60 சதவீத பட்டாசுகள்தான் தீபாவளிக்குள் உற்பத்தியாகும் என தகவல்


விருதுநகர் மாவட்டத்தில் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக பட்டாசு தொழில் விளங்குகிறது.

விருதுநகர்

சிவகாசி,

விருதுநகர் மாவட்டத்தில் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக பட்டாசு தொழில் விளங்குகிறது.

அதே நேரத்தில் கெடுபிடிகளால் நாளுக்கு நாள் இத்தொழில் திணறுவதாக பட்டாசு ஆலை உரிமையாளர்களும், தொழிலாளர்களும் கூறுகிறார்கள்.

பசுமை பட்டாசு

சிவகாசி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உரிய அனுமதியுடன் இயங்கி வருகின்றன.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதனால் அரசுக்கும் பல கோடி ரூபாய் வரி வருமானமாக கிடைத்து வருகிறது. இந்தநிலையில் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறி பட்டாசு உற்பத்தி, விற்பனை செய்யவும், வெடிக்கவும் சுப்ரீம் கோட்டில் சில தரப்பினர் தடை கேட்டு வழக்கு தாக்கல் செய்தனர்.

அதனைதொடர்ந்து பட்டாசு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சில மூலப்பொருட்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது. இதனை தொடர்ந்து பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய மத்திய அரசின் நீரி அமைப்பு வழிக்காட்டியது. அதன்படி தற்போது பசுமை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

திடீர் ஆய்வு

தடை செய்யப்பட்ட மூலப்பொருட்களை கொண்டு சில பட்டாசு ஆலைகளில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சில மாதங்களுக்கு முன்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் சிலர் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் திடீர் சோதனைகள் செய்து இங்கு உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசு மாதிரிகளை ஆய்வுக்காக கொண்டு சென்றனர்.

அதனை தொடர்ந்து பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் சோதனை செய்தனர். இதனால் பல ஆலைகளில் விதி மீறல்களை காரணம் காட்டி உற்பத்திக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அந்த ஆலைகளில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறார்கள்.

110 ஆலைகள்

சிவகாசி பகுதியில் மட்டும் 110 ஆலைகள் தற்போது உற்பத்திக்கு இடைக்கால தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த ஆலைகளில் தயாரிக்க வேண்டிய பல கோடி மதிப்புள்ள பட்டாசுகளின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டை போல 100 சதவீத பட்டாசு உற்பத்திக்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. சுமார் 60 சதவீத பட்டாசுகளை மட்டுமே சிவகாசி ஆலைகள் தயாரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்ட நிலையில் பட்டாசு தயாரிக்க கூடுதல் செலவு ஆகிறது. ஆனால் பட்டாசுகளுக்கு விலையை ஏற்றினால் விற்பனையாகாமல் போகும் நிலை உள்ளதாகவும் கூறுகிறார்கள்.

சலுகைகள்

எனவே பல்வேறு பிரச்சினைகளால் நசிந்து வரும் பட்டாசு தொழிலை காக்க மத்திய அரசு சில சலுகைகளை பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிலும் குறிப்பாக வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதில், சரவெடி தயாரிப்பதில், சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல கப்பல் போக்குவரத்து வசதி உள்ளிட்ட வசதிகளை மத்திய அரசு செய்து தந்தால் சிவகாசி பட்டாசு தொழில் காக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பட்டாசு உற்பத்தியிலும், அதனை சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டு வரும் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளி அன்று மக்கள் மகிழ்ச்சியாக இருக்க பயன்படுத்தப்படும் பட்டாசுகளை வெடிக்க எவ்வித தடையும் இருக்க கூடாது என்பது உற்பத்தியாளர்கள் நீண்டநாட்கள் கோரிக்கை ஆகும்.


Next Story