இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு


இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு
x

பாபநாசத்தில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசம் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் அவர்கள் அமர்வதற்கு வசதியாக கோவிலின் முன்பு பேவர் பிளாக் தளம் அமைக்கப்பட்டது. அந்த பகுதியில் கோவில் நிர்வாகம் சார்பில் தற்காலிக கடைகள் உள்ளன. அந்த கடைகளுக்கு தினசரி வாடகை வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாபநாசத்துக்கு வந்த நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனிடம், இந்த கடைகள் மூலம் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பயன்பாடு அதிகமாக இருப்பதாகவும், இதனால் தாமிரபரணி ஆறு உட்பட சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் இருப்பதாகவும், மேலும் கோவில் பகுதியில் பேவர் பிளாக் தளம் எதற்காக அமைக்கப்பட்டதோ அதற்கான பயன்பாடு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள தற்காலிக கடைகளை அகற்ற கோவில் நிர்வாகத்துக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த நிலையில் அங்கு கடை நடத்துபவர்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் நேற்று பாபநாசத்துக்கு வந்து அங்குள்ள கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி போத்திச்செல்வியிடம் பேசினார். அப்போது கலெக்டர் உத்தரவை தொடர்ந்து கோவில் பகுதிகள் மற்றும் தாமிரபரணி ஆறு மாசுபடாமல் இருக்க சில நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டி இருப்பதாக கோவில் நிர்வாக அதிகாரி கூறினார்.

இந்த ஆய்வின்போது விக்கிரமசிங்கபுரம் நகராட்சி கமிஷனர் கண்மணி, ஓவர்சீயர் சரவணன், கோவில் அலுவலர் செந்தில், மணிமுத்தாறு பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவன்பாபு, விக்கிரமசிங்கபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் கண்ணன், ஒன்றிய துணைச்செயலாளர் பிராங்கிளின் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story