ஐ.டி. என்ஜினீயரிடம் ரூ.8½ லட்சம் அபேஸ்


ஐ.டி. என்ஜினீயரிடம் ரூ.8½ லட்சம் அபேஸ்
x
தினத்தந்தி 4 July 2023 1:00 AM IST (Updated: 4 July 2023 10:44 PM IST)
t-max-icont-min-icon

ஐ.டி. என்ஜினீயரிடம் ரூ.8½ லட்சம் அபேஸ்

கோயம்புத்தூர்

கோவை

கோவை விநாயகபுரத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 25). இவர் கோவையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவர் ரூ.8½ லட்சம் தன்னிடம் இருந்து ஆன்லைன் மூலம் அபேஸ் செய்யப்பட்டதாக கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது வாட்ஸ் -அப்புக்கு ஒரு எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதி நேர வேலை வாங்கி தருவதாகவும் டெலிகிராமில் தொடர்பு கொள்ளுமாறும் அந்த நபர் கூறினார். அவரது பெயர் மெலோனி என்றும் கூறினார். முதலில் எனக்கு கணக்கை தொடங்க வேண்டும் என்று கூறினார். அதற்கு நான் ரூ.150 செலுத்தினேன். பின்னர் மறுநாள் ஒரு லிங்கை டெலிகிராமில் அனுப்பினார். டெலிகிராம் குழுவிலும் இணைய சொன்னார். நானும் அந்த புதியவர்களுக்கான குழுவில் இணைந்தேன். பின்னர் தினமும் 24 பணிகளை (டாஸ்க்) கொடுத்தனர்.

முதல் பணிக்கு ரூ.1000 செலுத்தினால் 30 சதவீதம் கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை காட்டினார். நானும் அதனை உண்மை என நம்பி பணம் கட்டினேன். இதற்கு கமிஷன் தொகை கொடுத்தனர். இதனை நம்பி ரூ.2 லட்சத்து 59 ஆயிரத்து 800 பணம் அவரது வங்கி கணக்கில் செலுத்தினேன். மேலும் பணம் செலுத்தினால் தான் கமிஷன் கிடைக்கும் என்றார். பின்னர் 24 பணிகளையும் முடித்து சிறிது சிறிதாக தவணை முறையில் மொத்தம் ரூ.8 லட்சத்து 68 ஆயிரத்து 679 வரை பணத்தை அனுப்பினேன். பின்னர் எனக்கு கமிஷன் வரவே இல்லை. செலுத்திய தொகையும் திரும்பவரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த நான் அவர்களை தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். அந்த நபர் எனக்கு சரிவர பதில் தரவில்லை. இதனால் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்லைன் மூலம் இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வருவதால் யாரும் ஏமாற வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story