கடற்கரை கிராம வரைபடத்தில் தூத்தூர் விடுபட்டுள்ளதா?
குமரி மாவட்ட கடற்கரை கிராம வரை படத்தில் தூத்தூர் விடுபட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கொல்லங்கோடு:
குமரி மாவட்ட கடற்கரை கிராம வரை படத்தில் தூத்தூர் விடுபட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
கடற்கரை கிராம வரைபடம்
குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை சுமார் 72 கிலோமீட்டர் தூரத்திற்கு 40-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பெரும்பாலும் ஆழ்கடலில் மீன்பிடி தொழில் செய்வதில் கை தேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர். இதிலும் குறிப்பாக தூத்தூர் மண்டலத்தில் தான் ஏராளமான ஆழ்கடல் விசைப்படகுகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மத்திய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை மண்டலம் என்ற அமைப்பு மீனவ மக்களின் குறைகள் மற்றும் அவர்களது வாழ்க்கை தரம் உயர்த்த தேவையான நடவடிக்கைகள் குறித்து கள ஆய்வு நடத்தி அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து வருகிறது.
அதன்படி குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களின் வரைபடம் ஒன்றை தயார் செய்துள்ளது.
விடுபட்டு உள்ளதா?
அதில் கடற்கரை கிராம ஊராட்சியின் பெயரில் இயங்கும் தூத்தூர் மீனவ கிராமம் விடுபட்டு உள்ளது என மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இது மீனவ மக்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் குமரி மாவட்ட வரை படத்திலும் தூத்தூர் பெயர் இடம்பெறவில்லை என்பது மீனவ மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இது சம்பந்தமாக தூத்தூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஜோஸ்பில்பின் கூறியதாவது:-
மீனவர்கள் குற்றச்சாட்டு
தூத்தூர் மீனவ கிராமம் என்பது நீரோடி முதல் இரையுமன்துறை வரை உள்ள 8 ஊர்களின் தலைமையிடமாக உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் ஊராட்சி அமைப்பு, அரசு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை, அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, கல்லூரி, வங்கி, தபால் நிலையம், பஸ் நிலையம் உள்ளிட்ட அரசுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தூத்தூர் என்ற பெயரிலேயே காணப்படும் நிலையில் வேண்டுமென்றே வரைபடங்களில் இருந்து தூத்தூர் மீனவ கிராமத்தை நீக்கம் செய்து உள்ளதாகவும் தற்போது அனைத்து மீனவ கிராமங்களையும் கடற்கரை மார்க்கமாக ஒன்றிணைக்கும் விதமாக கடற்கரை சாலை திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த திட்டத்திற்காக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள வரைபடத்திலும் தூத்தூர் மீனவ கிராமம் விடுபட்டுள்ளதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டுவதோடு, நாகை மாவட்டத்திலும் இதுபோன்று பல மீனவ கிராமங்கள் அத்திபட்டிகளாக மாறி உள்ளன. எனவே விரைவில் விடுபட்ட அனைத்து வரைபடங்களிலும் தூத்தூர் மீனவ கிராமத்தை இணைக்க மாவட்ட நிர்வாகமும், மத்திய-மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தில் இறங்க போவதாகவும் மீனவ மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.