தையல் தொழில் நலிவடைகிறதா?


தையல் தொழில் நலிவடைகிறதா?
x

பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், பெருநாள் போன்ற பண்டிகை காலங்களில் தையல் கடைகளில் துணிமணிகள் மலைபோல் குவிந்து கிடக்கும். தையல் கலைஞர்கள் இரவு, பகலாக துணிகளை தைப்பார்கள். காலப்போக்கில் நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப ‘ரெடிமேடு' என்று சொல்லப்படும் ஆயத்த ஆடைகள் அறிமுகமாகின.

புதுக்கோட்டை

ஆயத்த ஆடைகள்

குழந்தைகள் முதல் பெரியவர் வரையிலான அனைவருக்கும் இந்த ஆயத்த ஆடைகள் கிடைக்கின்றன. கடைகளுக்கு நேரடியாகச் சென்று, விருப்பமான உடையை, விரும்பிய கலரில் தேர்வு செய்து, கண்ணாடிமுன் நின்று அணிந்து அழகு பார்க்கும் வசதி இருக்கிறது.

இதனால் துணி எடுத்து தைத்து அணிய வேண்டும் என்ற பழக்கம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக தையல் தொழில் நசிந்து வருகிறதோ? தையல் கலைஞர்கள் நலிந்து வருகிறார்களோ? என்ற சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.

அதே நேரம் ரெடிமேடாகவே தைத்தாலும் அதையும் தொழிலாளர்கள்தானே தைக்கிறார்கள். பெண்களுக்கான பிளவுசுகள் ரெடிமேடாக வந்தாலும் இளம் பெண்கள் மாடலாக தைத்து அணிவதைத்தான் விரும்புகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் பெண்களுக்கு பிளவுசுகள் தைக்க பிரத்தியேகமாக நிறையக் கடைகள் முளைத்திருக்கின்றன.

'ஆரி ஒர்க்'

திருமணம் மற்றும் விழாக்களின் போது பெண்கள் கட்டும் சேலைகளுக்கு மேட்சாக, பிளவுசுகளில் முத்துக்களை கோத்தாற்போல் பாசிகளில், பல வண்ண சித்திர வேலைப்பாடுகள் செய்து தருகிறார்கள்.

'ஆரி ஒர்க்' என்று இதைச் சொல்கிறார்கள். அவ்வாறு வேலைப்பாடுகளுடன் ஒரு பிளவுசு தைக்க ஆயிரம், இரண்டாயிரம் அல்ல; ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் என கூலி ஆகுமாம்.

எனவே தையல் தொழில் நசிந்து வருகிறதா? நாகரிகத்திற்கு ஏற்றவாறு வேறு போக்கில் வளர்ந்து இருக்கிறதா? தையல் கலைஞர்களின் நிலை என்ன? என்பது குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

நலிவடையும் தையல் தொழில்

கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த தையல் தொழிலாளி சேகர்:- தையல் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து கொண்டே போகிறது. இதற்கு முக்கிய காரணம் தற்போது பெருகி வரும் ரெடிமேடு ஆடைகள் தான். முன்பெல்லாம் எங்கள் கடையில் 10-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்தனர். ஆனால் தற்போது மக்கள் ரெடிமேடு ஆடைகளை எடுப்பதால் துணி எடுத்து ஆடை தைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால் துணிகளும் கடைகளுக்கு அதிகமாக வருவதில்லை. இதனால் எங்களது கடையில் வேலை பார்த்த பலர் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். தற்போது பள்ளி சீருடையும் ரெடிமேடுகளில் கிடைப்பதால் துணி தைக்க யாரும் வருவதில்லை. இதனால் தையல் தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து கொண்டே செல்கிறது.

ஆன்லைன் வர்த்தகம்

அறந்தாங்கி அருகே விஜயபுரத்தை சேர்ந்த மேகலா:- நான் கடந்த 8 ஆண்டுகளாக தையல் தொழில் செய்து வருகிறேன். நாளுக்கு நாள் துணி தைக்கும் தொழில் நலிவடைந்து செல்கிறது. காரணம் ரெடிமேடு ஆடைகள் உடனே வாங்கி அணிந்து கொள்ளலாம். துணியாக வாங்கினால் தைத்து அணிய ஒரு வாரம் ஆகிறது. தையல் தொழில் நலிவடைய ரெடிமேடு ஆடைகள் மட்டும் காரணம் இல்லை ஆன்லைன் வர்த்தகமும் காரணம். தற்போது வேண்டிய ஆடைகளை அவர்களது செல்போன் மூலம் ஆன்லைன் மூலம் ஆர்டர் கொடுத்து வாங்குவதால் தையல் தொழில் நலிவடைந்து வருகிறது.

தொழில் பாதிப்பு

தையல் கடை உரிமையாளர் முக்கண்ணாமலைப்பட்டி சாகுல்அமீது:- தையல் கடைகளில் ஆண்டு முழுவதும் துணி தைக்கும் வேலை சுறுசுறுப்பாக நடக்கும். இதனால் தையல் தொழிலில் ஓய்வு என்பதே இல்லை. கடந்த காலங்களில் பொதுமக்கள் தங்களுக்கு பிடித்தமான துணிகளை வாங்கி, தையல் கடைகளில் கொடுத்து தைத்து அணிந்து வந்தனர். நாளடைவில் குறைவான விலையில் ரெடிமேடு ஆடைகள் வரத்தொடங்கியதால் தொழில் பாதிப்புக்கு ஆளாகி உள்ளது. துணி தைக்கும் பணத்தில் ரெடிமேடு ஆடைகள் வாங்கி விடலாம் என்று மக்கள் மத்தியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கூட சீருடைகள் தைக்கும் சீசனுக்கு பிறகு, ஆண்டின் மீதமுள்ள காலங்களில் வாடிக்கையாளர்கள் வரத்து இல்லை. இன்னும் 10 ஆண்டுகளில் தையல் கலைஞர்கள் மற்றும் தையல் கடைகள் இல்லாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தையல்வேலை குறைந்து விட்டது

புதுக்கோட்டையை சோ்ந்த தையல்தொழிலாளி பாண்டி:- ''நான் கடந்த 35 ஆண்டுகளாக தையற்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். முன்பு ஒரு காலத்தில் சட்டை, பேண்ட் தைப்பதற்கு தையற்கடைகளை தேடி அதிகம் பேர் வருவார்கள். குறிப்பாக தீபாவளி பண்டிகையின் போது புத்தாடைகள் தைப்பதற்காக கடைகளில் துணிகள் குவிந்து கிடக்கும். மேலும் தைக்கப்பட்ட புதிய ஆடைகளும் அடுக்கி வைக்கப்பட்டும், தொங்கவிடப்பட்டும் காணப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ரெடிமேடு ஆடைகளை பொதுமக்கள் விரும்பி யதால் தையற்கடைகளுக்கு அதிகம் பேர் வருவதில்லை. இதனால் தையற்வேலை குறைந்து விட்டது. ஒரு சிலர் மட்டுமே துணி எடுத்து தைத்து ஆடை அணிபவர்கள் உள்ளனர். அவர்கள் மட்டும் தையற்கடைக்கு வருவது உண்டு. முன்பு இருந்ததை விட தையற்கூலி உயர்ந்து விட்டதால், அதற்கு நாங்கள் அந்த தொகையில் ரெடிமேட்டில் சட்டை, பேண்ட் எடுத்துவிடுகிறோம் என கூறிவிடுகின்றனர். துணிக்கு தனி தொகையும், தைப்பதற்கு தனியாக கூலியும் என 2 வகை செலவு இருப்பதால் பொதுமக்கள் ரெடிமேடு ஆடைகளை நாடி செல்கின்றனர். ஆனால் அந்த ஆடைகளின் தரம் எவ்வாறு இருக்கும் என்பது அணிவதை பொறுத்து அவர்களுக்கு தெரியவரும். தையற்தொழில் நலிவடைந்ததால் கடைக்கு வாடகை, மின்சார கட்டணம், சம்பளம் கொடுப்பதற்கு பெரும் சிரமமாக உள்ளது.''

செலவு குறைகிறது

ரெடிமேடு கடை நடத்தி வரும் தாஜூதீன்:- ''இன்றைய காலக்கட்டத்தில் ரெடிமேடு ஆடைகளை தான் அனைவரும் விரும்புகின்றனர். பெரும்பாலும் உடல் அளவுக்கு தகுந்தாற்போல் சட்டை, பேண்ட் உள்ளிட்டவை வந்துவிட்டன. கடந்த 6 ஆண்டுகளாக இத்தொழில் முன்னணியாக உள்ளது. ரெடிமேடு கடைகள் அதிகமாக உருவானாலும், பெரிய அளவில் இத்தொழிலில் லாபம் இல்லை. வியாபாரம் பகிர்ந்து தான் காணப்படுகிறது. முன்பு குறைந்தது 10 நாட்களுக்கு முன்பு துணி எடுத்து, அதனை தைக்க கொடுத்து அணிவது உண்டு. ஆனால் இந்த ரெடிமேடு ஆடைகள் வந்தபின் நினைந்த நேரத்தில் ஆடைகளை எடுத்து பயன்படுத்த முடியும். இதனால் பலரும் ரெடிமேடு ஆடைகள் பக்கம் திரும்பியுள்ளனர். கால நேரம் மிச்சமாவதோடு, தையற்கூலி செலவும் குறைகிறது. புதுக்கோட்டையை பொறுத்தவரை ரெடிமேடு கடைகள் ஏராளமாக உள்ளன. அதில் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட அளவு வியாபாரம் நடைபெறுகிறது. ஆனால் வழக்கமாக தினசரி வியாபாரம் என்பது பெரிய அளவில் இருக்காது. தீபாவளி பண்டிகையில் மட்டும் தான் ரெடிமேடு ஆடைகள் விற்பனை அதிகமாகும். மற்ற பண்டிகைகளில் குறைவு தான். பெரிய ஊர்களில் உள்ள ரெடிமேடு கடைகளை போல் புதுக்கோட்டையில் தினசரி அதிக வியாபாரம் என்பது கிடையாது''.

அரசின் ஆதரவுக்கரம்

தமிழ்நாடு தையல் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் திவ்யநாதன்:-

தமிழ்நாட்டில் 60 லட்சம் தையல் தொழிலாளிகள் இருந்தார்கள். 'ரெடிமேடு' ஆடைகள் பயன்பாடு அதிகரித்த பின்னர் தையல் தொழில் நலிவடையத் தொடங்கியது. எனவே தையல் தொழிலாளர்கள் பலர் கட்டிட வேலை, பெயிண்டிங், ஆட்டோ ஓட்டுவது என்று தங்கள் தொழிலை மாற்றிக் கொண்டனர். இதனால் இந்தத் தொழில் அடுத்த தலைமுறைக்கு இருக்குமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தையல் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை, பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. தையல் தொழிலாளர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தனி நலவாரியம் அமைத்துத் தரவேண்டும். ரெடிமேடு ஆடைகள் வடமாநிலங்களில் இருந்து தைத்து அனுப்பப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் இதுபோன்ற ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தைக் கொண்டு வந்து தமிழகத்தை சேர்ந்த தையல் கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும்.

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சீருடை தைக்கும் ஒப்பந்தத்தை அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்காமல் நேரடியாக தையல் கலைஞர்களிடம் வழங்க வேண்டும். எங்கள் சங்கம் சார்பில் தனியார் பள்ளிக்கூடங்கள், தனியார் நிறுவனங்களின் சீருடையைத் தைத்து தருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். தடுமாறி வரும் தையல் தொழில் கீழே விழாமல் இருக்க அரசாங்கம் ஆதரவுக்கரம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

என்னதான் ரெடிமெடு ஆடைகள் வந்தாலும், துணியை எடுத்து தையல் தொழிலாளியிடம் தைத்து உடுத்துவதை இன்னும் சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் ரெடிமேடு ஆடை விலையை காட்டிலும் தையல் தொழிலாளர்கள் கேட்கும் தையல் கூலி அதிகம் என்ற ஆதங்கமும் மக்களிடையே இருக்கிறது.


Next Story