நாடே திரும்பிப்பார்க்கும் வகையில் நடந்துள்ளதுமதுரை மாநாடு வரலாற்று சாதனை- அ.திமு.க. பொதுச்செயலாளர்எடப்பாடி பழனிசாமி பேச்சு


நாடே திரும்பிப்பார்க்கும் வகையில் நடந்துள்ளதுமதுரை மாநாடு வரலாற்று சாதனை- அ.திமு.க. பொதுச்செயலாளர்எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 21 Aug 2023 12:15 AM IST (Updated: 21 Aug 2023 12:26 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. பொன் விழா எழுச்சி மாநாடு, மதுரை வலையங்குளம் ரிங்ரோட்டில் நேற்று நடந்தது.

மதுரை

மதுரை

அ.தி.மு.க. பொன் விழா எழுச்சி மாநாடு, மதுரை வலையங்குளம் ரிங்ரோட்டில் நேற்று நடந்தது.

32 தீர்மானங்கள்

மாநாட்டினை, எடப்பாடி பழனிசாமி நேற்று காலையில் கட்சிக் கொடியேற்றி தொடங்கி வைத்தார். வெள்ளை புறாைவ பறக்கவிட்டார்.

கிருஷ்ணகிரி, கோவை, சென்னை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து கட்சி தொண்டர்கள் கொண்டு வந்த தொடர் ஓட்டஜோதியை எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி, ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு நினைவு பரிசு வழங்கினர்.

மாலையில் தொடங்கிய மாநாட்டு உரை நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வரவேற்று பேசினார். மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த தீர்மானங்களை வைகை செல்வன், டாக்டர் விஜயபாஸ்கர், செம்மலை ஆகியோர் வாசித்தனர். முன்னாள் அமைச்சர்கள் ராஜலட்சுமி, செல்லூர் ராஜூ, தனபால், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்மகன் உசேன், கே.பி.முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

புரட்சி தமிழர் பட்டம்

அதைத்தொடர்ந்து மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் என்று பட்டம் அளிக்கப்பட்டது. அதனை தொண்டர்கள் வழிமொழிந்து புரட்சி தமிழர் என்று கோஷம் எழுப்பினர்.

எம்.ஜி.ஆரை புரட்சி தலைவர் என்றும், ஜெயலலிதாவை புரட்சி தலைவி என்றும் தொண்டர்கள் அழைக்கிறார்கள். அந்த வரிசையில் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் பட்டம் வழங்கி இருப்பதாக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மீனாட்சி அம்மன் உருவம் கொண்ட செங்கோல், எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது.

அதை பெற்றுக்கொண்டு, மாநாட்டின் தலைமை உரை ஆற்றினார். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

எந்த கொம்பனாலும் முடியாது

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை வணங்கி இந்த மாநாட்டில் எனது உரையை தொடங்குகிறேன். எனக்கு புரட்சி தமிழர் பட்டத்தை வழங்கியதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அ.தி.மு.க. ஒரு மாபெரும் இயக்கம். தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி. எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி அ.தி.மு.க.வை தோற்றுவித்தார். அ.தி.மு.க.வுக்கு பொன் விழா கொண்டாடி 51-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளோம்.. இந்த 51 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் தமிழ் மண்ணில் அ.தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. இந்த 31 ஆண்டுகள் கால அ.தி.மு.க. ஆட்சியில்தான் தமிழகம் ஏற்றம் பெற்றிருக்கிறது. கடை கோடியில் இருக்கின்ற சாமானியனுக்கு கூட நன்மை கிடைத்து இருக்கிறது. அனைத்து துறைகளையும் முதன்மையாக உருவாக்கியது.

அ.தி.மு.க.வை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது. எந்த கட்சியாலும் முடியாது. அ.தி.மு.க. தொண்டன், உழைப்பால் உயர்ந்தவன். எந்த பிரதிபலனும் பார்க்காமல் தலைமை அறிவித்த உடன் சொந்த வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு கட்சி தான் பெரியது என்று வேலை செய்வான். அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் ஏற்றுவோம் என சபதம் ஏற்று வந்துள்ளீர்கள். இதுதான்அ.தி.மு.க.

அ.தி.மு.க.வின் தொண்டன் என கூறினாலே பெருமைதான். திண்டுக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் இருந்தது. எம்.ஜி.ஆர். கட்சியை தோற்றுவித்து, முதன் முதலாக திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலை சந்தித்தார். அப்போது எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய வேட்பாளர் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்தார். ஒரு கட்சி தொடங்கி 6 மாதத்திலேயே மாபெரும் வெற்றி பெற்றது, என சொன்னால் அது அ.தி.மு.க.தான். எம்.ஜி.ஆர். முகத்தை பார்த்தால் போதும், தானாக வாக்குகள் கிடைக்கும். நமக்கு வெற்றி கிடைத்துவிடும்.

ஏளனம் செய்தார்

தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய முதலில் நிற்கும் கட்சி அ.தி.மு.க.தான். எம்.ஜி.ஆர். மறைந்த உடன், அ.தி.மு.க. அழிந்துவிடும் என கருணாநிதி கனவு கண்டார். ஆனால் அது நடக்கவில்லை.

"நான் இருக்கின்றேன்" என்று தமிழக மக்களுக்கு அன்றைய தினம் ஜெயலலிதா அடையாளம் காட்டப்பட்டார். எம்.ஜி.ஆர். ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் ஏற்படுத்தினார்.

1989-ம் ஆண்டு முதன்முதலாக கட்சி இரண்டாக பிரிந்து தேர்தலில் போட்டியிட்டது.. நான் அப்போது ஜெயலலிதா அணியில் இருந்தேன். எனக்கு சேவல் சின்னம் அளிக்கப்பட்டது. முதன் முதலில் வெற்றி பெற்றேன். அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றேன். மீண்டும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சர் ஆனேன். உங்களுடைய ஆதரவினால் முதல்-அமைச்சரும் ஆனேன்.

இன்றைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். இந்த ஆட்சி 10 நாட்கள் அல்லது 3 மாதம் கூட தாக்குப்பிடிக்காது என்று ஏளனம் செய்தார். உங்களுடைய ஆதரவினால் 4 ஆண்டு 2 மாதம் சிறப்பான ஆட்சியை கொடுத்தேன்.

கஜா புயல்

நான் பொறுப்பு ஏற்றபோது கடும் வறட்சி. பல இடங்களில் குடிப்பதற்குகூட தண்ணீர் கிடைக்கவில்லை. ெசன்னைக்கு ரெயில் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தாகத்தை தீர்த்தோம். தமிழகம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சினையை சரி செய்ேதாம். இது பெரிய சாதனை.

அதன்பிறகு கஜா புயலால் ெடல்டா மாவட்டங்களில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. அப்போது உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கலெக்டர்களுடன் சேர்ந்து பேசி, புயல் எந்த அளவிற்கு வீசியதோ அதே அளவிற்கு வேகமாக செயல்பட்டு, புயலின் அடிச்சுவடு இல்லாமல் மாற்றி சாதனை படைத்தோம். புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.2047 கோடியை நிவாரணமாக கொடுத்தோம். பயிர் காப்பீடு மூலம் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் இருந்து நிதியை பெற்று தந்தோம்.

கொரோனா காலம்

அதன்பிறகு கொரோனா பரவ தொடஙகியது. சாதாரண கொரோனா அல்ல, உங்கள் முகத்தை மறைத்துதான் பார்க்கவேண்டிய சூழ்நிலை இருந்தது. அதையும் அ.தி.மு.க. அரசு மிகவும் சிறப்பாக கையாண்டது. அப்போது அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொேரானாவில் இருந்து மக்களை காப்பாற்றினார். அனைவரின் ஒத்துழைப்பால் விலை மதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றியது அ.தி.மு.க. அரசுதான்.

கொரோனா காலத்தில் மக்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. எனவே ரேஷன் கடையில் 11 மாதம் விலையில்லா அரிசி, விலையில்லா சர்க்கரை, மண் எண்ணெய் கொடுத்தோம். அத்துடன் குடும்ப அட்டைக்கு ரூ.1,000 கொடுத்தோம்.

இந்த மதுரை மாநகரத்தில் கொேரானா தொற்று அதிகமாக இருந்ததால் மீண்டும் ஒரு முறை குடும்ப அட்டைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தோம்.

நாள்தோறும் 7 லட்சம் பேருக்கு அம்மா உணவகம் மற்றும் சமூக கூடங்களில் உணவு தயாரித்து வழங்கினோம். கர்ப்பிணிகளுக்கு, முதியவர்களுக்கு, மாற்றுத்திறானாளிகளின் வீட்டிற்கு சென்று உணவு வழங்கினோம்.

மதுரை மண் ராசியான மண். இந்த மண்ணில் எதை தொடங்கினாலும் தொட்டது துலங்கும். அப்படிப்பட்ட ராசியான மாவட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு எழுச்சியான மாநாட்டை நடத்தி உள்ளோம். எம்.ஜி.ஆருக்கு பெருமை சேர்க்கும் வகையில் 30.6.2017-ல் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆரம்பிக்கப்பட்டதும், மதுைரயில் தான்.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை அனைவரின் துணையோடு சிறப்பாக நடத்தி காட்டினோம். அதில் 562 அறிவிப்புகள் வெளியிட்டோம். 3215 திட்டங்கள் எடுத்து கொள்ளப்பட்டு அதற்காக ரூ.5,780 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதனை படைத்தோம்.

எம்.ஜி.ஆருக்கு புகழ் சேர்க்கும் விதமாக மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் பிரமாண்டமான எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை குறிக்கும் வகையில் வளைவு உருவாக்கினோம். சென்னை சென்டிரல் ரெயில்வே நிலையத்திற்கு, மத்திய அரசிடம்் பரிந்துரை செய்து எம்.ஜி.ஆர். பெயரை சூட்டியதும் அ.தி.மு.க. அரசுதான். ஜெயலிலதா இந்த இயக்கத்தை காத்து சாதாரண தொண்டன் கூட உச்சநிலையை தொட அடித்தளம் இட்டார். அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பிரமாண்டமான பீனிக்ஸ் பறவை மாடலில் நினைவு மண்டபம் கட்டப்பட்டது. எம்.ஜி.ஆர். நினைவிடம் புதுப்பிக்கப்பட்டது.

ஜெயலலிதாவிற்கு முழு உருவ ெவண்கல சிலை மெரினா கடற்கரை காமராஜர் சிலை அருகில் வைக்கப்பட்டது. ஜெயலலிதாவிற்கு அரசு சார்பாக பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதுபோல் தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே இயக்கமும் அ.தி.மு.க.தான்.

பின்னோக்கி சென்றுள்ளது

அ.தி.மு.க.வின் 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தை 50 ஆண்டு காலம் முன்னோக்கி கொண்டு வந்தோம். ஆனால் இப்போது 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தமிழகம் 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளதை பார்க்கிறோம்.

தமிழகத்தின் 50 ஆண்டு கால பிரச்சினையான காவிரி நீர் பிரச்சினையில் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றோம். மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த மீத்தேன் திட்டத்தை, ரத்து செய்து டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கினோம்.. தமிழகத்தில் பல ஆண்டுகளாக தூர்வாரமால் இருந்த ஏரிகள், குளங்களை எல்லாம் தூர்வாரினோம். நாம் அண்டை மாநிலங்களை நம்பித்தான் வேளாண்மை செய்ய வேண்டிய நிலை இருந்தது. அதனை மாற்ற நடவடிக்கை எடுத்தோம்.

தமிழகத்தில் பெய்யும் மழை நீரை வீணாக்கக்கூடாது என்பதற்காக குடிமராமத்து திட்டத்தை கொண்டு செயல்படுத்தினோம். காவிரி பிரச்சினை தீர்த்தது போல முல்லை பெரியாறு அணை உரிமையை சட்ட போராட்டம் நடத்தி மீட்டோம். அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்தோம். ஆனால் இப்போது இந்த திட்டத்தை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு விட்டது. விவசாயிகளின் நலனை பாதுகாப்பற்காக 2 முறை தொடக்க வேளாண்மை சங்கத்தில் பயிர்க்கடனை ரத்து செய்தோம். தொழில் துறையில் சாதனை படைத்தோம்.

ஜெயலலிதா நடத்திய தொழில் மாநாடு மூலம் ரூ.2.16 லட்சம் கோடி நிதியை ஈர்த்தோம். பல லட்சம் பேருக்கு வேலை கிடைத்தது. 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கினோம். ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்து சாதனை படைத்தோம். ஆனால். தி.மு.க.விற்கு பொய்தான் மூலதனம். நான் பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவபவன் அல்ல. சாதித்து காட்டுபவன்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 7 சட்டக்கல்லூரிகள், 21 தொழில்நுட்ப கல்லூரிகள், 4 பொறியியல் கல்லூரிகள், 40 கலை அறிவியல் கல்லூரிகளை தொடங்கினோம். இந்தியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்காவை சேலத்தில் கொண்டு வந்தோம். தடையில்லா மின்சாரம் வழங்கினோம். 14 ஆயிரம் புதிய பஸ்களை கொண்டு வந்தோம். இந்தியாவிலேயே உயர்கல்வியில் அதிகம் படிப்பவர்கள் தமிழர்கள் என்ற நிலையை எட்டி பிடித்தோம். அ.தி.மு.க. அரசின் சிறப்பான செயல்பாடுகளால் உள்ளாட்சி, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், கூட்டுறவு உள்பட பல துறைகளில் விருதுகளை பெற்றோம். உள்ளாட்சி துறையில் மட்டும் 121 விருதுகள்.

அதே போல் பெரிய மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தார்கள். அதன்படி 6 புதிய மாவட்டங்கள், 7 கோட்டங்கள், 27 தாலுகாக்களை கொண்டு வந்தோம்.

நீட் விவகாரம்

உதயநிதி ஸ்டாலின் இன்றைய தினம் நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் இருப்பதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்.

2010-ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா ஒரு அறிவிப்பை வெளியிட்டது. 2010-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் சுகாதார துறையில் மந்திரியாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குலாம் நபி ஆசாத்.

அப்போது தி.மு.க.வை சேர்்ந்த எம்.பி. காந்தி செல்வன், மத்திய சுகாதார இணை மந்திரியாக இருந்தார். அந்த கால கட்டத்தில்தான் நீட் தேர்வு வந்தது. இதனை யாராலும் மறைக்க முடியாது. இதனை மறைத்து இன்று உண்ணாவிரதம் இருக்கிறார். இது மிகப்பெரிய ஏமாற்றுவேலை. நீட் தேர்வை ெகாண்டு வந்தது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும், அதில் அங்கம் வகித்த தி.மு.க.வும்தான்.

2021-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உதயநிதி கூறினார். ஆட்சி வந்து 2 ஆண்டுகள் நிறைவு பெற்று 3-வது ஆண்டில் அடி வைத்துள்ளீர்கள். இதுவரை நீட் தேர்வை ரத்து செய்ய என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? மானம், வெட்கம், சூடு, சொர்ணை இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள். மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மாணவர்களை ஏமாற்றுகின்றனர். நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க. அதனை தடுத்து நிறுத்த போராடியது அ.தி.மு.க.. இதை மறைத்ததால் தி.மு.க. அரசு மீது மக்களுக்கு மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வை இவர்களே கொண்டு வந்துவிட்டு, ரத்து செய்ய வேண்டும் என இவர்களே நாடகமாடி வருகிறார்கள்.

வரலாற்று சாதனை

இந்த மதுரை மாநாடு, நாடே திரும்பி பார்க்கும் வகையில் சிறப்பாக நடந்து முடிந்து இருக்கிறது. இது ஒரு வரலாற்று சாதனை மாநாடு. இந்த மாநாட்டிற்காக பாடுப்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இ்வ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.


Related Tags :
Next Story