ஐ.எஸ்.ஐ. முத்திரையிடப்படாத தோல் பொருட்களை விற்றால் நடவடிக்கை
ஐ.எஸ்.ஐ. முத்திரையிடப்படாத தோல் பொருட்களை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்திய தர நிர்ணய சென்னை கிளை அலுவலகம் சார்பில், அனைத்து பொருட்களுக்கான புதிய தர நிர்ணயம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ராணிப்பேட்டை மாவட்ட அனைத்துத் துறை அலுவலர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சென்னை கிளை அலுவலக விஞ்ஞானி மற்றும் தலைவர் பவானி கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது:-
ஐ.எஸ்.ஐ. முத்திரை
பொதுமக்கள் மத்தியில் அரசு வழங்கும் பொருட்கள் தரமான முறையில் இருக்கிறது என்பதை மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் அனைத்து வகையான பொருட்களுக்கும் தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவைகளை தெரிந்து அவற்றின் தரத்தினை அறிந்து கொள்ள வேண்டும். இந்திய தர நிர்ணயம் சுமார் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களுக்கு தர நிர்ணயங்களை உருவாக்கியுள்ளது.
தற்போது ஜனவரி 2023 முதல் கால்நடை தீவனங்களும் ஐ.எஸ்.ஐ. முத்திரையிடப்பட்டு விற்பனை செய்யப்படுவதை அங்கீகரித்துள்ளது. ஆகவே ஐ.எஸ்.ஐ. முத்திரை பதிக்கப்படாத தீவனங்கள் விற்பனை செய்வதை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நடவடிக்கை
அதேபோல 24 வகையான தோல் உற்பத்தி பொருட்களுக்கும் அடுத்த மாதம் (ஜூலை) 1-ந் தேதி முதல் தர நிர்ணயம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த அனைத்து வகையான தோல் பொருட்களும் ஐ.எஸ்.ஐ. முத்திரையுடன் விற்பனை செய்வதை கண்காணிக்க வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெரிய தோல் பொருட்கள் உற்பத்தி நிறுவனங்கள் ஏற்கனவே அனுமதி பெற்றுள்ளன. மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தர கட்டுப்பாட்டை பெற நடவடிக்கை எடுத்துள்ளன. ஐ.எஸ்.ஐ. முத்திரையிடப்படாத தோல் பொருட்களை விற்பனை செய்வதை கண்டறிந்தாலோ அல்லது உற்பத்தி செய்ததை விற்பனைக்கு கொண்டு வரும் நிறுவனங்களின் மீது சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
செயலி அறிமுகம்
தரக்கட்டுப்பாட்டுகளை அனைத்து நுகர்வோர்களும் எளிதில் உடனுக்குடன் தங்கள் செல்போனில் தெரிந்து கொண்டு பொருட்களின் தரத்தை உறுதி செய்யும் வகையில் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இவைகளை அரசு அலுவலர்கள் பயன்படுத்துவது மட்டுமில்லாமல் அனைத்து பொது மக்களுக்கும் இதை கொண்டு சேர்க்க வேண்டும். தரமற்ற பொருட்கள் குறித்த தகவல்களையும் அதே செயலியில் பதிவு செய்தால் அந்த பொருள்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, இந்திய தர நிர்ணய துணை இயக்குனர் தினேஷ் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.