பெண் தற்கொலை செய்தது உறுதியானது


பெண் தற்கொலை செய்தது உறுதியானது
x
தினத்தந்தி 11 Oct 2023 7:00 PM GMT (Updated: 11 Oct 2023 7:00 PM GMT)

கோவை அருகே உள்ள ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் பெண் உயிரிழந்த சம்பவத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக மாஜிஸ்திரேட்டு 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.

கோயம்புத்தூர்

ஆலாந்துறை

கோவை அருகே உள்ள ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் பெண் உயிரிழந்த சம்பவத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக மாஜிஸ்திரேட்டு 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.

குழந்தை கடத்தல்

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மணவாளபுரத்தை சேர்ந்த முத்துராஜ்-ரதி தம்பதியினர் தனது குழந்தை மற்றும் குடும்பத்துடன் குலசேகரன்பட்டினத்தில் உள்ள கோவிலுக்கு சென்றார். பின்னர் அவர் தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் கடலுக்கு சென்றபோது, சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த திலகவதி (வயது 40) என்பவர் முத்துராஜின் 1½ வயது குழந்தையை கடத்திச்சென்றார்.

இது தொடர்பாக திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் திலகவதி தனது கணவரான பாண்டியனுடன் சேர்ந்து குழந்தையை கடத்திச்சென்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில் திலகவதி-பாண்டியன் கோவை மாவட்டம் பூண்டி அருகே உள்ள முட்டத்துவயல் பகுதியில் இருப்பது தெரியவந்தது.

தம்பதி கைது

இது குறித்து திருச்செந்தூர் கோவில் போலீசார் ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் கடந்த 9-ந் தேதி அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அங்கு பதுங்கி இருந்த திலகவதி-பாண்டியன் தம்பதியை கைது செய்து, ஆலாந்துறை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது திலகவதி, போலீஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுவிட்டு திரும்பினார். சில விநாடிகளில் அவர் மயங்கி கீழே சரிந்தார். அவருடைய வாய் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது.

போலீஸ் நிலையத்தில் உயிரிழப்பு

உடனே அங்கு இருந்த போலீசார் திலகவதியை மீட்டு போளுவாம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். குழந்தை கடத்தல் வழக்கில் கைதான பெண், போலீஸ் நிலையத்தில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அந்த பெண்ணின் உடல் கோவை மாஜிஸ்திரேட்டு சந்தோஷ் முன்னிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அத்துடன் அவருடைய சாவுக்கு என்ன காரணம் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட்டும் ஆலாந்துறை போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

தற்கொலை செய்தது உறுதியானது

இதற்கிடையே திலகவதி, தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் உறுதியாகி உள்ளது. ஆனால் அவர் விஷத்தை குடித்தாரா அல்லது விஷப்பொருளை சாப்பிட்டு தற்கொலை செய்தாரா என்பது உறுதியாக தெரியவில்லை. மேலும் அவர் எப்போது விஷத்தை தின்றார் என்பதும் தெரியவில்லை.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மாஜிஸ்திரேட்டு சந்தோஷ் நேற்று 2-வது நாளாக ஆலாந்துறை போலீஸ் நிலையத்துக்கு சென்றார். பின்னர் அவர் கடந்த 9-ந் தேதி போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போலீசாரிடம் திலகவதி தற்கொலை செய்தது தொடர்பாக விசாரணை நடத்தினார்.

மாஜிஸ்திரேட்டு விசாரணை

அப்போது திலகவதியை கழிவறைக்கு அழைத்துச்சென்ற பெண் போலீசார், அவரை போளுவாம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்ற போலீசார் என்று, தனித்தனியாக அவர்களை அழைத்து விசாரணை நடத்தினார். எத்தனை மணிக்கு அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தீர்கள், அவர் மயங்கி விழுந்தது எப்போது என்பது குறித்து விசாரித்தார்.

பின்னர் மாஜிஸ்திரேட்டு போளுவாம்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கும் சென்று திலகவதியை பரிசோதித்த டாக்டர்களிடம் விசாரணை நடத்தினார். திலகவதியை எப்போது கொண்டு வந்தார்கள்? கொண்டு வரும்போது அவர் உயிருடன் இருந்தாரா என்பது உள்பட பல்வேறு கேள்விகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

மயங்கி சரிந்தார்

குழந்தை கடத்தல் வழக்கில் கைதான திலகவதி-பாண்டியன் தம்பதியை கடந்த 9-ந் தேதி கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து வந்தோம். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மாலை 4 மணியளவில் கழிவறை செல்ல வேண்டும் என்று திலகவதி கூறினார். இதையடுத்து போலீஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு அவரை பெண் போலீசார் அழைத்துச்சென்றனர்.

பின்னர் சில நிமிடங்கள் கழித்து அவர் வெளியே வந்தததும், இருக்கையில் அமர்ந்தார். பின்னர் 10 நிமிடங்களில் மயங்கி கீழே சரிந்தார். அவருடைய வாய், மூக்கு பகுதியில் ரத்தம் வழிந்தது. ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனை அறிக்கை

பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து உள்ளது. ஆனால் அவர், எந்த வகையான விஷத்தை குடித்தார்? எப்போது குடித்தார் என்பது தெரியவில்லை. அது தொடர்பாக துல்லியமாக தெரிந்து கொள்ள, அவரது உடலில் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் அறிக்கை வந்த பின்னர்தான் திலகவதி எந்த வகையான விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவரும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

---------------------------------

(பாக்ஸ்) குழந்்தைகள் நரபலி வீடியோவை பார்த்த திலகவதி

-------------

குழந்தை கடத்தல் வழக்கில் கைதான திலகவதி மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. அதில் திருட்டு வழக்குகள்தான் அதிகமாக இருக்கிறது. அத்துடன் அவர் குழந்தைகளையும் கடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அது தொடர்பான வழக்குகள் எதுவும் இல்லை. குழந்தை கடத்தல் வழக்கு தொடர்பாக போலீசில் கைதானதும் அவர் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

அவர் பயன்படுத்திய செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அவர் யூடியூப்பில் யாருக்கும் தெரியாமல் குழந்தைகளை கடத்துவது எப்படி என்பதை அதிகம் பார்த்து இருக்கிறார். அத்துடன் குழந்தைகளை நரபலி கொடுப்பது எப்படி? என்பது தொடர்பான வீடியோவையும் அவர் பலமுறை பார்த்து இருக்கிறார்.

குழந்தையை நரபலி கொடுக்கும்போது என்ன பூஜை எல்லாம் செய்வார்கள்? அதற்கு தேவையான பொருட்கள் என்ன? இந்த பூஜையை செய்வதில் புகழ்பெற்ற மந்திரவாதி யார்? அவருக்கு கொடுக்க வேண்டியது என்ன? நரபலி கொடுக்கும்போது குழந்தையை எப்படி கொலை செய்வார்கள் என்பது தொடர்பாக பல வீடியோக்களை பார்த்து தெரிந்து கொண்டு உள்ளார்.

அத்துடன் பிறரை வசியம் செய்வது எப்படி? அதற்கு என்ன பொருட்களை எல்லாம் பயன்படுத்துவார்கள்? வசியம் செய்யக்கூடய பொருட்களை பிறருக்கு எப்படி கொடுக்க வேண்டும்? என்பது குறித்த வீடியோக்களையும் அவர் அதிகமாக பார்த்து இருப்பதை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

மேலும் அவருடைய செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது வாட்ஸ்-அப்பில் பல வாலிபர்களுடன் ஆபாசமாக வீடியோ கால் பேசி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் அவர் குழந்தை கடத்தல் தொடர்பாக சிலருக்கு குறுஞ்செய்தியும் அனுப்பி உள்ளார். எனவே அவர் யாருக்கு எல்லாம் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.



Next Story