நடவு செய்யப்பட்ட நெல் நாற்று வெளிறிய மஞ்சள் நிறத்தில் உள்ளதா?
நடவு செய்யப்பட்ட நெல் நாற்று வெளிறிய மஞ்சள் நிறத்தில் உள்ளதா? அது நோயல்ல என்றும், ஜிங் சல்பேட் பயன்படுத்துங்கள் என்றும் வேளாண் அதிகாரி கூறியுள்ளார்.
தியாகதுருகம்:
தியாகதுருகம் பகுதியில் விவசாயிகள் நாற்று விடுதல் மற்றும் நடவு வயல் செப்பணிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தியாகதுருகம் பகுதியில் மட்டும் 7 ஆயிரத்து 500 ஏக்கர் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு நெற்பயிர் நடவு செய்தவுடன் நிலத்திலுள்ள ஜிங்க் சத்தானது பயிருக்கு போதிய அளவில் கிடைப்பதில்லை. இதனால் நடவு செய்யப்பட்ட நாற்று போதிய அளவு பச்சை காட்டாமல், வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனை நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தவறாக புரிந்து கொள்கின்றனர். இது நோயல்ல. ஜிங்க் சத்து பற்றாக்குறையால் ஏற்படுகிறது.
மானிய விலையில் உரம்
எனவே பயிருக்கு போதிய அளவு ஜிங்க் சத்து அளிப்பதற்காக தமிழக அரசு மாநில வேளாண் விரிவாக்க வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் ஜிங்க் சல்பேட் உரத்தினை வேளாண் துறையின் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.
அதன்படி தியாகதுருகம் வேளாண் மையத்தில் ஜிங்க் சல்பேட் 3 ஆயிரம் கிலோ இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ ரூ.45 வீதம் மானிய விலையில் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 10 கிலோ வரை வழங்கப்படும். ஒரு ஏக்கருக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் மணலுடன் கலந்து நடவு செய்வதற்கு முன் அல்லது நடவு செய்த 3 நாட்களுக்குள் வயலில் இட வேண்டும்.
மேலும் விவசாயிகளுக்கு தேவையான ஜிப்சம் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் வினியோகம் செய்வதற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் ஜிங்க் சல்பேட் மற்றும் ஜிப்சம் ஆகியவற்றை வாங்கி பயனடையலாம்.
இந்த தகவலை வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு தெரிவித்துள்ளார்.