வரி செலுத்துவோருக்கு வலி தருகிறது என்கிறார், பிரதமர் இலவசங்கள் அவசியமா? பொதுமக்கள் கருத்து


வரி செலுத்துவோருக்கு வலி தருகிறது என்கிறார், பிரதமர்  இலவசங்கள் அவசியமா?  பொதுமக்கள் கருத்து
x
தினத்தந்தி 30 Oct 2022 12:15 AM IST (Updated: 30 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

இலவசங்கள் அவசியமா? என பொதுமக்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

கடலூர்

தமிழ்நாட்டில் இலவசங்களுக்கு பஞ்சம் இல்லை. அதனால்தான் நாட்டில் பஞ்சமும் இல்லை என்கிறார்கள் சிலர்.

இன்னும் சிலரோ இல்லாதவர்களுக்குத்தான் இலவசம். எல்லோருக்கும் இலவசம் என்பதை ஏற்க முடியாது. அது அரசுக்கு இழப்பை ஏற்படுத்துவதுடன், நம்மவர்களை சோம்பேறி ஆக்குகிறது என்கிறார்கள்.

உயிர் ஆதாரம்

இருந்தாலும் கொரோனா காலங்களில் வாழ்வு ஆதாரங்களை இழந்து தவித்த அப்பாவி மக்களுக்கு உயிர் ஆதாரங்களாய் இருந்தது இலவசங்கள் என்பதை கண்கூட காண முடிந்தது.

பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளுக்கு இலவச உணவு, இலவச சீருடை, இலவச புத்தகங்கள், இலவச சைக்கிள்கள், இலவச மடிக்கணினிகள், ஏழை பிள்ளைகளின் படிப்புக்கு உதவித்தொகை, அரசு ஆஸ்பத்திரிக்கு இலவச சிகிச்சை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச வீடு, இலவச அரிசி, இலவசமாக சமையல் கியாஸ் இணைப்பு, கோவில்களில் அன்னதானம் என்றெல்லாம் வழங்கப்பட்டு வருவதை வெறுமனே இலவசங்கள் என்று எளிதாக சொல்லிவிடவோ, புறம் தள்ளிவிடவோ முடியாது.

இருந்தாலும் மீனை கொடுப்பதைவிட, தூண்டிலை கொடுத்து மீன்பிடிக்க கற்றுக்கொடுப்பதே சிறந்தது என்று கூறுவது உண்டு.

பிரதமர் நரேந்திரமோடி எதிர்ப்பு

இந்த இலவசங்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்ல. ஏதோ ஒரு வடிவில் எல்லா மாநிலங்களிலும் சில இருக்கத்தான் செய்கின்றன.

இந்த நிலையில் மாநில அரசுகளின் இலவச திட்டங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திரமோடி, தனது கருத்தை வலுவாக பதிவு செய்து இருக்கிறார். இலவச திட்டங்கள் வரி செலுத்துகிறவர்களுக்கு வலியை தருகின்றன என்று வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தேர்தலின்போது வாக்காளர்களை கவர்வதற்காக இலவச திட்டங்களை அறிவிக்கும் கலாசாரம் வளர்ந்து வருகிறது. இலவச திட்டங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஆபத்து. இந்த மோசமான கலாசாரத்தை மக்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும். இந்திய அரசியலில் இருந்து இலவச திட்ட கலாசாரம் வேரறுக்கப்பட வேண்டும் என்றும் அவர் உறுதிபட கூறி இருக்கிறார்.

இலவச திட்டங்கள் வேண்டுமா?, வேண்டாமா? என்பது குறித்து கடலூர் மாவட்ட மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

உழைப்பாளிகளை சோம்பேறியாக்கும் திட்டம்

விருத்தாசலம் வக்கீல் மோகன்:- வேலை பார்க்கும் கடும் உழைப்பாளிகளை கூட அரசின் இலவச திட்டங்கள் வீட்டுக்குள்ளே முடக்கி போட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவிக்கின்றனர். இதனால் மக்களின் மனநிலையும் தற்போது இலவசங்களை எதிர்நோக்கி உள்ளது. உழைப்பாளிகளே சோம்பேறியாக்கியது தான் இந்த இலவச திட்டம். அதனால் இலவசங்களை நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கலாம்.

ஏழை மக்களுக்கு பயன்

சிதம்பரம் மதிவதனி:- கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பல கிராமங்களில் தொலைக்காட்சி பெட்டி என்பதே கிடையாது. அதனை பார்த்த மக்களும் அரிது தான். ஆனால் 2006 சட்டமன்ற தேர்தலில், இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி, ரேஷன் கடைகளில் 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி உள்ளிட்ட வாக்குறுதி அளிக்கப்பட்டதன் அடிப்படையில் தற்போது வீட்டுக்கு வீடு வண்ண தொலைக்காட்சி பெட்டி உள்ளது. அதாவது தொலைக்காட்சி பெட்டியை பார்க்காத பாமர மக்களின் வீடுகளிலும் அரசின் இலவச திட்டங்களால் வண்ண தொலைக்காட்சி பெட்டி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் அலங்கரிக்கின்றன. இதனால் அரசின் இலவச திட்டங்கள் தொடர்ந்தால், ஏழை- எளிய மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்.

எட்டாக்கனியான மடிக்கணினி

தொழுதூரை சேர்ந்த இல்லத்தரசி அம்பிகா உதயகுமார்: ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு கணினி எல்லாம் எட்டாக்கனியாகி விடும் என்று தான் நினைத்திருந்தோம். ஆனால் அரசின் இலவச திட்டங்களால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வித்தரமும் உயர்ந்துள்ளது. மேலும் தாலிக்கு தங்கம் திட்டத்தால் பல பெண்களுக்கு திருமணமாகி நல்ல நிலையில் உள்ளனர். அதனால் இலவசங்களை பயனுள்ள வகையில் தொடர்ந்து அரசு வழங்க வேண்டும்.

மாநிலம் வளர்ச்சி பெறும்

கடலூர் பேபி சரோஜா: அரசின் இலவச திட்டங்கள் உழைக்கும் எண்ணத்தை சிதைத்து விடுகிறது. உழைத்து சம்பாதிக்கும் மக்களுக்கு இலவசங்கள் தேவையில்லை. நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு, முன்னேற்றம் ஆகியவற்றின் நன்மைக்காக அனைத்து விதமான வரி சுமையையும் தாங்கிக் கொள்கிறோம். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் மூலம் செலுத்தும் வரி, நல்ல முறையில் பயன் பெற வேண்டும். அதனால் இலவச திட்டங்களுக்கு அரசு செலவிடும் தொகையை, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தினால் மாநிலம் வளர்ச்சி பெறும்.

சமூக மாற்றத்திற்கு இலவசம் அவசியம்

கடலூர் பெரியார் கலைக்கல்லூரி சமூக பணியியல் துறைத்தலைவர் சேதுராமன்:- மாணவிகள் கல்லூரியில் சேர்ந்து உயர்கல்வி பயில்வதில் குடும்பம் சார்ந்து, சமூகம் சார்ந்து எத்தகைய சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை பல்லாண்டுகளாக அறிந்த அனுபவத்தின் அடிப்படையில் "6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு அவர்கள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்குகின்ற புதுமைப்பெண் திட்டம்" உண்மையிலேயே போற்றுதலுக்குரிய திட்டமாக இருப்பதை உணர முடிகிறது. இது பெண் கல்வியை ஊக்குவிப்பதில் பெரும் திருப்புமுனையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அதேபோல மடிக்கணினி அல்லது கையடக்கக் கணினி மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டால், அவற்றை வாங்குவது குறித்து நினைத்துக் கூடப் பார்க்க இயலாத நிலையில் இருக்கும் குடும்பங்களில் இருந்து உயர்கல்வி பயில வந்துள்ள மாணவர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். பள்ளி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் அவர்கள் விரும்புகின்ற பட்டப்படிப்பு முற்றிலும் இலவசமாக வழங்குவதற்கும், பட்டப்படிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் பட்டமேற்படிப்பு முற்றிலும் இலவசமாக வழங்குவதற்கும் ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தினால் அது மாணவர்களிடையே ஒரு ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தும். ஆகவே, இலவசங்கள் என்பது சமூக மாற்றத்திற்கும் முன்னேற்றத்திற்கும் பயனளிக்கும் நிலையில் அவை தொடர வேண்டியது அவசியமாகும்.


Next Story