கூடலழகர் பெருமாள் கோவிலில் இன்று பாலாலயம்-ஆவணி மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு


கூடலழகர் பெருமாள் கோவிலில் இன்று பாலாலயம்-ஆவணி மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு
x

கூடலழகர் பெருமாள் கோவிலில் இன்று பாலாலய பூஜை நடக்கிறது. ஆவணி மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மதுரை


கூடலழகர் பெருமாள் கோவிலில் இன்று பாலாலய பூஜை நடக்கிறது. ஆவணி மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கூடலழகர் பெருமாள் கோவில்

மதுரை நகரில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்தப்படியாக மிகவும் பழமை வாய்ந்தது கூடலழகர் பெருமாள் கோவில். முன்னொரு காலத்தில் மதுரையில் ஒருமுறை தொடர்ந்து மழை பெய்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழையில் இருந்து தங்களை காக்கும் படி பெருமாளை வேண்டினர். பக்தர்களின் வேண்டுதலை ஏற்ற பெருமாள் நான்கு மேகங்களை ஏவினார். அவை மதுரையைச் சுற்றி 4 மாடங்களாக ஒன்று கூடி மழையில் இருந்து மக்களை காத்தது. இவ்வாறு 4 மேகங்கள் ஒன்று கூடியதால் இந்த கோவில் நான்மாடக்கூடல் என்றும் கூடல் மாநகர் என்றும் அழைக்கப்படுகிறது. ஆதலால் சுவாமியும் கூடல் அழகர் என்று அழைக்கப்படுகிறார்.

திவ்ய தேசங்கள்

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 47-வது கோவிலாக இது விளங்குகிறது. மேலும் தமிழகத்தில் மதுரை கூடலழகர் கோவிலிலும், சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில் மட்டுமே அஷ்டாங்க விமானத்தில் சுவாமி காட்சி தருகிறார். 8 பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் 'ஓம் நமோ நாராயணா' என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும்.

மேலும் இந்த விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்த கோலத்திலும், 2-வது நிலையில் சூரிய நாராயணர் தேவியருடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். 3-வது நிலையில் பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி அளிக்கிறார். கூடலழகர் பெருமாள் இந்த தலத்தில் நின்ற, அமர்ந்த, சயன என 3 கோலங்களிலும் காட்சி தருவது மிகவும் சிறப்பாகும். 125 அடி உயரம் கொண்ட இந்த விமானத்தில் 10 அடியில் கலசம் உள்ளது. மேலும் இந்த விமானத்தின் நிழல் தரையில் விழாது என்பது சிறப்பம்சமாகும்.

பல்லாண்டு பாடிய திருத்தலம்

பெரியாழ்வார் பல்லாண்டு, பல்லாண்டு என்று பாடல் பாடிய திருத்தலம் ஆகும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 2006-ம் ஆண்டு நடந்தது. கும்பாபிஷேகம் முடிந்து 12 ஆண்டுகளுக்கு மேல் ஆனது குறித்து அரசுக்கு கோவில் நிர்வாகம் தெரிவித்தது. அதை தொடர்ந்து தற்போது பதவி ஏற்றுள்ள தி.மு.க. அரசு மதுரையில் முதன் முதலாக கூடலழகர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடத்த உத்தரவு வெளியிட்டது. அதன்படி சுமார் ரூ.1 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் அனைத்தும் டி.வி.எஸ்.நிறுவனம் ஏற்று கொண்டதாக கூறப்படுகிறது.

உபசன்னதிகளுக்கு பாலாலய பூஜை

கும்பாபிஷேகத்தையொட்டி முதலில் கோவிலில் உள்ள கோபுரங்களுக்கு பாலாலய பூஜை கடந்த ஆண்டு நடந்தது. அதில் ராஜகோபுர பணிகளை மட்டும் மீனாட்சி அம்மன் கோவில் முன்னாள் தக்கார் கருமுத்து கண்ணன் செய்து தருவதாக தெரிவித்து இருந்தார். அதை தொடர்ந்து ராஜகோபுரம், விமானம், மேல் தளம் உள்ளிட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது. அந்த பணிகள் தற்போது முடிந்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக கோவிலில் உள்ள சுமார் 19 உபசன்னதிகளில் உள்ள 40 சுவாமிகளுக்கு பாலாலயம் நடத்த முடிவு செய்தது.

அதற்காக கோவிலின் தெற்கு பிரகாரத்தில் 14 நவ குண்டம் அமைக்கப்பட்டு யாக சாலை பூஜைகள் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. 4 கால பூஜைகள் இன்று (வியாழக்கிழமை) முடிந்த உடன் காலை 7.45 மணி முதல் 8.45 மணிக்குள் பாலாலயம் நடைபெறும். 19 சன்னதிகளில் வேலைகளை செய்வதற்காக அதில் உள்ள சுவாமியின் சக்தியை யாகசாலையில் பூஜையில் வைக்கப்பட்டுள்ள மரப்பலகையில் உள்ள சுவாமியின் மீது அந்த சக்தி இறக்கப்படும். அதன்பின்னர் அந்த பகுதியில் திருப்பணி வேலைகள் தொடங்கும்.

ஆவணி மாதம் கும்பாபிஷேகம்

எனவே கோவிலில் மூலவரை தவிர மற்ற சன்னதிகள் அனைத்தும் சாத்தப்பட்டு இருக்கும். இந்த பணிகள் விரைவில் முடிவடையும் பட்சத்தில் வருகிற ஆவணி மாதம் கோவிலில் கும்பாபிஷேகத்தை நடத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்காக கோவிலில் அனைத்து பகுதிகளிலும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

1 More update

Related Tags :
Next Story