தீவு போன்ற மணல் பரப்பில் மயங்கி கிடந்த வயதான தம்பதி


தீவு போன்ற மணல் பரப்பில் மயங்கி கிடந்த வயதான தம்பதி
x

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு படகில் அகதிகளாக வந்து தீவு போன்ற மணல் பரப்பில் மயங்கி கிடந்த வயதான தம்பதி மீட்கப்பட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு படகில் அகதிகளாக வந்து தீவு போன்ற மணல் பரப்பில் மயங்கி கிடந்த வயதான தம்பதி மீட்கப்பட்டனர்.

மயங்கி கிடந்தனர்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் தற்போது வரை ராமேசுவரத்தை அடுத்த தனுஷ்கோடிக்கு 90 பேர் அகதிகளாக வந்துள்ளனர். அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் தனுஷ்கோடி கோதண்ட ராமர் கோவில் எதிரே உள்ள ஆழம் குறைந்த தண்ணீரின் நடுவே உள்ள மணல் திட்டில் 2 அகதிகள் வந்து இறங்கி இருப்பதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தபோது, இலங்கையில் இருந்து வந்திருந்தவர்கள் வயதான தம்பதி என்பது தெரியவந்தது. அவர்கள் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களால் சரிவர பேச முடியவில்லை.

2 பேரையும் கடலோர காவல் நிலையம் அழைத்து வர முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் 2 பேராலும் எழக்கூட முடியவில்லை. இதையடுத்து 2 பேரையும் ஆம்புலன்சில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கடலோர போலீசார் முடிவு செய்தனர். ஆம்புலன்ஸ் கோதண்டராமர் கோவில் பகுதிக்கு கொண்டுவந்து நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆனால் அகதிகள் இறக்கப்பட்ட பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்ட பகுதிக்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீரில் இறங்கி நடந்து வரவேண்டி இருந்தது.

ஹோவர்கிராப்ட் கப்பல்

இதைத்தொடர்ந்து கடலோர போலீசார், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

தம்பதி மீது வெயில் படாமல் இருக்க துணி மூலம் கடலோர போலீசார் நிழல் ஏற்படுத்தி முதல் உதவி செய்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர், இந்திய கடலோர காவல் படையின் தரையிலும் தண்ணீரிலும் செல்லும் ஹோவர்கிராப்ட் கப்பல் அங்கு வந்தது. பின்னர் 2 பேரையும் அந்த கப்பலில் ஏற்றி ராமேசுவரம் கடற்கரைக்கு கொண்டுவந்தனர். அங்கு தயாராக நிறுத்தப்பட்டு இருந்த ஆம்புலன்சில் ஏற்றி ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அந்த வயதான தம்பதி கொண்டு வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கூலி வேலை

இதற்கிடையே அவர்களிடம் கடலோர போலீசார் நடத்திய விசாரணையில், இலங்கையில் மன்னார் மாவட்டம் பிருங்கன்பட்டி பகுதியை சேர்ந்த சிவன் (வயது 82), அவருடைய மனைவி பரமேசுவரி (வயது75) என்பது தெரியவந்தது.

இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளதாகவும், இதில் மகன் மட்டும் தமிழகத்தில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கூலி வேலை பார்த்து வந்ததாகவும் விலைவாசி உயர்வால் அங்கு வாழ முடியாதநிலை ஏற்பட்டதால், முதுமை காலத்தில் மகனுடன் சேர்ந்து வாழ்வதற்காக பிளாஸ்டிக் படகு மூலம் புறப்பட்டு அகதியாக வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இரவில் ஆழம் குறைந்த தண்ணீரின் நடுவே படகோட்டிகள் இறக்கிவிட்டு, மீண்டும் இலங்கை கடல் பகுதியை நோக்கி சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இரவில் எந்த வழியாக செல்ல வேண்டும் என்று எங்களுக்கு தெரியவில்லை. மிகவும் கஷ்டப்பட்டு நடந்து, தீவு போன்ற ஒரு மணல் பரப்பில் இருந்தோம் இரவு முழுவதும் அதிக குளிரில் படுத்து இருந்தோம். குடிக்க தண்ணீர், உணவு இல்லை, கடல் நீரை குடித்தோம். நல்ல வேளையாக இப்போது மீட்கப்பட்டுவிட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோரிக்கை

ராமேசுவரத்தில் ரோந்து படகு இல்லாததால் நேற்று அவர்களை மீட்க சற்று தாமதம் ஏற்பட்டது. எனவே அங்கு ரோந்து படகை எப்போதும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அகதி தம்பத்தியை ராமநாதபுரம் கலெக்டர் ஜானி டாம் வர்க்கீஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களை மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.


Next Story