சிவகளையில் வியாழக்கிழமை நடக்கவிருந்த கடையடைப்பு, சாலை மறியல் போராட்டம் வாபஸ்
சிவகளையில் வியாழக்கிழமை நடக்கவிருந்த கடையடைப்பு, சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஏரல்:
ஏரல் தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டதால், சிவகளையில் இன்று(வியாழக்கிழமை) நடக்கவிருந்த கடையடைப்பு, சாலைமறியல் போராட்டத்தை பொதுமக்கள் வாபஸ் பெற்றனர்.
பஸ் பிரச்சினை
ஏரல் அருகே உள்ள கீழ்ப்படாகை கஸ்பா, சிவகளை மற்றும் பராக்கிரமபாண்டி கிராம பகுதி வழியாக தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், ஏரல், நெல்லை செல்லும் அரசு பஸ்கள் காலை மற்றும் இரவு நேரங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை. இதனால் இந்த பஸ்சை நம்பி வெளியூர்களுக்கு செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு, தனியார் அலுவலக ஊழியர்கள், விவசாயிகள், வியாபாரிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
போராட்டம் அறிவிப்பு
இதனால் ஆத்திரமடைந்த கீழ்பிடாகை கஸ்பா, சிவகளை மற்றும் பராக்கிரமபாண்டி ஆகிய பஞ்சாயத்துகளை சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள் இன்று(வியாழக்கிழமை) சிவகளையில் கடைஅடைப்பு செய்து, பஸ் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.
சமாதான பேச்சுவார்த்தை
இதையடுத்து ஏரல் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கண்ணன் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நெல்லையில் இருந்து பராக்கிரமபாண்டி, சிவகளை, மாங்கொட்டாபுரம் வழியாக ஆத்தூர் செல்லும் அரசு பஸ் (தடம் எண் 136 சி), ஸ்ரீவைகுண்டத்திலிருந்து இதே வழித்தடத்தில் ஆத்தூர் செல்லும் அரசு பஸ் (தடம் எண் 68 ஏ), ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து இதே வழித்தடத்தில் தூத்துக்குடி செல்லும் அரசு பஸ் (தடம் எண் 147 டி) ஆகிய பஸ்களை சரியான நேரத்தில் முறையாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
போராட்டம் வாபஸ்
இதைதொடர்ந்து இன்று நடைபெற இருந்த பஸ் மறியல், கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக போராட்ட குழுவினர் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் பொன்ராஜா, பெருங்குளம் வருவாய் அதிகாரி விஜய் ஆனந்த், பஞ்சாயத்து தலைவர்கள் பரக்கிரமபாண்டி சரவணன், கீழ்ப்பிடாகை கஸ்பா அருண், சிவகளை பிரதிபா மதிவாணன், சிவகளை பஞ்சாயத்து துணைத்தலைவர் கைலாசம், திராவிட கழகம் மாவட்ட தலைவர் பால் ராசேந்திரம், விவசாய சங்க தலைவர் மதிவாணன் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.