ரெயில் பயணம் பாதுகாப்பானது தானா? பயணிகள் கருத்து


ரெயில் பயணம் பாதுகாப்பானது தானா? பயணிகள் கருத்து
x
தினத்தந்தி 5 Jun 2023 8:06 PM GMT (Updated: 6 Jun 2023 6:18 AM GMT)

ரெயில் பயணம் பாதுகாப்பானது தானா? என்பது குறித்து பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரியலூர்

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் 2-ந் தேதி இரவு நடந்த சென்னை கோரமண்டல் ரெயில் விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்துவரும் இன்றைய காலகட்டத்தில் வெறும் 'சிக்னல்' பிரச்சினையால் 3 ரெயில்கள் முட்டி மோதிக்கொண்டதில் 275 அப்பாவிப் பயணிகளின் உயிர்கள் பறிபோயிருப்பதை நினைக்கையிலே நெஞ்சம் பதறுகிறது.

வரும் காலங்களிலாவது இதுபோன்ற விபத்துகளை முற்றிலும் தடுக்க ரெயில்வே நிர்வாகம், தொழில்நுட்பங்களை அதிகம் பயன்படுத்தி பாதுகாப்பான பயணத்துக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் அதன்மேல் உள்ள நம்பகத்தன்மை போய்விடும்.

இன்றைய நிலையில் ரெயில் பயணம் பாதுகாப்பானது என்று உணருகிறீர்களா? என்று பெரம்பலூர்-அரியலூர் பகுதிகளை சேர்ந்த ரெயில் பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பயணிகள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-

அச்சம் ஏற்படுகிறது

அரியலூரை சேர்ந்த சிற்றம்பலம்:- ரெயில் பயணம் மிகவும் சுகமானதுதான். ஆனால் தற்போது ஒடிசாவில் ஏற்பட்ட மோசமான ரெயில் விபத்தை பார்க்கும்போது ரெயிலில் பயணம் செய்ய அச்சம் ஏற்படுகிறது. ஏற்கனவே முதியவர்கள், சிறுவர்கள் ரெயில் பயணம் மேற்கொள்ளும்போது சில இடர்பாடுகள் உள்ளது. அதாவது நடைமேடைக்கும், ரெயில் பெட்டிக்கும் இடையே இடைவெளி அதிகமாக உள்ளது. சில ரெயில் நிலையங்களில் 2 நிமிடங்கள் தான் ரெயில் நிற்கிறது. இந்த நேரத்தில் பயணிகள் விரைவாக ஏறவும், இறங்கவும் வேண்டும். கொஞ்சம் தடுமாறினாலோ, ரெயில் புறப்பட்டுவிட்டாலோ தவறி விழுந்து, ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிக்கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்டவாளங்கள் பழுதை சரியான முறையில் நீக்க வேண்டும். வருடத்திற்கு 5 ஆயிரம் கிலோமீட்டர் பழுதை நீக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, பாதி தூரம்தான் பழுதை நீக்க முடிவதாக கூறப்படுகிறது. சிக்னல் கட்டமைப்பு பகுதிகள் பழுது ஆவதாகவும், நீக்குவதற்கு எந்த முன்னேற்பாடுகளும் இல்லை என்றும் கூறப்படுகிறது. ரெயில்களின் பெயரை மட்டும் மாற்றினால் கட்டணம் தான் உயருமே ஒழிய, வசதியும், பாதுகாப்பும் இருக்காது. எனவே ரெயில் சேவையில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் பயணிகள் அச்சமின்றி பயணிக்க முடியும்.

கூடுதல் பாதுகாப்பு வசதிகள்

பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த ஆர்.கே.பிரபு:- ஒடிசா ரெயில் விபத்து உலகத்தையே உலுக்கியுள்ளது. நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் ஏற்பட்ட ஒடிசா ரெயில் விபத்து போல் இனி பெரிய விபத்து ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கவாச் தொழில்நுட்பம் செயல்பாட்டிற்கு கொண்டு வந்திருந்ததால் ஒடிசாவில் இந்த பெரிய ரெயில் விபத்து நடந்திருக்காது. கவாச் தொழில்நுட்பமானது லோக்கோ பைலட்டுகள் என்றழைக்கப்படும் ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும். எஸ்.பி.ஏ.டி., சிக்னல் பாஸிங் அட் டேஞ்சர் எனப்படும் இந்த சமிக்ஞையானது ஒரே மார்க்கத்தில் இரு ரெயில்கள் வந்தால் எச்சரிக்கும். மிகுந்த அடர்த்தியான பனி மூட்டம் இருக்கும்போது எதிரே ரெயில் வந்தால் எச்சரிக்கை செய்யும். மேலும் இது தானாகவே பிரேக் அப்ளை செய்து ரெயிலின் வேகத்தை மட்டுப்படுத்தி விபத்துக்கான சாத்தியத்தை குறைக்கும். ரெயில்களில் கவாச் தொழில்நுட்பத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது ரெயில்வே சிக்னலில் கோளாறால் ஏற்பட்ட உடனடியாக சரி செய்ய வேண்டும். ரெயில் இருப்பு பாதையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ரெயில்வே துறையில் இன்னும் கூடுதலாக பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

ஏற்க முடியாது

கீழக்கொளத்தூரை சேர்ந்த அமுதா:- ரெயில் பயணம் என்பது பொதுவாகவே பாதுகாப்பு நிறைந்ததாகவே பார்க்கப்படுகிறது. ரெயில் பயணம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான பயணமாகும். தொலை தூரம் பயணிக்க பஸ்சை விட ரெயில் பயணமே சிறப்பானது. பாதுகாப்பானது. அதே சமயம் பொருளாதார ரீதியாகவும் பஸ், விமானத்தை விட ரெயிலில் கட்டணங்கள் குறைவானது. பஸ்களில் இல்லாத வசதிகளான கழிப்பறைகள் மற்றும் உணவு விற்பனை உள்ளிட்டவை ரெயிலில் கிடைக்கிறது. விபத்து என்பது தவிர்க்க முடியாதது. இருப்பினும் பயணங்களை தவிர்க்க முடியாது. அதைப்போலவே ரெயில் பயணங்களிலும் சில சமயங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. ஆனால் இதில் ஏராளமான உயிர்கள் பறிபோவது ஏற்க முடியாதது. எனவே இது போன்ற விபத்துகளை தவிர்க்க உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கவனக்குறைவே காரணம்

விக்கிரமங்கலத்தை சேர்ந்த எழிலரசன்:- இன்றைய சூழலில் அதிக தூரம் பயணிக்கும் பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பானதாகவும், குறைவான நேரங்களிலேயே அதிக தூரத்தை சென்றடைவதற்கும், பல சவுகரியங்கள், கழிப்பிட வசதி, அதிக அதிர்வு இல்லாமல் இதமாக செல்லுதல் போன்ற பல நன்மைகள் நிறைந்தது ரெயில் பயணம். தற்போது ஒடிசாவில் நடந்த ரெயில் விபத்து மிகவும் வருத்தம் அளிக்கும் நிகழ்வு. இதற்கு நவீன யுக்திகளை கையாளாததும், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கவனக்குறைவே இதற்கு காரணம். மற்றபடி ரெயில் பயண விபத்துகள் என்பது மிக மிக குறைவாகத்தான் உள்ளது. தனிநபராக இருந்தாலும், குடும்பமாக இருந்தாலும் பயணங்களுக்கு மிகவும் சிறந்தது ரெயிலில் செல்வதுதான். திருச்சியில் இருந்து சென்னைக்கு இருமார்க்கத்திலும் அதிக பயணிகள் பயணிக்கின்றனர். இந்த மார்க்கத்தில் அதிக ரெயில்களை இயக்குவதோடு, ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை அதிகமாக இணைக்க வேண்டும்.

விபத்துகள் இல்லாத பயணம்

மீன்சுருட்டி பகுதியை சேர்ந்த மணிவண்ணன்:- நான் மாதத்தில் நான்கு அல்லது ஐந்து முறை ரெயிலில் பயணம் செய்கின்றேன். ரெயில் பயணம் பாதுகாப்பானது தான். எப்போதாவது இது போன்ற விபத்துகள் நடைபெறுகிறது. ஆனால் இதை தவிர்க்க முடியாத சூழ்நிலை என்று கூற இயலாது. ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற விபத்து எதிர்பாராதது என்றுதான் கூற வேண்டும். இருப்பினும் ரெயில் பயணம் மிகவும் பாதுகாப்பானது. சிக்னல்கள் சரியாக செயல்பட்டால் மட்டுமே பாதுகாப்பான மற்றும் விபத்துகள் இல்லாமல் ரெயில் பயணம் நிறைவடையும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story