சென்னை விமான நிலையத்தில் பழுது பார்க்கும் மையம் தொடங்க முடிவு


சென்னை விமான நிலையத்தில் பழுது பார்க்கும் மையம் தொடங்க முடிவு
x

நாடு முழுவதும் விமான சேவைகளை விரிவுபடுத்தி மேம்படுத்துவதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சென்னை

மீனம்பாக்கம்,

நாடு முழுவதும் சென்னை உள்பட 8 பன்னாட்டு விமான நிலையங்களில் விமானம் பழுது நீக்கும் மற்றும் பராமரிப்பு மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் புதிதாக விமான சேவை தொடங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் விமான சேவைகளை விரிவுபடுத்தி மேம்படுத்துவதற்கு இந்திய விமான நிலைய ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் விமான சேவைகள் அதிக அளவில் இருந்தாலும், விமானங்களில் ஏற்படும் பழுதுகளை சீர் செய்வது, விமானங்களை பழுது பார்ப்பது போன்ற மையங்கள் மிகவும் குறைவாகவே உள்ளன. இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட 8 பன்னாடு விமான நிலையங்களை தேர்வு செய்து, அங்கு விமானங்களை பழுது பார்த்தல், பராமரித்தல், விமானத்தில் பழுதடைந்த உபகரணங்கள் நீக்கிவிட்டு புதிய உபகரணங்கள் பொருத்துதல், விமானங்களுக்கு வர்ணம் பூசி புதுப்பித்தல் போன்ற பணிகளுக்காக பழுது பார்க்கும் மையங்கள் அமைக்கப்படுகின்றன.

சென்னை விமான நிலையத்தில் வளாகத்துக்குள் விமானங்கள் பழுது பார்க்கும் மையத்தை அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. ஆனால் அதற்கான இட வசதி இல்லை. இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் சென்னை விமான நிலைய ஆணையம் தமிழ்நாடு அரசிடம் அதற்கான இடத்தை ஒதுக்கீடு செய்து தரும்படி கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு விமான நிலைய ஓடுபாதை பகுதிக்கு கிழக்குப் பகுதியில், கவுல் பஜார் பகுதியை ஒட்டிய இடத்தில் 32 ஆயிரத்து 300 சதுரஅடி நிலத்தை செங்கல்பட்டு மாவட்ட வருவாய்த்துறை மூலம் சென்னை விமான நிலைய அபிவிருத்தி பணிக்காக இந்திய விமானநிலைய ஆணையத்திடம் ஒப்படைத்தது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்கிய நிலத்தில் விமானங்கள் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புக்கான மையத்தை அமைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்திய விமான நிலைய ஆணையம் தனியார் நிறுவனத்தின் கூட்டுடன் சென்னை விமான நிலையத்தில் பழுது பார்க்கும் மையத்தை விரைவில் அமைக்க இருக்கின்றனர்.

இதனால், சென்னை விமான நிலையத்தில் இனி பழுதடைந்த விமானங்கள் உடனடியாக சீர் செய்யப்படும். இப்போது வெளிநாட்டு விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் பழுதடைந்தால் அந்த விமானங்கள் ஓடுபாதையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு அந்த விமான நிறுவனத்திற்கு சொந்தமான நாடுகளில் இருந்து உதிரி பாகங்கள் கொண்டு வரப்பட்டு பழுது நீக்கப்பட்டு விமானம் மீண்டும் புறப்பட்டு செல்கிறது.

ஆனால் சென்னை விமான நிலையத்தில் பழுது பார்க்கும் மையம் செயல்பட தொடங்கிய பின்னர், சில மணி நேரங்களில் விமானங்களில் ஏற்பட்ட எந்திரக் கோளாறை சீர் செய்து விமானத்தை அனுப்பி விடுவார்கள். இதனால் பல்வேறு வெளிநாட்டு விமான நிறுவனங்கள் சென்னைக்கு புதிதாக விமான சேவைகளை தொடங்க வாய்ப்புகள் உள்ளன.

அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய விமான நிலைய ஆணையம், சென்னை விமான நிலையம் ஆகியவை இணைந்து டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்துடன் போடப்பட்டுள்ளது. இந்த பழுது பார்க்கும் மையம் செயல்படும் போது சென்னை விமான நிலையத்தில் மேலும் பலருக்கு புதிதாக வேலை வாய்ப்புகள் ஏற்படும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story