வடசென்னை வளர்ச்சி பெறும் வகையில் மாதவரத்தில் பல்வேறு வசதிகளுடன் ஐ.டி. பார்க்
வடசென்னை வளர்ச்சி பெறும் வகையில் மாதவரத்தில் பல்வேறு வசதிகளுடன் கூடிய ஐ.டி. பார்க் அமைக்க இடம் தேர்வு நடக்கிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
சென்னை,
சட்டசபையில் கேள்வி நேரத்தில் தி.மு.க. உறுப்பினர் சுதர்சனம் (மாதவரம்), மாதவரம் பகுதிகளில் அதிகளவு இ-சேவை மையங்கள் அமைக்க வேண்டும் என்றும், மாதவரத்தில் ஐ.டி. பார்க் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில் அளித்து கூறியதாவது:-
ஹைடெக் சிட்டி சென்னை, கோவை, ஓசூர் ஆகிய பகுதிகளில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி குறைந்தபட்சம் 100 ஏக்கர் நிலம் அதற்கு மேலும் இடங்களை கண்டறிந்து அவற்றில் டெக் சிட்டி உருவாக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறோம். அதன் அடிப்படையில் ஓசூரில் சுமார் 500 ஏக்கரும், கோவையில் 250 ஏக்கரும், சென்னையில் பல்வேறு இடங்களும் பார்வையிடப்பட்டு வருகிறது.
அதில் ஒன்று மாதவரம் மெட்ரோ ரெயிலுக்காக ஒதுக்கப்பட்ட சில இடங்கள் காலியாக இருக்கிறது. அதில் ஒரு இடத்தை பரிசீலனைக்காக நாங்கள் பார்த்து இருக்கிறோம். அந்த இடங்கள் கிடைக்கும் பட்சத்தில் நிச்சயமாக டெக் சிட்டி உருவாக்கப்படும்.
மாதவரத்தில்...
டெக் சிட்டி என்றால் என்ன என்ற கேள்வி எல்லோரிடமும் இருக்கிறது. இன்றைக்கு ஐ.டி. துறையை பொறுத்தவரையில், முதலில் எல்லோரும் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றி கொண்டிருந்தார்கள். கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து வேலை பார்த்தார்கள். இப்போது அதுவும் மாறி லீவ் ஓர்க் பிளேஸ் (பணி செய்யும் இடத்தில் வசிப்பது) அங்கே வாழ்ந்து, அங்கே வேலை செய்து, பொழுதுபோக்கு விளையாட்டுகளுடன் ஒரு அமைப்பை ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் பல நாடுகள் ஈடுபடுகிறது. அதுதான் எதிர்காலத்தில் வளர்ந்து வரும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
எனவே டெக் சிட்டி என்று சொல்லும்போது வெறும் வேலை செய்யும் கட்டிடங்கள் மட்டுமல்லாமல், அவர்கள் தங்குவதற்கான இடங்கள், அவர்கள் பொழுதுபோக்குவதற்கான அம்சங்கள், ஆராய்ச்சி செய்வதற்கான இடம் என எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் கட்டமைப்பு தான் இந்த டெக் சிட்டி. எனவே இது மாதவரத்தில் அமைவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இது நம்முடைய முதல்-அமைச்சரின் பார்வையில் இருக்கிறது.
சிரிப்பலை
அப்போது குறுக்கிட்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், 'இது முக்கியமான கேள்வி. அமைச்சர் நல்ல விளக்கம் கொடுத்து இருக்கிறார். மாதவரத்தில் ஐ.டி. பார்க் அமைய வேண்டியது முக்கியமான ஒன்று தான். இடம் அமையவில்லை என்று அமைச்சர் சொல்கிறார். என்கிட்ட உறுப்பினர் சுதர்சனம் சொல்லியிருக்கிறார், அவருக்கு ஒரு மாந்தோப்பு ஆயிரம் ஏக்கரில் இருக்கிறது. அதில் 200 ஏக்கரை அவர் கொடுப்பார், அதையே பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நகைச்சுவையாக சொல்ல, அவையில் சிரிப்பலை எழுந்தது'.
அதனை தொடர்ந்து பேசிய உறுப்பினர் சுதர்சனம், 'மாதவரத்தில் பல்வேறு துறைகளுக்கு சொந்தமான நிலங்கள் இருக்கிறது. வேளாண், கால்நடை, கூட்டுறவுத்துறைக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலம் இருக்கிறது. எனவே மாதவரத்தில் எல்லா வசதிகளும் இருக்கிறது. மாதவரம் வளர்ந்து வரும் பகுதி. நிச்சயமாக அதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்' என்றார்.
இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ், 'உறுப்பினர் சொன்னது உண்மை தான். வடசென்னைக்கு வளர்ச்சி திட்டங்கள் தேவை. ஐ.டி. விரிவுபடுத்த இந்த இடம் தேவை தான். எனவே ஆய்வு செய்யப்படும்' என்றார்.