மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரவேற்புடையதா?


மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரவேற்புடையதா?
x

மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரவேற்புடையதா? என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர்

நாடாளுமன்றத்தின் இரு அவைகள் மற்றும் மாநில சட்டசபை ஆகியவற்றில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. நாடாளுமன்ற மேலவையிலும் இது நிறைவேறிய பிறகு சட்டவடிவம் பெறும். 2021-ம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் நடத்தப்படவில்லை. எனவே மக்கள் தொகை கணக்கு எடுப்புக்குப் பிறகு 2029-ம் ஆண்டு வாக்கில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான கட்சிகள் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை வரவேற்கின்றன. பிரதான கட்சிகள் உள் ஒதுக்கீடு கேட்கின்றன. 2010-ம் ஆண்டு இந்த இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு மக்களவையில் நிறைவேறாமல் போனது குறிப்பிடத் தக்கது. இத்தனை ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இந்த மசோதா தற்போது அவசர, அவசரமாக நிறைவேற்ற காரணம் என்ன என்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் எழுந்து உள்ளன. இதுபற்றி சமூக ஆர்வலர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

முழு திருப்தி தரவில்லை

பெரம்பலூர் சோழன் நகரை சேர்ந்த பட்டதாரி எம்.எஸ்.அபிநயா:- மத்திய அரசு மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க மசோதா தாக்கல் செய்துள்ளது பல ஆண்டுகளின் பதிலாய் இது ஒரு நல்ல மாற்றத்திற்கான, முன்னேற்றத்திற்கான வழியாய் அமையும். பல ஆண்டுகளாக, பல்வேறு ஆட்சிகளின் போது இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்படுவதும், பின்னர் சில கட்சிகள் எதிர்ப்பதும், மீண்டும் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு இடஒதுக்கீடு இடம் பெறுவதும் வாடிக்கையாக இருந்தது. இதுவரை சராசரியாக, அதிகபட்சமாக 14 சதவீதம் வரை தான் பெண்கள் எம்.பி.க்களாகவும், எம்.எல்.ஏ.க்களாகவும் இருந்துள்ளனர். இந்த நிலை இனி மாறும், அதிகாரத்தின் உச்சியில் பெண்கள் 'கொடி பறக்கும்' என்பதில் பெண் சமூகத்திற்கு ஓர் பெருமை. இந்த நாடாளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீடு ஒரு பக்கம் மகிழ்வை தந்தாலும், பல கோணங்களில் முழு திருப்தி தரவில்லை, மாற்றம் கீழ் இருந்து வந்தால் அது சிறப்பாக இருக்கும் அதாவது மாநிலங்களவையிலோ, மாநில சட்டமன்றங்களிலோ இட ஒதுக்கீடு பற்றி எதுவும் குறிப்பிடாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. 15 ஆண்டுகளாக 33 சதவீத இடஒதுக்கீடு வெறும் பேச்சாக மட்டுமே இருந்தது. இப்போது அறிவிப்பாக வந்திருப்பது வரவேற்புக்கு உரியது, பல்வேறு காரணங்களால் இது இத்தனை ஆண்டுகளாக நடக்கவில்லை. ஆனால் இப்போது இது நடக்க காரணமாக இருக்கும் பிரதமர் மோடிக்கு நன்றி சொல்ல கடமை உண்டு. ஆனால் இதை அரசியல் சூழ்ச்சிகள் கொண்டு கையாளாமல் இது நல்ல திறமையான பிரதிநிதியை முன் நிறுத்த வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம். இது மாற்றத்தின் தொடக்கமாக இருந்து பல இடங்களிலும், நிறுவனங்களிலும் சரியான இட ஒதுக்கீடு, தகுதிக்கேற்ற சம்பளம் கிடைக்க வழி வகுக்க வேண்டும். சட்டமாக 33 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து பல ஆளுமை மிக்க பெண்கள் குரல் நாடாளுமன்றத்தில் பல பிரச்சனைகளுக்கு ஒலிக்க வேண்டும்.

சம விகிதத்தில் போட்டியிடும் சூழ்நிலை

உடையார்பாளையம் வக்கீல் காந்திமதி:- நீண்ட கால போராட்டத்தின் அடிப்படையில் பல்வேறு அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் தற்போது தாக்கல் செய்துள்ளனர். இந்திராகாந்தி, ஜெயலலிதா போன்று பெண் ஆளுமைகள் அரசியலில் அதிக அளவில் இல்லாமல் இருப்பதற்கு அடிப்படை காரணம் பெண்களுக்கு அரசியலில் போதிய வாய்ப்புகள் வழங்கப்படாததே. எதிர்காலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் அரசியல் களத்தில் பல்வேறு உயர்ந்த நிலைகளை எட்ட வேண்டும் என்றால் தேர்தலில் ஆண்களும், பெண்களும் சரி சம விகிதத்தில் போட்டியிடும் சூழ்நிலை உருவாக வேண்டும். அதற்கு அடிப்படையாக தற்போதைய 33 சதவீத இட ஒதுக்கீடு என்பது மிகவும் இன்றியமையாதது. பெண்கள் அரசியல் களத்தில் பணி செய்வதற்கு இது ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கும்.

அரியலூர் மகளிர் சங்க செயலாளர் அனுராதா:- நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்துள்ளது முற்றிலும் வரவேற்கத்தக்கது. இதேபோல் எல்லா விஷயங்களிலும் மகளிருக்கு முன்னுரிமையும், இடஒதுக்கீடும் கொடுத்தால் அது பெண்களுக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக அமையும். மேலும் இதன்மூலம், தமிழ்நாட்டில் இருப்பது போல் மற்ற மாநிலங்களிலும் பெண்களிடம் அரசியல் ஆர்வமும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அனைத்துக்கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்

இடங்கண்ணியை சேர்ந்த குடும்பத்தலைவி மனோசித்ரா:- அவ்வையார் காலம் தொடங்கி இன்று வரை பெண்கள் திறமை அடிப்படையில் தங்களை இந்த உலகத்திற்கு நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கான வாய்ப்புகளை ஆண்களிடமிருந்து கேட்டு பெற வேண்டி இருக்கிறது. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நீண்ட தொடர் பயணத்தை கடந்து இப்போது மீண்டும் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்களது தாயை, மனைவியை, சகோதரிகளை மதிக்கும் அனைத்து ஆண்களும் நிச்சயம் இந்த மசோதாவை ஏற்றுக் கொள்வார்கள். நாடாளுமன்றத்தில் கட்சி பேதம் இல்லாமல் அனைத்து ஆண், பெண் உறுப்பினர்களும் இட ஒதுக்கீடு மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்றி தர வேண்டும். நிச்சயமாக 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா சட்டமாக்கப்பட்டால் இந்திய அரசியலமைப்பு சட்ட வரலாற்றில் நிச்சயம் இது ஒரு மைல் கல்லாக அமையும்.

அரியலூரை சேர்ந்த மகப்பேறு டாக்டர் ப.பிரியாஷாரன்:- இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்கள் பிரதிநிதித்துவம் 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. அதுவும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் கூட்டத்தில் முதல் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் ஒப்புதல் அளித்து சட்டமாக நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டும். வருங்காலங்களில் கூடுதலாக இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். கடந்த 1996-ம் ஆண்டு முதல் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு தற்போது மீண்டும் தாக்கல் செய்யப்படுவதை சட்டமாக நிறைவேற்ற அனைத்துக்கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும். பெண்களின் பிரதிநிதித்துவத்தை காக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் சட்டசபை மற்றும் நாடாளுமன்றங்களிலும் தங்களது பேச்சுக்களாலும், கருத்துக்களாலும் சாதனை படைக்க பெண்கள் காத்திருக்கிறார்கள்.

ஆணுக்கு நிகராக பெண்கள்

பெரம்பலூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை காயத்ரி:- ஒரு காலத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர தயங்கிய காலம் போய் தற்போது பெண்கள் பணிபுரியாத துறையே இல்லை என்ற அளவிற்கு வளர்ந்துள்ளது வரவேற்கத்தக்கது. மேலும் ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் டிரைவர் வேலையிலும் பெண்கள் அதிக அளவில் ஈடுபாட்டுடன் செய்து வருகின்றனர். அதேபோல் அரசியலிலும் அதிகளவு பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது மத்திய அரசு மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியிருப்பது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அரசியலில் வரும் காலங்களில் ஆணுக்கு நிகராக பெண்கள் ஈடுபட உள்ளார்கள். இந்த இட ஒதுக்கீடு ஆனது பெண்கள் அதிக அளவில் அரசியலில் ஈடுபடுவதற்கு வழிவகை செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story