பல்வேறு கடன் உதவிகளை வழங்கி தொழில் முனைவோர்களை உருவாக்கி வருகிறது
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் பல்வேறு கடன் உதவிகளை வழங்கி தொழில் முனைவோர்களை உருவாக்கி வருகிறது என்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் கூறினார்.
கள்ளக்குறிச்சி
கடன் விளக்க கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் மாசற்ற எரிசக்தியும், தொழில் முன்னேற்றம் மற்றும் சிறப்பு கடன் வசதி குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு எரிசக்தி முகமை கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் தலைமை தாங்கினார். கலெக்டர் ஷ்ரவன் குமார் முன்னிலை வைத்தார்.
கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் பேசியதாவது:-
மானிய கடன்
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் பல்வேறு கடனுதவிகளை வழங்கி ஏராளமான தொழில்முனைவோர்களை உருவாக்கி தொழில் வளர்ச்சியை மேம்படுத்தி வருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்கூடம் அமைத்தல், எந்திரங்கள் வாங்கி தொழில் விரிவாக்கம் செய்தல், நவீன மயமாக்கல் ஆகியவற்றுக்காக கடன் வழங்கி வருகிறது.
மேலும் தமிழக அரசின் சிறப்பு திட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு முதல் தலைமுறை தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்கிட 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியையும் வழங்கி வருகிறது.
பயன்படு்த்திக்கொள்ள வேண்டும்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மின்சார வாரியம் ஒப்பந்ததாரர்களுக்கு பிணைய சொத்தில்லா கடனுதவி வழங்கி வருகிறது. மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கிடவும், காற்றாலை மற்றும் சூரிய மின்ஆலை அமைக்கவும், விடுதி மற்றும் உணவகம், திருமண மண்டபம், வணிக வளாகம் கட்டுவதற்கும் கடனுதவி அளித்து வருகிறது.
உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு கிடங்குகள் மற்றும் குளிர்பதன கிடங்குகள் அமைத்தல், சிப்காட், சிட்கோ நிலம் வாங்குவதற்கு கடனுதவியும் வழங்கி வருகிறது. இதுபோன்று தொழில் தொடங்குபவர்களுக்கும், தொழில்களை விரிவுபடுத்துபவர்களுக்கும் பல்வேறு கடன்களை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் வழங்கி வருகிறது. இதை தொழில்முனைவோர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
நினைவு பரிசு
மாசற்ற எரிசக்தி, பசுமை உற்பத்தியை பின்பற்றி தொழில் மேற்கொள்வது குறித்தும், தொழில்சார்ந்த கருத்துகளை கேட்டறிவதற்காகவும், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும் அத்திட்டங்கள் வாயிலாக பயன்பெறுவது குறித்தும் அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் சங்க உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் கடனுதவி பெற்று நீண்ட கால வாடிக்கையாளர்களாக உள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு நினைவு பரிசுகளும், தங்க நகை ஆபரண கைவினை கலைஞர்கள் 20 பேருக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இணைந்து செயல்பட வேண்டும்
எனவே தொழில் முனைவோர்கள் தங்களுடைய தொழில் உற்பத்தி மூலம் வர்த்தகத்தை உலக அளவில் செய்திடவும், முதல்-அமைச்சரின் 2030-ல் 1 டிரில்லியன் டாலர் என்ற இலக்கை அடைய அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்,
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், கோட்டாட்சியர் பவித்ரா, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக விழுப்புரம் கிளை மேலாளர் ரவி மற்றும் அரிசி ஆலை சங்க உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.