ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரம்:ஊட்டியில் கவர்னர் தங்கியிருந்த ராஜ்பவன் மாளிகையை முற்றுகையிட முயற்சி -17 பேர் கைது
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையை முற்றுகையிட முயன்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்
ஊட்டி
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையை முற்றுகையிட முயன்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த தடை சட்ட மாசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் வழங்காத கவர்னர் சில விளக்கங்கள் கேட்டு நவம்பர் 24-ந் தேதி அரசுக்கு கடிதம் அனுப்பினார்.
இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் 24 மணி நேரத்தில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்பின் சட்ட அமைச்சர் ரகுபதி மற்றும் அதிகாரிகள் கவர்னரை நேரில் சந்தித்து உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தினர்.
மசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னர்
இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக ஆன்லைன் ரம்மி தடை மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்த கவர்னர், இந்த மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பி உள்ளார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் மசோதாவை அரசுக்கு திருப்பி அனுப்பியதை கண்டித்து, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தற்போது தங்கியுள்ள ஊட்டி ராஜ்பவன் மாளிகையை நேற்று காலை 8 மணிக்கு முற்றுகையிட்டு கருப்பு கொடி காட்டி கண்டன போராட்டத்திற்கு இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை அழைப்பு விடுத்து இருந்தது.
17 பேர் கைது
இதனால், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டனர். எனவே போராட்டத்தை தடுக்கும் விதமாக ராஜ்பவன் மற்றும் தாவரவியல் பூங்கா வளாகத்தில் நேற்று காலை முதல் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கிடையே ஆர்ப்பாட்ட அறிவிப்பால் குறிப்பிட்ட நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக கவர்னர் கேரள மாநிலம் வயநாடுக்கு புறப்பட்டு சென்றார்.
இதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், மக்கள் அதிகாரம் அமைப்பினர் கவர்னரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு தாவரவியல் பூங்கா வாயிலுக்கு பல திசைகளில் இருந்து திடீரென்று வந்தனர்.
உடனே போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷம் எழுப்பிய 17 பேரை குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதனால் பூங்கா பகுதியில் காலை நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் பிரத்தியேக பாஸ் வழங்கப்பட்டு தினமும் பலர் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். இந்தநிலையில் ராஜ்பவனில் கவர்னர் தங்கியுள்ளதால், 12-ந் தேதி வரை பூங்காவில் நடைப்பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.