சுகாதாரமான முறையில் செயல்படுத்த வேண்டும்


சுகாதாரமான முறையில் செயல்படுத்த  வேண்டும்
x

மாட்டு இறைச்சி கூடங்களை சுகாதாரமான முறையில் செயல்படுத்த வேண்டும் என நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

மாட்டு இறைச்சி கூடங்களை சுகாதாரமான முறையில் செயல்படுத்த வேண்டும் என நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நகர்மன்ற கூட்டம்

அருப்புக்கோட்டை நகர்மன்ற குழுவின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையர் அசோக்குமார், நகர் நல அலுவலர் ராஜநந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறியதாவது:-

பாலசுப்பிரமணி:- ஆக்கிரமிப்புகளால் மலையரசன் கோவில் கண்மாயை காணவில்லை. கண்மாயை கண்டுபிடித்து தர வேண்டும். சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் நகரில் ஒவ்வொரு கடையாக சென்று பிளாஸ்டிக் பயன்படுத்துபவர்கள் மீது அபராதம் விதிப்பதற்கு பதிலாக பிளாஸ்டிக் தயாரிப்பதையே நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இறைச்சி கூடம்

அப்துல் ரகுமான்: நகராட்சி நிகழ்ச்சிகளில் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களையும் சமமாக நடத்த வேண்டும். நகரில் மாட்டு இறைச்சி கடைகள் அதிகரித்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை நாட்களில் 80-க்கும் மேற்பட்ட மாடுகள் அறுக்கப்பட்டு இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. அறுக்கப்படும் மாடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் கால்வாய்களில் தேங்கி நிற்கிறது. இதனை கருத்தில் கொண்டு மாட்டு இறைச்சி கூடங்களை சுகாதார முறையில் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ராம திலகவதி: திருச்சுழி சாலையில் வாருகால் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

முருகானந்தம் : பகுதி சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எந்தப்பணிகளும் செய்து தரவில்லை.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.


Next Story