சர்ச்சைக்குரிய புத்தகங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு உள்ளதா? - ஐகோர்ட்டு கேள்வி


சர்ச்சைக்குரிய புத்தகங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு உள்ளதா? -  ஐகோர்ட்டு கேள்வி
x

சர்ச்சைக்குரிய புத்தகங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழு உள்ளதா? என அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.

சென்னை,

குழந்தை ராயப்பன் என்பவர் எழுதியுள்ள மதுரை வீரன் உண்மை வரலாறு என்ற புத்தகத்தை ஆதித்தமிழர் பேரவை வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தில் பல்வேறு தகவல்கள் திரித்துக் கூறப்பட்டுள்ளதாகவும், பல்வேறு சமூகத்தினரை சாதிய கண்ணோட்டத்துடன் விமர்சனம் செய்துள்ளதாகவும் கூறி கடந்த 2015-ம் ஆண்டு தமிழக அரசு தடை செய்தது.

இந்த தடையை நீக்கக்கோரி குழந்தை ராயப்பன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், இந்த புத்தகத்தில் சாதிய ரீதியாக எதையும் குறிப்பிடவில்லை என்பதால் தடையை நீக்க வேண்டும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "ஏற்கனவே 2 ஆயிரம் புத்தகங்கள் விற்பனையாகி விட்டது. ஜனநாயக நாட்டில் பேச்சுரிமைக்கும், கருத்துரிமைக்கும் தடை விதிக்க முடியாது. ஏற்கெனவே எழுத்தாளர் பெருமாள்முருகன் எழுதிய மாதொருபாகன் வழக்கிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, 'இதுபோன்ற புத்தகங்களை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. அதுபோல ஏதாவது நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதா? அப்படி அமைக்கப்பட்டிருந்தால், அந்த குழுவில் யாரெல்லாம் நிபுணர்களாக உள்ளனர்? என்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறேன்" என்று உத்தரவிட்டுள்ளார்.


Next Story