பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் நிர்வாகத்தில் கணவர் தலையீடு உள்ளதா?


பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் நிர்வாகத்தில் கணவர் தலையீடு உள்ளதா?
x

பெண் ஊராட்சி மன்ற தலைவர்கள் செயல்படுகிறார்களா, அல்லது கணவர்களின் தலையீடு உள்ளதா என்பதை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்காணிக்க கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

ராணிப்பேட்டை

பயிற்சி கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் கிராம ஊராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்படுவது, ஊராட்சி மன்ற தலைவர்களின் கடமைகள், அதிகாரங்கள் குறித்து எஸ்.சி., எஸ்.டி. கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பயிற்சி கூட்டம் நடைபெற்றது.

கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். திட்ட இயக்குனர் லோகநாயகி முன்னிலை வகித்தார். ஊராட்சிகள் உதவி இயக்குனர் குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

கணவர்கள் தலையீடு

கிராம ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் பெண்களாக இருக்கும் ஊராட்சிகளில் அவர்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அரசு வழங்கியுள்ள பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் பெண் தலைவர்கள் பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். ஆனால் பல இடங்களில் பெண் தலைவர்கள் செயல்படாமல் அவர்களின் கணவன்மார்கள், உறவினர்கள் தலைவருக்கான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவறானது. பெண்களின் நிர்வாகத் திறமையை முடக்கும் விதமானது. இதனை அனுமதிக்கக்கூடாது.

பெண் தலைவர்கள் தைரியமாக தலைவர் பதவியினை செய்ய வேண்டும். அச்சம் கொள்ள தேவையில்லை. தெரியாததை கற்றுக்கொண்டு உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி கிராமத்தின் வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும். பெண் தலைவர்கள் செயல்படுகிறார்களா அல்லது உறவினர்கள் அதில் ஈடுபடுகின்றனரா என்பதை கண்காணித்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிளாஸ்டிக்

ஊராட்சி மன்ற தலைவர்கள் கிராமத்தில் குடிநீர், சாலை, சுகாதாரம், மின்சாரம் போன்ற பிரச்சினைகள், தேவைகள் குறித்து அறிந்து பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இதனை ஆண்டுதோறும் தெரிவித்து வந்தாலும் யாரும் இதனை பொருட்டாக மதிப்பதில்லை. நகரத்தை விட கிராமத்தில் தான் பிளாஸ்டிக் அதிகரித்து வருகிறது.

அரக்கோணம், சோளிங்கர் பகுதிகளில் அதிக குழந்தை திருமணம் நடப்பது கண்டுபிடிக்கப்படுகிறது. இது தடுக்கப்பட வேண்டும். இங்கு வந்துள்ள அனைத்து தலைவர்களும் உங்கள் ஊராட்சியினை சிறப்பாக நடத்தி மத்திய, மாநில அரசுகளின் விருதுகளை பெற்று கிராமத்தின் பெயரை ஊரறிய செய்ய வேண்டும். உங்களால் அனைத்தும் செய்ய முடியும். ஊராட்சியின் அனைத்து விதமான கணக்குகளையும் தலைவர்கள் தெரிந்திருக்க வேண்டும். தெரியாது என்று உறுவினர் தான் இதை பார்க்கிறார் என்று தெரிவிப்பது முற்றிலும் தவறானது.

ஒற்றுமையுடன்...

உங்கள் பொறுப்பில் தான் கிராமத்தை அரசு கொடுத்துள்ளது. கிராம நிர்வாகத்தில் விருப்பு, வெறுப்பின்றி சாதி, மத வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story