திருமங்கலத்தில் சாமி கும்பிடுவதில் பிரச்சினை: கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


திருமங்கலத்தில் சாமி கும்பிடுவதில் பிரச்சினை:  கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x

திருமங்கலம் அருகே உள்ள கிராமத்தில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே உள்ள கிராமத்தில் சாமி கும்பிடுவதில் இரு தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சாமி கும்பிடுவதில் பிரச்சினை

திருமங்கலம் அருகே பெரிய மறவன்குளம் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு நாளை(24-ந் தேதி) காப்பு கட்டுதலுடன் தொடங்கி 31-ந்தேதி வரை பங்குனி திருவிழா நடைபெறுவது என கோவில் நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில் மறவன்குளம் தி.மு.க. கிளைச்செயலாளர் காத்தவராயன் தலைமையில் ஒரு தரப்பினர் இடையூறு செய்து தாங்கள்தான் திருவிழாவை நடத்துவோம் எனவும், மற்றொரு தரப்பில் கிராம மக்கள் பொது கோவில் என்பதால் அனைவரும் சாமி கும்பிடுவோம் என தெரிவித்தனர். இதனால் இருதரப்பினர் இடையே பிரச்சினை உருவாகும் சூழல் ஏற்பட்டது.

அமைதி கூட்டம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் தாசில்தார் சிவராமன் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடைபெற்றது. இதில் சமரச பேச்சுவார்த்தை உடன்படவில்ைல.

இதனால் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மறவன்குளம் கிராமத்தினை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு கொட்டும் மழையில் மறவன்குளம் பஸ் நிறுத்தத்தில் திருமங்கலம் - மதுரை ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர். அரைமணிநேரத்திற்கு மேலாக நீடித்த மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த நிலையில் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது டவுன் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் 30 ஆண்கள் மற்றும் 30 பெண்கள் உள்பட 60 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முற்றுகை

இந்த நிலையில் நேற்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோவிலில் சாமி கும்பிடுவது தொடர்பாக சமாதான கூட்டம் நடைபெற இருந்தது. இதை அறிந்த கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கிராம மக்களிடம் வருவாய் கோட்டாட்சியர் கோட்டகுமார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மணி நேரம் பேச்சு வார்த்தைக்கு பின்பு இருதரப்பினரும் சேர்ந்து சாமி கும்பிட கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story