ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் வேண்டும்
புவனகிரி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் வேண்டும் என கோட்டாட்சியரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
சிதம்பரம்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் துரை தலைமையில் மாவட்ட துணை செயலாளர் வி.எம்.சேகர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் குப்புசாமி, பாஸ்கர், நகர செயலாளர் தமிமுன் அன்சாரி மற்றும் கரைமேடு கிராம பொதுமக்கள் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு சென்றனர். பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் ரவியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
புவனகிரி அருகே கரைமேடு கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளாக வாலாஜா ஏரி கரையோரம் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுத்துள்ளது. இந்நிலையில் நாங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வசித்து வருகிறோம். எனவே அந்த இடத்தை காலி செய்யுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எங்களுக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளனர். எங்களில் பெரும்பாலானவர்களுக்கு சொந்த நிலமோ, வீட்டுமனையோ இல்லை. கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகிறோம்.
நாங்கள் இடத்தை காலி செய்வதற்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக உள்ளோம். ஆனால் தற்போது மழைக்காலம் தொடங்க இருக்கிறது. மேலும் எங்களது குழந்தைகள் கரைமேடு அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நாங்கள் எப்படி வீடுகளை காலி செய்ய முடியும். எனவே எங்களது வீடுகளை அகற்றி கொள்வதற்கு காலஅவகாசம் வழங்க வேண்டும் மேலும் வீட்டுமனையற்றவர்கள் பற்றி முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி தகுதியானவர்களுக்கு மாற்று இடம் வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.