102 டிகிரி வெயில் கொளுத்தியது


102 டிகிரி வெயில் கொளுத்தியது
x
தினத்தந்தி 13 April 2023 12:15 AM IST (Updated: 13 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் 102 டிகிரி வெயில் கொளுத்தியது. சாலைகளில் வீசிய அனல்காற்றினால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

விழுப்புரம்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல மாவட்டங்களில் வெயிலின் அளவு சதத்தை தொட்ட நிலையில் விழுப்புரம் பகுதியிலும் கடந்த 2 வாரங்களாக வெயிலின் அளவு 97 டிகிரி முதல் 99 டிகிரி வரையில் பதிவாகி இருந்தது. கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வாடி, வதங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல் காலை முதலே விழுப்புரம் நகரில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மதிய வேளையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி 100 டிகிரியையும் கடந்து 102 டிகிரியாக பதிவானது.

இதனால் சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். மேலும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் குடைபிடித்தபடியும், முகத்தில் துணிகளை கட்டிக்கொண்டும், பள்ளி- கல்லூரி மாணவிகள், பெண்கள் துப்பட்டா மற்றும் புடவையால் தலையில் போர்த்தியபடியும் சென்றதை காண முடிந்தது.

தொடர்ந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பெரும்பாலானோர் வெளியே தலைகாட்ட முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். இதனால் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும் முக்கிய சாலைகளில் கொளுத்தும் வெயிலின் காரணமாக மக்கள் நடமாட்டம் சற்று குறைந்து காணப்பட்டது. சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அனல் காற்று வீதியதால், கானல்நீர் தோன்றியதை காண முடிந்தது.

பொதுமக்கள் அவதி

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் உஷ்ணத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். தற்போதே வெயிலின் அளவு சதத்தை தொட்டுள்ள நிலையில் கத்திரி வெயில் காலத்தில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்பதால் அதை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்று தெரியாமல் பொதுமக்கள் இப்போதே விழிபிதுங்குகின்றனர்.


Next Story