பெரியாரை அனைவரும் துணை கொள்வது இனி காலத்தின் கட்டாயம் - கி.வீரமணி


பெரியாரை அனைவரும் துணை கொள்வது இனி காலத்தின் கட்டாயம் - கி.வீரமணி
x

வடஇந்தியாவில் இருந்து முக்கிய அரசியல் தலைவர்கள் முதல் இன்றைய இளைய தலைமுறையினர் வரை பெரியாரை வாழ்த்துகின்றனர் என கி.வீரமணி கூறியுள்ளார்.

சென்னை,

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இவ்வாண்டு தந்தை பெரியாரின் 144-வது ஆண்டு பிறந்த நாள் விழா உலகெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக பிரகடனம் செய்து 2-வது ஆண்டாக அனைவரையும் உறுதியேற்கச் செய்யும் பெருமை மூலம், அண்ணாவின் பிரகடனமாம் இந்த ஆட்சி ''தந்தை பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆட்சி'' என்பதை 2 தலைமுறைக்குப் பின்பும் உறுதி செய்து நடைமுறைப்படுத்துகிறார்.

கிழக்கும், மேற்கும் ஏற்கும் உலகத் தலைவராக பெரியார் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆம், மலேசியாவிலும், சிங்கப்பூரிலும், அமெரிக்காவிலும், மத்திய வளைகுடா நாடுகளிலும், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளிலும் அவரது பிறந்த நாள் விழாக்கள் மாட்சியுடன் நடைபெற்று வருகின்றன.

பெரியார் பன்னாட்டு அமைப்பும், உலகப் பகுத்தறிவு, மனிதநேய அமைப்புகளும் இணைந்து வரும் 24, 25-ந் தேதிகளில் ஒரு மாபெரும் பன்னாட்டு மாநாட்டையே கனடா நாட்டின் பெருநகரமான டொரோண்டோவில் நடத்தி மகிழ ஆயத்தமாகிவிட்டன.

அதைவிட ஓர் அதிசயம், வடஇந்தியாவில் இருந்து முக்கிய அரசியல் தலைவர்கள் முதல் இன்றைய இளைய தலைமுறையினர் வரை பெரியாரை வாழ்த்துகின்றனர். அதுதான் பெரியார் என்ற விசித்திரத்தின் விவேகம். எனவே, செயற்கரிய செய்த பெரியாரின் முயற்கரிய முயற்சிகள் வெற்றி பெற அனைவரும் அவரைத் துணை கொள்வது இனிக் காலத்தின் கட்டாயம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story