுதான் மாணவன் என்ற உணர்வு தோன்றுகிறது. அரசு வழங்கும் சீருடையால் பெற்றோர்களுக்கு செலவும் குறைகிறது.
சிறப்பானது
வயலப்பாடியை சேர்ந்த விஜயலட்சுமி:- எனது 2 மகன்களும் அரசுப்பள்ளியில் படித்து வருகின்றனர். அனைத்து பிள்ளைகளும் சீருடையில் பள்ளி செல்வது சிறப்பான ஒன்று. ஏழை, பணக்காரன் என்ற உயர்வு. தாழ்வு இல்லாமல் அனைவரும் ஒரே வண்ண உடையணிவது மகிழ்ச்சியாக உள்ளது. அவர்கள் ஒற்றுமையாக பழகுவதற்கு சீருடை பயனுள்ளதாக இருக்கும். அரசு பள்ளிகளில் தைக்கப்பட்ட சீருடைகளே வழங்கப்படுகின்றன. சிலர் சீருடை நிறத்தில் துணி எடுத்து தைக்கின்றனர். அவ்வாறு தைக்கும்போது பள்ளியில் வழங்கும் சீருடை போன்றே தைத்து அணிந்தால், மாணவர்களின் வேறுபாடு தெரியாது.
அரசு முடிவு
தமிழக கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, 'அரசு உத்தரவுப்படி அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்காக ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டு பள்ளி தொடங்குவதற்கு முன்பாக அந்தந்த பள்ளிகளுக்கு கொண்டு வழங்கப்படுகிறது. இதனை பெற்றுக்கொண்ட பள்ளி நிர்வாகங்கள் அவர்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடையாக வழங்குகின்றனர். அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான சீருடை அமல்படுத்துவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இதுதொடர்பாக துறையிலும் பெரிய அளவில் எந்த திட்டமும் தற்போது இல்லை.
தமிழக அரசின் 2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பள்ளி கல்வி துறைக்கு ரூ.40 ஆயிரத்து 290 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பள்ளிக்கல்வி துறையில் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைப்பதற்கு ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் மூலம் 12.7 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். நவீன விடுதிகள் கட்டவும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று தான் சீருடை, கல்வி உபகரணங்களும் வாங்கி பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் சீருடை வேறு மாதிரி இருப்பதால் அரசு சார்பில் வழங்கப்படும் சீருடைக்கான துணி வேண்டாம் என்கின்றனர். ஆனால் அவர்களுக்கான ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் சீருடை வழங்க முடியாத ஒரு சில மாணவர்களுக்கு அரசு வழங்கும் சீருடைகளும் வழங்கப்படுகிறது' என்றனர்.