திருமணம் செய்ய மறுத்ததால் காதலனே கத்தியால் குத்திக்கொன்றது அம்பலம்


திருமணம் செய்ய மறுத்ததால் காதலனே கத்தியால் குத்திக்கொன்றது அம்பலம்
x

திருமணம் செய்ய மறுத்ததால் காதலனே கத்தியால் குத்திக்கொன்றது அம்பலம்

தஞ்சாவூர்

திருவையாறு அருகே அழகுக்கலை பெண் நிபுணர் சாவில் திடீர் திருப்பமாக அவரது காதலனே கத்தியால் குத்திக்கொன்றது விசாரணையில் அம்பலமானது. திருமணம் செய்ய மறுத்ததால் கொன்றதாக அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அழகுக்கலை பெண் நிபுணர்

தஞ்சையை அடுத்த திருவையாறு மணக்கரம்பை வி.ஆர்.எஸ். நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி செல்வி. கருத்து வேறுபாடு காரணமாக பாலகிருஷ்ணன் குடும்பத்தை விட்டு பிரிந்து தஞ்சையில் தனியாக வசித்து வருகிறார்.

இவர்களது இரண்டாவது மகள் அபிராமி(23), பியூட்டீசியனாக இருந்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னைக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்தார்.

ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்

நேற்று முன்தினம் காலை வீட்டில் அபிராமி கழுத்தில் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இது குறித்து நடுக்காவேரி போலீசார் மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

கிராம நிர்வாக அலுவலரிடம் சரண்

இந்த நிலையில் திருவையாறை அடுத்த மணத்திடல் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்கிற ராஜேந்திரன் மகன் முகேஷ்(வயது 23) என்ற வாலிபர், அபிராமியை தான் கொலை செய்து விட்டதாக கூறி மணக்கரம்பை கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கரிடம் சரண் அடைந்தார்.

அவர் முகேசை நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். நடுக்காவேரி போலீசார், முகேஷ்சிடம் விசாரணை நடத்தினார்கள், போலீசாரின் விசாரணையின்போது அபிராமியை தான் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

பரபரப்பு வாக்குமூலம்

போலீசாரிடம் முகேஷ் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நான் சென்னையில் உள்ள ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். நானும் அபிராமியும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தோம்.

திருமணம் செய்ய மறுப்பு

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அபிராமி நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அபிராமி சென்னை வந்திருந்தார். சென்னையில் இருந்து 19-ந் தேதி ஊருக்கு திரும்பி வந்தார். நானும் சென்னையில் இருந்து ஊருக்கு வந்தேன்.

அபிராமியின் தாயார் செல்வி வேலைக்கு சென்று விட்டதால் அபிராமி மட்டும் வீட்டில் இருந்தார். நான் அபிராமி வீட்டிற்கு சென்று என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரிடம் வற்புறுத்தினேன். அதற்கு அவர், என்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்து விட்டார்.

கத்தியால் குத்திக்கொன்றேன்

இதனால் எங்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நான் கத்தியை எடுத்து அபிராமியை குத்திக்கொன்றேன்.

நடந்த சம்பவத்தை எனது தந்தையிடம் தெரிவித்தேன். எனது தந்தையும் வளப்பகுடி கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவரும் புறப்பட்டு மணக்கரம்பை வந்தனர். நான் அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த சட்டையை கழற்றி எனது தந்தையிடம் கொடுத்தேன். அவரும் மகேந்திரனும் சட்டையை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்.

இவ்வாறு அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

காதலன் உள்பட 3 பேர் கைது

இதுகுறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிராமியை கொலை செய்த முகேஷ்சையும், இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த முகேஷின் தந்தை ராமலிங்கம் என்கிற ராஜேந்திரன், மகேந்திரன் ஆகிய 3 பேரையும் கைது செய்து திருவையாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story