மாணவர்களிடம் வாசிக்கும் திறன் குறைந்துவிட்டதா?


மாணவர்களிடம் வாசிக்கும் திறன் குறைந்துவிட்டதா?
x

மாணவர்களிடம் வாசிக்கும் திறன் குறைந்துவிட்டதா? என்பது குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

"என்னிடம் நீ தலைகுனிந்து படித்தால், உன்னை தலைநிமிரச் செய்வேன்'', இதுதான் நூலகம் நமக்குச் சொல்லும் அறிவுரை.

வாசிக்கும் பழக்கம்

புத்தகங்களை படிக்கும் பழக்கம் இருந்தால், சக மனிதர்களை நேசிக்கும் பழக்கம் தன்னாலே வரும். சிந்தனைகள் நிரம்பிய பெட்டகமாக இருக்கும் புத்தகங்கள் பலருக்கு, பலவிதமான சிந்தனைகளை தூண்டுகின்றன. அந்த சிந்தனைதான் ஒரு மனிதனை பல்வேறு இடங்களில் உயர்த்தி பிடிக்கின்றன.

அற்புதம் நிறைந்த புத்தகங்களை நூலகங்கள் போய் வாசிக்கும் பழக்கம் சமீபகாலமாக அருகி வருகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியே அதற்கு தூபமிடுகிறது. இருப்பினும் வாசிப்பை நேசிப்பவர்கள், இன்றும் நூலகத்தை நோக்கி நடைபோட்டு, புத்தகங்களை தேடிதேடிப் படிக்கத்தான் செய்கின்றனர். புத்தக கண்காட்சிகளில் பிடித்த புத்தகங்களை வாங்கி படிக்கவும் செய்கிறார்கள்.

நூலக வகுப்பு

குழந்தைப் பருவம் முதல் புத்தக வாசிப்புத் திறனை ஏற்படுத்த, பள்ளிக்கூட கல்வியில் இருந்தே ஊக்கப்படுத்தப்படுகிறது.

அதற்காக பள்ளிக்கூடங்களில் ஒரு வாரத்தில் 40 பாட வகுப்புகளில், புத்தகங்களைத் தேடிப் படிப்பதற்காக ஒரு பாடவகுப்பு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகுப்புகளில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் அறிவியல், தனிமனிதர்கள், சிந்தனைகளை தூண்டும் புத்தகங்கள் உள்பட பல்வேறு புத்தகங்கள் வழங்கப்பட்டு, அதை படிக்க வைத்து, அதன் வாயிலாக வினாக்கள் கேட்டு விடையளிப்பது, கலந்துரையாடுவது போன்றவை நடத்தப்படுகின்றன. இதுதவிர போட்டிகளும் நடத்தப்பட்டு, மாணவர்களை உத்வேகப்படுத்தும் பணிகளும் நடக்கின்றன. கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் என்ற இணையதளத்திலும் இந்த நிகழ்வுகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. மாணவர்கள் புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து சென்று படிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மாணவர்கள் அவ்வாறு படிக்கிறார்களா? நூலகப் பாடவகுப்புகள் பள்ளிக்கூடங்களில் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டியது இருக்கிறது.

பல பள்ளிக்கூடங்களில் நூலகங்கள் கண்காட்சியாகவே இருக்கின்றன என்ற புகார்களும் வருகின்றன.

புத்தக வாசிப்பு அவசியம்

பள்ளிகளைப் போன்று, கல்லூரிகளில் இதற்கென்று தனிவகுப்புகள் இல்லாவிட்டாலும், கல்லூரி வகுப்பு நேரம் போக, மற்ற நேரத்தில் பொது நூலகங்கள் மற்றும் துறை சார்ந்த நூலகங்களில் மாணவ-மாணவிகள் நேரத்தை செலவிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

ஆனால் அதில் நேரத்தை செலவிடும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை என்பது சொற்ப அளவிலேயே இருக்கிறது. செல்போன் மோகம், அவர்களை அதில் மூழ்கடித்துவிட்டதால், நூலகங்களில் அறிவுசார்ந்த புத்தகங்களைத் தேடி படிக்கும் ஆர்வம் இல்லாமலே போய்விட்டது. இதனை மாற்ற வேண்டும். புத்தக வாசிப்பின் அவசியத்தை எடுத்துக்கூறி, மாணவர்களிடம் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும்.

அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து திண்டுக்கல்லை சேர்ந்த பல்வேறு தரப்பினர் வழங்கியிருக்கும் யோசனைகள் வருமாறு:-

பள்ளிகளில் கூடுதல் கவனம்

அரசு கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் ராஜாராம்:- கல்லூரிகளை பொறுத்தவரை நூலகங்கள் முறையாக செயல்படுகின்றன. அதை உயர்கல்வித் துறை முறையாக கண்காணித்து வருகிறது. மாணவ-மாணவிகள் பாடம் சார்ந்த புத்தகங்கள் மட்டுமின்றி பொதுஅறிவு புத்தகங்களையும் படிக்கின்றனர். பெரும்பாலான அரசு கல்லூரிகளில் டிஜிட்டல் நூலகங்கள் இருக்கின்றன. அதேநேரம் பள்ளிகளில் உள்ள நூலகங்களை செயல்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். புத்தக வாசிப்பை சிறு வயதிலேயே கொண்டு வரவேண்டும். அதற்கு அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் நூலகம் செயல்படுவதை உறுதி செய்து, மாணவ-மாணவிகளை படிக்க வைக்க வேண்டும். இதன்மூலம் நூலகங்களை மாணவ-மாணவிகள் தேடி செல்லும் நிலை ஏற்படும்.

திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி நூலக பொறுப்பாசிரியை டெனிஸ்மேரி:- எங்கள் பள்ளியில் நூலகம் தனி கட்டிடத்தில் இருக்கை வசதியுடன் உள்ளது. நூலக பாடவேளையில் மாணவ-மாணவிகள் நூலகத்துக்கு வந்து புத்தகங்களை படிக்கின்றனர். பெரும்பாலான மாணவ-மாணவிகள் சிறுகதை புத்தகங்களை படிப்பதில் ஆர்வமாக உள்ளனர். அதேபோல் கணிதம், அறிவியல் உள்ளிட்ட மன்றங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் அதுதொடர்பான புத்தகங்களை படிக்கின்றனர்.

விலை உயர்ந்த புத்தகங்கள்

9-ம் வகுப்பு மாணவி செல்வதர்ஷினி:- நூலக பாடவேளையில் தவறாமல் நூலகத்துக்கு வந்து புத்தகங்களை வாங்கி வாசிப்பேன். அதேபோல் நூலக பாடவேளையில் எங்களை, ஆசிரியர்கள் நூலகத்துக்கு அழைத்து வந்து புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்துகின்றனர். நான் அறிவியல் மன்றத்தில் இருப்பதால், அறிவியல் தொடர்பான புத்தகங்களை அடிக்கடி வாங்கி படிப்பேன்.

9-ம் வகுப்பு மாணவர் கிருஷ்ராய்ஸ்டன்:- நான் வரலாறு, தலைவர்களின் கதைகள் கொண்ட புத்தகங்களை அதிகமாக வாசிப்பேன். அதேபோல் சிறுகதை புத்தகங்களையும் வாசிப்பேன். நூலக பாடவேளையில் பாடப்புத்தகங்களை தவிர்த்து இதர புத்தகங்களை வாசிப்பதால், புத்துணர்வாக இருக்கும். பள்ளி நூலகம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

கல்லூரி மாணவி சவுமியா:- கல்லூரி நூலகம், கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்படுத்தும் வகையில் அமைந்து இருக்கிறது. பாடம் தொடர்பான கூடுதல் தகவல்களை திரட்டும் வகையில் புத்தகங்கள் உள்ளன. அதில் ஒரு சில புத்தகங்கள் மிகவும் விலை உயர்ந்தவை ஆகும். அதை வாங்கி படிக்க முடியாத நிலையில் இருக்கும் மாணவர்களுக்கு நூலகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story