இதுதான் திராவிட மாடலா?-பள்ளி குழந்தைகளுக்கு உப்புமா, கிச்சடி; சிறை கைதிகளுக்கு சிக்கன், முட்டை - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி
பள்ளி குழந்தைகளுக்கு உப்புமா, கிச்சடி தருவதும், சிறை கைதிகளுக்கு சிக்கன், முட்டை வழங்குவதும்தான் திராவிட மாடல் ஆட்சியா? என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பி உள்ளார்.
பள்ளி குழந்தைகளுக்கு உப்புமா, கிச்சடி தருவதும், சிறை கைதிகளுக்கு சிக்கன், முட்டை வழங்குவதும்தான் திராவிட மாடல் ஆட்சியா? என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பி உள்ளார்.
உண்மையான விடியல்
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சி எப்போது வீட்டுக்கு போகும் என்று மக்கள் எண்ண தொடங்கி விட்டனர். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனால்தான் தமிழக மக்களுக்கு உண்மையான விடியல் கிடைக்கும். மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது தி.மு.க. தான்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பா.ஜனதா கட்சிக்கு தி.மு.க. பல்லக்கு தூக்கி அமைச்சரவையிலும் இடம் பிடித்தது. அடுத்து வந்த மன்மோகன் சிங் ஆட்சியிலும் காங்கிரஸ் கட்சிக்கு பல்லக்கு தூக்கி முக்கிய துறைகளில் அமைச்சர் பதவி பெற்றது. அந்த சமயத்தில் தான் 2 ஜி மூலம் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி வரை தி.மு.க ஊழல் செய்தது. பா.ஜனதாவுக்கு எதிராக தி.மு.க. தேசிய அளவில் கட்சிகளை திரட்டி வருகிறது. எனவே மு.க.ஸ்டாலின் தான் பிரதமர் என்று தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். ஏற்கனவே தமிழக மக்கள் அவர்களிடம் சிக்கி உள்ளனர். இது போன்று இந்திய மக்களும் சிக்க வேண்டுமா?.
அ.தி.மு.க.விற்கு கூட்டணி என்பது துண்டு மாதிரி. ஒரு தேர்தலில் வாக்குகள் சிதற கூடாது என்பதற்காக கூட்டணி வைக்கிறார்கள். தி.மு.க. கடந்த தேர்தலில் தனித்து இருந்தால், எடப்பாடி பழனிசாமி தான் முதல்-அமைச்சராக இருந்து இருப்பார். 13 கட்சியுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருக்கிறது.
ரஜினி அதிக சம்பளம்
போக்குவரத்து துறையில் ஊழியர்கள் பற்றாக்குறையால் அரசு பஸ்கள் டெப்போவில் முடங்கி கிடக்கிறது. அதே போல் ரேஷன் கடைகளிலும் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஒரே ஊழியர் 3 கடைகளில் பணியாற்றுகின்றார். நடிகர் விஜய், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏழை மக்களுக்கு உணவு அளிப்பது வரவேற்கதக்கது. இதே போல் மற்ற நடிகர்களும் உதவி செய்ய வேண்டும். ரஜினி அதிக சம்பளம் வாங்குகிறார். அவரும் மக்களுக்கும் அதிகம் செய்ய வேண்டும். சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. போதை மாநிலமாக தமிழகம் மாறி விட்டது. டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சாராயம் விற்பது கொடுமையானது.
அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகமானதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான். ஏனென்றால் அவர் தான் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கினார்.
திராவிட மாடல் ஆட்சியா?
அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். பள்ளி குழந்தைகளுக்கு தி.மு.க. அரசு சத்து இல்லாத உப்புமா, கிச்சடி போன்ற உணவுகளை தருகிறார்கள். தினமும் அதையே பள்ளி குழந்தைகள் எப்படி சாப்பிட முடியும். ஆனால் சிறை கைதிகளுக்கு சிக்கன், முட்டை என வித,விதமான உணவு வழங்குகிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? தவறு செய்பவர்கள் தான் இந்த ஆட்சியில் நன்றாக வாழ்கிறார்கள். கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களுக்கே நிவாரணம் தந்த அரசு அல்லவா இது?. இவ்வாறு அவர் கூறினார்.